12. காங்கிரஸ் கொடுங்கோலாட்சி
பேச்சுச் சுதந்தரம், கூட்டச் சுதந்தரம், எழுத்துச் சுதந்தரம், அபிப்பிராய சுதந்தரம் முதலியவை களைப் பெறுவதற்காகவே போராடுவதாக காங்கிரஸ்காரர் தேர்தலுக்கு முன் சொல்லிக்கொண்டார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலே மக்கள் இந்த சுதந்தரங்களையெல்லாம் இழந்து திண்டாடியதாகவும் காங்கிரஸ்காரார் பொய் பிரசாரம் செய்தார்கள். காங்கிரஸ்காரருக்கு ஏராளமான பத்திரிகைகளும் பிரசாரர்களும் இருந்ததினால் அவர்கள் செய்த பொய்ப் பிரசாரங்களை பாமர ஜனங்கள் மெய்யென நம்பினார்கள். காங்கிரஸ்காரர் சட்ட சபைகளைக் கைப்பற்றி பதவி ஏற்றால் மக்கள் எல்லா சுதந்தரங்களையும் வெகு சுளுவாகப் பெற்றுவிடுவார்கள் என நம்பி வாக்காளர்கள் சென்ற தேர்தலில் மஞ்சள் பெட்டியை நிரப்பினார்கள். அதன் பயனாய் 7-மாகாணங்களில் காங்கிரஸ்காரர் மந்திரி சபையும் ஸ்தாபித்தார்கள். காங்கிரஸ்காரர் பதவி வகிக்கும் மாகாணங்களிலே காந்தி ராஜ்யம் ? ராமராஜ்யம் ? தர்ம ராஜ்யம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. காந்தியார் அஹிம்சா மூர்த்தி யல்லவா? எனவே அஹிம்சா தர்மப்படியே காங்கிரஸ் மந்திரிகள் நிருவாகம் நடத்துகிறார்கள் என பாமர ஜனங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
காங்கிரஸ் ராஜ்ய யோக்கியதை
ஆனால் உண்மை நிலை என்ன? எல்லாம் தலைகீழ் தர்பார் தான். அஹிம்சா மூர்த்தியான காந்தி சீடர்கள் மந்திரிகளாக இருக்கும் மாகாணங்களிலே துப்பாக்கிப் பிரயோகங்கள் தாராளமாக நடைபெறுகின்றன. தொழிலாளர் தாட்சண்யமின்றி சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். 144 தடையுத்தரவுகள் தாண்டவமாடுகின்றன. பொதுக்கூட்டங்கள் தடுக்கப்படுகின்றன. பேச்சுச் சுதந்தரம் மறுக்கப்படுகிறது. ராஜ துரோகமே காங்கரஸ்வாதிகள் வெட்கப்படவோ பயப்படவோ கூடாது என மாஜி காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் பகிரங்கமாகக் கூறி வந்தும் காங்கிரஸ் மாகாணங்களிலே ராஜதுரோக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் மந்திரிகளுக்கு வேண்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் ரத்து செய்யப்படுகின்றன. காங்கிரஸ்வாதிகள் மீது தொடுக்கப்படும் வழக்குகள் வாபீஸ் வாங்கப்படுகின்றன. தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! எனக்கூறும் இந்தி எதிர்ப்பாளருக்கு நீண்ட கால கடுங்காவல் தண்டனையும் பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படுகின்றன. இந்தி எதிர்ப்பாளர் கூட்டங்களில் காங்கிரஸ்காரர் புகுந்து பகிரங்கமாகக் கலாட்டாச் செய்து கூட்டத்தைக் கலைக்கிறார்கள். நியாய உணர்ச்சியுடைய போலீஸார் கூட்டத்தில் குழப்பம் செய்யும் காங்கிரஸ்காரர் மீது வழக்குத் தொடுத்தால் காங்கிரஸ் மந்திரிகள் தலையிட்டு அவ்வழக்குகளை வாபீஸ் வாங்கும்படி தூண்டுகிறார்கள். இந்நிலையில் எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் மாகாணங்களிலே இடமெங்கே? அவர்களுக்குப் பேச்சு சுந்தரமில்லை; கூட்டச் சுதந்தரமில்லை; அபிப்பிராய சுதந்திரமில்லை. இந்நிலையில் காங்கிரஸ் ராஜ்யம் காந்திய ராஜ்யமாகும்? ராமராஜ்யமாகுமா? தர்ம ராஜ்யமாகுமா?
பூரண ராமராஜ்யம் வந்தால்?
காங்கிரஸ்காரர் கோரும் ராமராஜ்யத்தின் நிழல் தான் இப்போழுது கிடைத்திருப்பதாக காங்கிரஸ்காரர் கூறுகின்றார்கள். காங்கிரஸ் ராமராஜ்யத்தின் நிழலே இத்தன்மையதானால் பூரண ராம ராஜ்யத்தின் யோக்கியதை எவ்வாறு இருக்குமெனக் கூறவும் வேண்டுமா? பவானியிலே தமிழர் பக்கப் பத்திரிகைகள் விற்கும் ஏஜண்டை காங்கிரஸ்காரர் கொடுமைப்படுத்துவதாகத் தெரிய வருகிறது. அது மூலம் பவானியிலே தமிழர் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்களுக்குப் பெரிதும் மனக்கொதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இந்த அட்டூழியங்களை அடக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாயும் தெரியவில்லை. பொதுவாகப் போலீசார் நடு நிலைமை வகித்து வந்தாலும் சில இடங்களில் போலீசார் காங்கிரஸ்காரருக்கு உடந்தையாக இருந்துகொண்டு தமிழர் இயக்கத்தாரைக் கொடுமைப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. நானும் காங்கிரஸ்காரனே. கூட்டத்தில் கூச்சல் போடுகிறவர்களை என்னால் அடக்கமுடியாது என ஒரு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பகிரங்கமாகக் கூறியதை நாம் முன்னர் விளக்கிக் கூறியிருக்கிறோம். ஜனநாய ஆட்சியிலே போலீசாரும் மாஜிஸ்டிரேட்டுகளும் நீதிபதிகளும் நடு நிலைமை வகிக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். எக்கட்சியார் மந்திரி பதவி வகித்தாலும் போலீசாரும் நீதிபதிகளும் சட்டப்படி நடக்க வேண்டியதே முறை. அவ்வாறின்றி அதிகாரப் பதவி வகிக்கும் கட்சியாருக்கு அவர்கள் சலுகை காட்டினால் ஜனநாயகம் அர்த்தமற்றதாகி விடும். அத்தகைய ஜனநாயகத்தை விட குடிஅரசு அல்லது யதேச்சாதிகார ஆட்சியே மேலென்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் ஜனநாயக ஆட்சி நடத்துகிறோம், காந்தி ராஜ்யம் நடத்துகிறோம், ராமராஜ்யம் நடத்துகிறோம் எனக்கூறி வரும் காங்கிரஸ்காரர் யதேச்சாதிகார ஆட்சி நடத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
பெரியார் விஷயம்
மற்றும் பெரியார் விஷயத்தில் காங்கிரஸ் சர்க்கார் நடந்து வரும் முறை நாகரிக மக்களால் ஆதரிக்கக்கூடியதாக இருக்கவில்லை. 61வது வயதிலே கடுந்தண்டனைக்கு ஆளாகி சென்னைச் சிறையிலிருந்து வந்த பெரியார் சிறைவாழ்வும் சிறை உணவும் பிடியாமல் நோய்வாய்ப்பட்டார். ஆகவே அவரிடம் சொந்த ஜாமீன் வாங்கிக்கொண்டு காங்கிரஸ் சர்க்கார் தற்காலிகமாக விடுதலை செய்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள். தற்காலிகமாக விடுதலை செய்வோரை ஆஸ்பத்திரியிலிருக்கும் போதாவது சுதந்திரராக விடுவதே முறை. ஆனால் அந்தப்பெருந்தன்மை ஆச்சாரியார் சர்க்காருக்கு இல்லாமல் போய்விட்டது ஆஸ்பத்திரியிலும் பெரியாருக்கு போலீஸ் காவல் போடப்பட்டது. அவரைப் பார்க்கச் செல்வோருக்கு அனுமதியளிக்கப் படவில்லை. அவருக்குத் தேவையான உதவிகள் செய்ய சொந்த ஆள் பக்கத்தி லிருக்கவும் சர்க்கார் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் பெரியார் 10 முறை எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டார். அப்ப சோதனைகளின் பயனாய் வயிற்றில் கட்டி, புண் முதலிய கோளாறுகள் இல்லையென்றும் வயிறு பெருத்திருப்பதால் குடல் தளர்ச்சியடைந்து ஜீரணக் கருவிகள் சரிவர வேலை செய்யாததினாலேயே உணவு ஜீரணிக்கும் பொழுது வயிற்றில் வலியேற்படு கிறதென்றும் டாக்டர்கள் அபிப்பிராயப்பட்டதாகத் தெரிய வருகிறது. அஞ்சத்தக்க கோளாறுகள் பெரியாருக்கு இல்லாவிட்டாலும் ஒரே ஒருவேளை உணவுண்டு வருவதாலும் அதுவும் சரியாக ஜீரணியாமலிப்பதாலும் பெரியார் எடையில் 10 பவுண்டு குறைந்திருப்பதாயும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரை ஜாக்கிரதையாகக்கவனிக்க வேண்டியது காங்கிரஸ் சர்க்கா கடமைல்லவா? அவரது தள்ளாத பருவத்துக்கேற்ற வசதிகளளிக்க வேண்டியது தர்மமல்லவா? இவ்வளவு வருந்தத்தக்க, இரக்கத்தக்க நிலைமையிருக்கும் பெரியாரை ஒரு காரணமுமின்றி பெல்லாரிச் சிறைக்குத் திடீரென மாற்றுவதென்றால் இதை யாரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? பெல்லாரி வெப்பம் பொருந்திய பிரதேசம்; சுத்தமான குடி தண்ணீர் கிடையாதாம். ஆந்திர நாடு ஆகை யினாலேயே ஆந்திரர்களின் உணவு முறையும் பெரியாருக்கு ஒத்து கொள்ளாது. சென்னைச் சிறையிலிருந்தால் அவருக்கு வேண்டியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்துக்கொள்ள வசதியுண்டு; அவரது உடல் நிலையை அவ்வப்போது பொது ஜனங்கள் தெரிந்துகொள்ளவும் சௌகரியமிருக்கும்.
பெல்லாரிச்சிறையிலிருக்கும் பெரியார் உடல் நிலையை தென்னாட்டார் எப்படி அறிவது? பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அநாதையல்ல; 2 1/2கோடி தமிழர்களின் பிரதிநிதி; 2 1/2 கோடி தமிழர்களின் விடுதலைக்காகவே அவர் சிறையில் தவம் கிடக்கிறார். அவருடைய சுக துக்கங்களில் 2 1/2 கோடி தமிழர்களுக்கும் பங்குண்டு. பெரியார் காலில் முள்தைத்தால் 2 1/2 கோடி தமிழர்களும் தம் காள்களில் முள் தைத்ததுபோல் வருந்துவார்கள். பெரியார் சிறையில் படும் கஷ்டங்களை எண்ணி 2 1/2 கோடி தமிழர்களும் சதா இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிhறர்கள். பெரியார் பெல்லாரிச் சிறைக்கு மாற்றப்பட்டதையறிந்தால் இந்த 2 1/2கோடி தமிழர்களும் புழுவாய்த் துடிப்பார்கள் என்பது நிச்சயம். நானும் ஒரு தமிழனே என மார்தட்டிக் கூறும் கனம் ஆச்சாரியார் 2 1/2 கோடி தமிழர் மனமும் புண்படும்படிசெய்வது நேர்மையாகுமா? நீதியாகுமா? தர்மமாகுமா? மனிதத்தன்மையாகுமா? பெரியாரை வசதியான இடத்தில் வைத்திருப்பதினால் யாருக்கு என்ன நஷ்டம்? காசு பணம் செலவில்லாத உதவியாவது பெரியாருக்கு காங்கிரஸ் சர்க்கார் செய்யவேண்டாமா? காங்கரஸ் சர்க்கார் புத்தி இவ்வாறு கெட்டுப்போகக்காரணம் என்ன? பழிக்குப் பழி வாங்கும் முறையில் பெரியாரை நடத்துவதினால் தமிழர் இயக்கத்தை வெகு சுளுவில் ஒடுக்கி விடலாமென்பது காங்கிரஸ் சர்க்கார் எண்ணமா? பெரியாரைக் கஷ்டப்படுத்துவதினால 2 1/2-கோடித் தமிழர்களையும் வலியச் சண்டைக்கு அழைப்பதை கனம் ஆச்சாரியார் உணரவில்லையா? வீர நடராஜன் சிறுவயதிலே அகாலமரண மடைந்ததை எண்ணி மனம் புண்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கும் 2 1/2-கோடி தமிழர் மனம் ஆறும் முன்பு பெரியாரை சிறை மாற்றி புண்பட்ட தமிழர் உள்ளத்தை கோலிட்டுக் கிண்டுவது கருணையாகுமா? வாஸ்தவத்தில் ஆச்சாரியார் போக்கு மிகவும் மோசமான போக்காகவே இருக்கிறது. இதனால் என்ன பயன் விளையப்போகிறதோ யார் கண்டார்கள்?
குடிஅரசு, தலையங்கம் -26.2.1939