மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு
1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன் ஆகியோர் வெளியிட தோழமை இயக்கத் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். (நூலின் 500 படிகளை அச்சிட்டு கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார் தோழர் அரசெழிலன்) மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி நன்றியுரை கூறினார்.
முருகேசன், வேங்கைமாறன், மது, விஜய், பரத், செல்வ குமார், மருது பாண்டி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மருத மூர்த்தி உள்ளிட்ட கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்றனர். மதுரை மாவட்டக் கழகம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்