31. கொடி இறங்கும்
ஜுலை 11-ந்தேதி சென்னைக் கார்ப்பரேஷன் கட்டடத்தின்மீது இன்று பறந்து கொண்டிருக்கும் காங்கரஸ் கொடி இறக்கப்படுமெனத் தெரிகிறது. கொடி ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. ஆனால் காங்கிரஸ்காரர்கள் தமது கொடி சாதாரண கட்சிக் கொடி அல்லவென்றும் அது தேசீயக்கொடி என்றும் கூறி வந்தனர்.
கோட்டையில் கொடி கட்டுவோம்! என தேர்தல் காலத்தில் பேசினர். ஆனால் கவர்னர் இது தேசீயக்கொடியாகாது. இது ஒரு சாதாரண கட்சிக்கொடி என்று கூறினார். காங்கரஸ் வீரர்கள் வீரத்தை வீட்டிலே பத்திரமாக மூடி வைத்துவிட்டு, கவர்னர் இருக்கும் திக்குநோக்கி தெண்டனிட்டு, சரி! சரி! துரையவர்களே. மூவர்ணக் கொடி என இனி இதை அழைக்கிறோம். வெள்ளையரின் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வேளைகளிலே இந்தக்கொடியை ஏற்ற மாட்டோம்; தங்கள் சித்தம் எமது பாக்கியம் என விண்ணப்பித்துக் கொண்டனர்.
இன்றும், இவர்கள் கூடி சட்டமியற்றும் சபையிலே இவர்கள் தலைக்கு மேலே வெள்ளைக்காரர் கொடி தான் பறக்கிறது. இதைக்கண்டும் உள்ளே இருப்பதால் தான் கவர்னர் முடுக்காக ஒரு முறை முறைத்தார். காங்கிரஸ் தலைவர்கள் திணறி விட்டார்கள். தாயின் மணிக்கொடி பாரீர்! அதைத் தாழ்ந்து பணிந்திட நித்தமும் வாரீர் என்ற பாட்டெல்லாம் பறந்தது! எமது கொடியை சென்னைக் கோட்டைமீது பறக்க விடுவோம் என்ற பேச்சு மலை ஏறிப்போச்சு!
கவர்னர்கள், எமது மந்திரிமாரைக் கண்டால் நடுங்குகிறார்கள். அவர்கள் காட்டும் இடத்தில் கையெழுத்திடுகிறார்கள் என்று பேசிய பெருமை பொய்த்தது.
ரோஷமாக வாழுகிறார்களா?
இதை ஏன் சொல்லுகிறோமென்றால் காங்கிரஸ் மந்திரிகள், கவர்னரின் வார்த்தைகளுக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு, வீரத்தை விட்டு வேலை செய்கிறார்களே யன்றி ரோஷமாக வாழுகிறார்கள் என்று யாராவது நம்பிக்கொண்டிருந்தால், அது தவறு என்பதை எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.
இதைப்போலவே கவர்னர் குறுக்கிட்ட காலத்திலெல்லாம் சுயமரியாதையை மறந்துதான் காங்கிரஸ்காரர்கள் வாழுகிறார்கள்.
காங்கிரஸ்காரரின் வீரமெல்லாம், உள்நாட்டிலுள்ள நம்மவர் மீது வீசப்படுகிறதே யல்லாமல், வெளிநாட்டவனும், நமது நாட்டை ஆள்பவனும், ஏகாதிபத்ய வாதியுமாகிய வெள்ளையன்மீது செல்லுவதில்லை.
இதற்குக்காரணம், பதவி மீது மோகம் உண்டாகி, இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, பிரிட்டிஷ்ராஜாவுக்கும் அவர் சந்ததிக்கும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு ஒழுங்காக, பயபத்தியுடன் நடக்கிறோம் என ராஜ விசுவாசப் பிரமாணம் எழுதிக் கொடுத்துவிட்டு, சட்ட சபைகளில் ஒட்டிக் கொண்டிருப்பதேயாகும். ஆசை அதிகமானால் வெட்கம் இராது. வெட்கங்கெட்டால் வீரம் ஏது?
வெள்ளையரிடம் காட்டட்டும் இவர்கள் தீரத்தை
கொடி விஷயத்தில், கவர்னர் ஒரு மிரட்டு மிரட்டியதும், சுருட்டிக்கொண்ட வீரர்கள் அதே கொடி விஷயமாக, முஸ்லிம் லீக்கும், நீதிக் கட்சியும், நாட்டிலுள்ள வேறு பல கட்சிகளும், ஏதாவது யோசனை சொன்னால் மட்டும், கோபம் காங்கிரஸ்காரருக்கு பொங்கி வழியும். நம்மவர் மீது காட்டும் கோபத்தை, வெள்ளையர் இருக்கும் பக்கமாகக் கூடத்திருப்ப இவர்களுக்குத் தீரம் இருப்பதில்லை!
எப்படி இருக்க முடியும்? கவர்னர், இவர்களின், நண்பர்?வழிகாட்டி? ஞானாசிரியர் காந்தியார் சொற்படி பார்ப்பின், வெள்ளைக்கார ஏகாதிபத்தியமும் காங்கிரசும் நேசமாகி விட்டன ஆகவே, நமது வீரத்தையெல்லாம், உள்நாட்டிலுள்ள தோழர்கள் மீது காட்டிவந்தனர்.
இதுவும் எத்தனை நாளை நடக்கும்! நாட்டிலே இவர்களுக்கு எதிர்ப்பு, மூலைக்கு மூலை கிளம்பிவிட்டது. முஸ்லிம் லீக்கின் பலம் மேலோங்கி வளரலாயிற்று. வடநாட்டில் வந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் முறியடிக்கப்பட்டது. லீக்கின் பிறைக்கொடி எங்கும் மின்னிற்று.
சென்னை கார்ப்ப ரேஷனிலோ வெனில், எம்மைக் கேட்பவர் யார்? என்று ஆரம்பத்தில் கூறி காங்கிரஸ் காரர், இந்த ஜஸ்டிஸ் கட்சியாரின் தொல்லை பொறுக்க முடியவில்லை என்று கதறும்படி ஆகிவிட்டது. பல கட்சிகள் உள்ள இடத்திலே, உங்கள் கட்சிக் கொடிகள் மட்டும் ஏன்? என்று தோழர் பாசுதேவ் கேட்டார். காங்கிரஸ்காரருக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. இவர்களின் கோபம் வளர வளர, நீதிக்கட்யும் வளர்ந்துகொண்டே வந்தது. இவ்வாண்டு கார்ப்பரேஷன் தேர்தல் நடத்தப்பட்டால் காங்கிரசுக்கு இன்று உள்ள பொய் கௌரவமும் போய் மூலையில், அந்த நாளில் சர்.தியாகராயர் முதலியோர் வீற்றிருந்ததைப் போன்ற காட்சியைக் காண்போம்.
இம்முறை தேர்தலை நடத்துங்கள். உங்கள் கொடி தானாகக் கீழே இறங்குகிறது பாருங்கள் என, தோழர் பாசுதேவ் கடற்கரையில் கர்ஜித்தார்.
சாக்கு சொல்ல வசதி
இடையே, காந்தியாருக்கே ஒரு யோசனை வந்துவிட்டது. காங்கிரஸ் கொடிக்கு எதிர்ப்பு பலமாவதைக் கண்டு கொண்டார். ஆக்கிலத்திலே ஒரு பழமொழியுண்டு வீரத்தைவிட யூகமே மேல், என்று. அம்முறையைக் கையாண்டு, காந்தியார், ஒருவர் எதிர்த்த போதிலும், கொடி பறக்க விடவேண்டாம் எனக் கட்டுரை எழுதி விட்டார். அவர் உத்திரவு கிடைத்தது, காங்கிரஸ்காரருக்கு ஒருவரம் போலாயிற்று. எதிரிகளுக்குப் பயந்து நாங்கள் கொடியை இறக்கவில்லை. காந்தியார் சொல்லியே தான் செய்கிறோம் என்று சாக்குகொல்லுவதற்கு சௌகரியம் கிடைக்கிற தன்றோ!
எந்த சாக்கைக் கூறியபோதிலும் நமக்குக் கவலையில்லை. காந்தியாரும் பிறரும், தமது கட்சியின் கொடிக்கு நாட்டிலே எதிர்ப்பு பலமாக இருப்பதை உணர்ந்துகொண்டு புறமுதுகிட்டு ஓடுவதே போதும். மீசையில் மண்படவில்லை என்று கூறிக்கொள்வதானால், நமக்கென்ன?
கார்ப்பரேஷன் மீதுள்ள காங்கிரஸ் கொடி இறக்கப்பட்டால் நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம் என்று ஜுலை 2-ந்தேதியே கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னை கொத்தவால் சாவடியில் பேசியுள்ளார்.
ஜுலை 4-ந்தேதி நடந்த கார்ப்பரேஷன் கூட்டத்திலே மேயர் தோழர் வெங்கடசாமி நாயுடுவும், ஜுலை 11-ந் தேதி சகலகட்சியாருக்கும் திருப்தி அளிக்கும் விதத்திலே கொடிப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிடிவாதம் குறைகிறது
எனவே, கொடி விஷயமாக காங்கிரஸ்காரர் இதுவரை காட்டிவந்த பிடிவாதம் குறைகிறது.
இதைப்போலவே வந்தேமாதரப்பாட்டு விஷயத்திலும், வீண்வம்பை முதலில் காங்கிரஸ் காரர்கள் வளர்த்துக் கொண்டனர். சென்னை சட்டசபையில் வந்தேமாதரம் பாடப்பட்டதை முஸ்லீம்கள் எதிர்த்தபோது முதலில் காங்கிரஸ்காரர்கள் காட்டிய பிடிவாதம் கொஞ்ச நஞ்சமல்ல.
30, 40 வருஷமாக நாட்டிலே உள்ள தேசீயப் பாட்டையா விடுவோம் என்றம், வந்தே மாதரத்தை விட்டுவிட்டால் காங்கிரசே அழிந்தது போல்தான் என்றும், கனம் ராஜகோபாலாச்சாரியார் கூறினார்.
ஆனால் முஸ்லீம்கள் விடுவார்களா? அரம்பித்தனர் கிளர்ச்சியை! கண்டார் ஆச்சாரியார், கைகழுவி விட்டார்! வந்தேமாதரம் நின்றேவிட்டது.
இன்றுகூட காங்கிரஸ் வாதிகள் வேண்டுமானால் வந்தே மாதரத்தின் வனப்பைப் பற்றிப் பிரமாதமாகப் பேசலாம். அனால் அந்தக் கீதம், முஸ்லிம்கள் மீது வீணான துவேஷத்தையும், வெறுப்பையும் கிளப்பிவிடக்கூடியது என்பதை நாம் அன்றும் சொன்னோம் இன்றும் கூறுகிறோம் ஆதாரத்துடன், அப்படிப்பட்ட பாட்டை, இனி ஒருவர் வேண்டாமென்றாலும், பொதுக்கூட்டங்களிலும் பாடக்கூடாது என காந்தியார் கூறியுள்ளார். இதனைக் காங்கிரஸ் தோழர்கள் கவனிப்பார்களாக.
இவ்விரண்டு விஷயங்களில் பிடிவாதம் குறைந்தது போலவே, இனி கட்டாய இந்தி விஷயத்திலும் சர்க்கார் தமது பிடிவாதப் போக்கை மாற்றிக்கொண்டாக வேண்டும். தலைவரையும் தொண்டர்களையும் விடுவித்து விட்டால் இந்திப் போர் நின்று விடும் என எண்ணிய எண்ணத்தில் நித்த நித்தம் சிறை செல்லும் தமிழ்வீரர்கள் பிடிமண் போட்டுக்கொண்டே வருகிறார்கள். ஆகவே வீணான வறட்டு தைரியத்துடனும், போலி கௌரவத்தில் பிரேமை கொண்டும், இந்தி கட்டாயமெனும் இடுக்கான போக்கை நீடித்து வைக்காமல், நிலைமையை உணர்ந்து அதனை எடுத்துவிடுவதுதான் அறமாகுமென்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
தமது பிடி தளர்வதனால்தான் கொடி இறக்கப்படுகிறது. ஆகவே இனியேனும் நிலைமையை உணர்ந்து இந்தி விஷயத்திலும் கொடி, கீதம் ஆகியவற்றில் தமது யூகத்தை காட்டியது போலக் காட்டவேண்டுமென சர்க்காருக்குக் கூறுகிறோம்.
குடிஅரசு, தலையங்கம் – 09.07.1939