24. செத்த வாழ்வு வாழ்வதா?
சர்வாதிகாரம் என்றால் ஒரே அரசியல் கொள்கை, அதை வற்புறுத்த ஒரே கட்சி, அந்தக் கட்சியிலும் ஒரே தலைவர், அவருடைய இரகசியமான சிறு கூட்டமொன்று, குற்றேவல் புரிய மற்றொரு பெருங்கூட்டம், அந்த தலைவரின் கீதம் பாடி, விளம்பரப்படுத்தி, பிரச்சார பலத்தால் மக்களைக் கட்டிப்போடுவதும், எதிர்ப்பு எங்கு இருப்பினும், கட்சிக்குள்ளாகவே தோன்றினும் நீதி நியாயம் நேர்மை எதையும் கவனியாது உடனே நசுக்கிப் பொசுக்குவதும், சட்டங்கள் இயற்றுவதிலும் அடக்கு முறை போடுவதிலும், வரிகள் விதிப்பதிலும், பொது மக்களைக் கலக்காமலும், அவர்கள் கொதிப்பைப் பொருட்படுத்தாமலும், நடப்பது ? இவைகளே சர்வாதிகாரியின் இலட்சணங்கள். இந்த சர்வாதிகாரம், ஆயுத பலத்தோடு இருந்தால், அது பாசீசம், நாசீசம் என இன்று ஐரோப்பியரால் அழைக்கப்படுகிறது. ஆயுத பலமின்றி, மக்களின் மனதை மயக்கி நடத்தப்படும் சர்வாதிகாரத்திற்கு இந்தியாவே தலைசிறந்த உதாரணம். காந்தியாரே அத்தகைய சர்வாதிகாரி.
சர்வாதிகாரிக்கு ஒரே கட்சி. தன் கட்சி மட்டுமே தான் நாட்டில் நிலைக்க வேண்டுமென்பது அவா. ஏன்? வேறு கட்சியும் நாட்டில் இருந்தால் தனது கட்சியின் போக்கில் காணக்கிடக்கும் குறைபாடுகளை, கோளாறுகளை, எதிர்கட்சிக்காரர்கள் எடுத்துக்கூறிவிட்டால் தனது கட்சியின் குட்டுவெளிப்பட்டு தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்ற அச்சம் சர்வாதிகாரிக்கு சதா இருக்கும். ஆகவேதான் வேறு எந்த கட்சியும் நாட்டில் இருக்க, சர்வாதிகாரி ஒப்புவதில்லை. தனக்கு அதிகாரம் கிடைத்த உடனே எங்கேனும் ஒரு சிறு கூட்டமாயினும் தனக்கு எதிரிடையாக இருக்கிறதெனத் தெரிந்தால் உடனே அதனை ஈவு இரக்கமின்றி நசுக்கிவிடுவான். ஹிட்லர், ஜெர்மனிக்கு சர்வாதிககாரியானவுடனே எதிர்ப்புக் கட்சிகளை அடியோடு ஒழிப்பதையே முதல்வேலையாகக்கொண்டான். ஒரே அடியில் எல்லா அரசியல் கட்சிகளையும் கலைத்துவிட்டான். பிறகுதான் ஜெர்மனியில் கொலுவீற்று, தர்பார் நடத்தலுற்றான். அதைப்போலவே இத்தாலியில் முசோலினியும் செய்தான். அந்த முறைதான் நமது நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டு சர்வாதிகாரியிடம், துப்பாக்கியும், வெடிகுண்டும் கொடுக்கப்பட வில்லை யாகையினால்அந்த ஆயுதங்களை இன்று வரை உபயோகப் படுத்துவதில்லை. ஆனால், அந்த ஆயுதங்களை விட, மிகப் பொல்லாத ஆயுதங்கள், காந்தியாரிடம் உள்ளன. வெடிகுண்டு ஆளைக்கொல்லுமேயல்லாமல், எண்ணத்தைக் கொல்வதில்லை. ஒரு ஆள், தனது சொந்த அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது என்று கண்ட முடிவுகளை, ஒருவர் சொல்லுக்காக, பூச்சாண்டிக்காக மாற்றிக்கொண்டு வாழுவதைவிட, அவர் இல்லாமற் போவதே மேல். ஆகவே தான் ஆளைக்கொல்லும் ஆயுதங்கள் அவ்வளவு கெட்டனவல்ல என்று கூறுகிறோம். காந்தியார் வீசும் ஆயுதங்களான ஆத்மீகம், அந்தராத்மா, தேசீயம், உண்ணாவிரதம், தரித்திர நாராயண தத்துவம் ஆகியவைகள், ஆளைக்கொல்லாது, அவனது எண்ணங்களைக் கொல்கின்றன. ஆகவே ஹிட்லரின் வெடிகுண்டு செய்யக்கூடிய காரியத்தைவிட அதிகக்கேட்டை இந்த சர்வாதிகாரம் செய்துவிடுகிறது. எதிர்கட்சிக்காரரைப்பற்றி கேவலமாகவும், மோசமாகவும் தூற்றி, மக்களின் மனதில் குரோத, துவேஷ எண்ணங்களை வளர்த்தும், நாட்டின் அடிமைத் தனத்திற்கு, மற்றைய கட்சிகளே காரணமெனக் கயறு திரித்தும், எதிர் கட்சிக்காரரை ஒடுக்கவைப்பதும் எதிர் கட்சிப் பிரமுகர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, மயக்கி கட்சிக் கூட்டங்கள் நடக்கவொட்டாதபடி காலித்தனத்தைத் தூண்டிவிட்டும், நடக்கும் காலித்தனத்தை ஒடுக்க சட்டம் துணைக்கு வந்தாலும் அதையும் மீறி காலிகளுக்குத் துணைபுரிவதும், இந்த நாட்டு சர்வாதிகாரத்தின் போக்காக இருக்கிறது.
நமது மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கவேண்டுமென அதை வகுப்புவாதக் கட்சி, ஜெமீன்தாரர் கட்சி, குலாம் கட்சி என்று பழித்து அதனுடைய தலைவர்களை இழித்துக்கூறி அதை ஒடுக்க காங்கிரஸ் சர்வாதிகாரம் அநேக வருஷங்களாகப் பாடுபட்டு சென்ற தேர்தலிலே ஒருவாறு தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது. எனினும், சவக்குழியில் தள்ளப்பட்டாலும் அந்தக் கட்சி எழுந்துவிட்டதோடு காயகல்பம் சாப்பிட்டதுபோல இன்று மிக வல்லமையுடனேயே உலவிவருகிறது. ஆகவே, மறுபடியும் காங்கிரஸ் சர்வாதிகாரத்தின் கண்பார்வை அதன்மீது பாய்கிறது.
மற்றொரு எதிர்கட்சியான முஸ்லீம் லீக் இதுவரை எந்த சரித்திரத்திலும் கேள்விப் படாத விதத்திலே மிக விரைவாக உச்சநிலைக்கு வந்துவிட்டதோடு காங்கிரஸ் கட்சியும் கலக்கத்துடன் பார்க்கவேண்டிய உயர்வையும் மதிப்பையும் பெற்றுவிட்டது.
இந்த எழுச்சியைக் கண்ட சர்வாதிகாரம் தனக்கு இன்று கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு நமது கட்சிகளை கருவறுக்க வேண்டுமென திட்டம் போட்டுக்கொண்டு வேலை செய்து வருகிறது.
மேடை, காங்கிரஸ் கட்சியின் சொந்த ஆயுதமாகவே இருந்து வந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி மேடையை இழந்து விட்டதென்றே சொல்லலாம். பத்திரிகை பலம் கொண்டு நமது கட்சியை பழித்தும் இழித்தும் எழுதுவதன் மூலம் ஒழித்துவிடலாமென, மனப்பால் குடித்தது. அதுவும் வீண் வேலையாகவே முடிந்தது. நமது கட்சிக்குள் குழப்பங்களையும், குட்டிக் கலகங்களையும், உற்பத்தி செய்து, அதனால் நமது கட்சியின் நரம்பை நெறிக்கலாம் என எண்ணி வேலை செய்து அதிலும் தோற்றுவிட்டது. எனினும், இந்தச் செயலை மட்டும் மீண்டும் மீண்டும் செய்து பார்க்காமலிராது. அடக்கு முறைக்கொண்டு நமது கிளர்ச்சிகளை ஒழித்தவிடலாமென எண்ணி, வேலைசெய்து பார்த்தது. ஆனால், அறைக்க அறைக்க சந்தனம் கமழ்வதைப்போல, அடக்குமுறை ஒருபடி உயர்ந்தால் கிளர்ச்சி ஒன்பது படி உயரலாயிற்று. ஒரு தொண்டன் கைது செய்யப்பட்டால், ஒன்பது தொண்டர்கள் முன் வரலாயினர். ஒரு பாரதியாரும், ஒரு ஈ.வெ.ராவும் தான் கிளர்ச்சி செய்கின்றனர் என்று கூறிய கனம் ஆச்சாரியார், அதேவாயினால், புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் தொண்டர்கள் வருகிறார்கள் என்று கூறும் அளவிற்குக் கிளர்ச்சி வலுத்துவிட்டது. நாட்டில் இவர்கள் பேச்சை யார் கேட்கிறார்கள்? இவர்களுக்குச் செல்வாக்கு ஏது? என்று கூறி வந்தது மாறி நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கெல்லாம், கண்டனங்கள், கடையடைப்புகளுக்கெல்லாம் இவர்களே காரணம் என்று கூறவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆச்சாரியாரை நிலைமை கொண்டுவந்து விட்டது.
காங்கிரஸ்காரர், முப்பது வருஷமாகக் காறி உமிழ்ந்த எச்சிலும், சொரிந்த கண்ணீரும் நிரம்பிய, கிரிமினல் சீர்திருத்த, சட்டத்தை அருவருப்பின்றி கூசாது விதியை நொந்து கொண்டே, ஆச்சாரியார் எடுத்துத்தமிழர் மீது வீசவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
சி.ஜ.டிக்கள் இருப்பது பேச்சு சுதந்தரத்தைக் குலைப்பதாகும். அவர்கள் இராம இராஜ்யத்தில் இருக்க மாட்டார்கள் என்று சொன்னது மாறி, இராம ராஜ்யத்திலுங்கூட சி.ஜ.டிக்காரர் இருந்தே தீரவேண்டும் என்று சொல்லவேண்டிய அளவு எதிர்ப்பு வளர்ந்து விட்டது.
இந்த சமாளிக்கக் கஷ்டமான நிலைமையில், சின்னஞ்சிறு சூழ்ச்சி ஒன்று நடந்து வருவதாக நாம் யூகிக்க வேண்டி இருக்கிறது. நமது இயக்கக்கூட்டங்கள், மக்கள் மனதை மாற்றுவதை மாற்றார் நன்கு தெரிந்துகொண்ட காரணத்தால், எப்படியாவது நமது கூட்டங்களைத் தடைப்படுத்தினால் தான் தங்களுடைய சிதறிப்போன செல்வாக்காவது நிலைக்க முடியும் என எண்ணி, நமது கூட்டங்களினால், பலாத்காரம் வளருவதாகவும், கலவரம் ஏற்படுவதாகவும், சேதிகளைப் பரப்பி தடையுத்தரவுகளை (144) பிறப்பித்து நமது கூட்டங்கள் நடக்க வொட்டாதபடி செய்வதாகத் தெரிகிறது. கனம் ஆச்சாரியார் இன்று தாராளமாக வீசும் 124, 153, 7ஏ முதலிய செக்ஷன்களும், சி.ஜ.டி., பத்திரிகை ஜாமீன் அபராதம், அபராதத்திற்காக மோட்டார் பறிமுதல் ஆகியவைகள் போதாதெனவும் அடியோடு இயக்கத்தை ஒழிக்க, கடுமையான நடவடிக்கை எடுத்தாகவேண்டுமென்றும், ஆச்சாரியாருக்கு அவரின் சீடர்கள் யோசனை கூறும் அளவு, இயக்கம் ஓங்குகிறது. இயக்கம் யாரால் நடத்தப்படுகிறது? தலைவர் சிறையிலுள்ளார்? அவர் பணியைத் தொடர்ந்து நடத்திய அவரது அண்ணாரும் சிறைசென்று விட்டார். பணமோ இல்லை. பத்திரிகையோ சர்க்காரிடம் ஜாமீன் பணம் 3000 கட்டி நடக்கிறது. பிரச்சாரமோ, குறைவு, போதிய ஆட்களில்லை. எனினும் காங்கிரசுக்கு எதிரிடையான மனப்பான்மை மட்டும் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டே வருகிறது. இதை உணர்ந்து போக்கைமாற்றி அமைக்காதிருப்பது, சர்வாதிகாரத்தையே காட்டுகிறது.
அடக்கு முறையினால் இழந்த அன்பை திருப்பிப்பெற முடியாது.என்று சட்டசபையில் வந்தே மாதரம் பாடப்பட்டதோ, அன்றே முஸ்லிம்களின் அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று தாய்மார்கள், தமிழ்த்தொண்டு காரணமாக மறியல்காரர் என்ற முறையிலே கைது செய்யப்பட்டனரோ அன்றே தமிழர்களின் கொதிப்பு பலப்பட்டு விட்டது.
தீண்டாமை ஒழிக்க சாக்குபோக்குகள் சொல்லப்பட்டு வருவதன் காரணமாக, தீண்டாதாரின் கொதிப்பு அதிகமாகி விட்டது.
என்ன சொல்லியும், எத்தனை முறை கடையடைப்பு செய்தும், கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், விற்பனைவரி வந்தே தீரும் எனக் கூறியதும் வியாபாரிகளின் எதிர்ப்பு நிலைத்து நிற்கிறது.
எனினும் பிடிவாதம் குறையவில்லை! போக்கு மாறவில்லை.
இதுதான் சர்வாதிகாரத்தின் போக்கு. இந்த சர்வாதிகாரப் போக்கு எந்த அளவிற்குச் சென்றுவிட்டது? எண்ணவே நெஞ்சு திடுக்கிடும் அளவிற்குச் சென்றுவிட்டது.
ஜெர்மனியில், நாசிக்கட்சியின் போக்கில், அதிருப்தியை யாரேனும் கொண்டிருப்பதாக ஹிட்லருக்குத் தெரிந்தால் போதும், அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். கொடுமை கொடுமை! ஈதென்ன கொடுஞ்செயல் என அறிவாளிகள் கலங்குகின்றனர்.
ஆனால் காங்கரசிலேயோ ஜெர்மனிக் கொடுமையினும் பெருங்கொடுமை நடந்தது.
ஜெர்மனியில் ஆள் சவமானார். இங்கு வீரர் கோழை எனவும், அறிவாளி அவசரக்காரரெனவும், தேசபக்தர் தேச விரோதி எனவும் தூற்றப்பட்டு, ஏறிய பீடத்திலிருந்து இறக்கப்பட்டு, கிடைத்த அதிகாரத்தை இழக்கும்படியும், செய்யப்பட்டது. சுபாஷ் பாபுவிற்கு காந்தியமெனும் சர்வாதிகாரம், கல்கத்தாவில் செய்த கொடுமையை எண்ண எண்ண இன்றுள்ள பயங்கர நிலைமைதெள்ளென விளங்கும்.
அவர் செய்த தவறெல்லாம், சரணாகதி அடைய மறுத்ததே! சர்வாதிகாரத்தை வெறுத்ததே! அடிமைத்தளை போட்டுக்கொள்ள ஒப்பாததே! புரட்டுகளை வெளிப்படுத்த முனைந்ததே! இந்தக் குற்றமே அவரை சர்வாதிகார ஈட்டிக்கு இரையாகுமாறு செய்தது. அந்த சர்வாதிகாரம் வங்க வீரனின் மார்பில் குத்திய வடு இந்திய சரித்திரத்திலேயே மறக்க முடியாத ஒன்றாகும். வங்க வீரன் மார்பில் வடுவுடன் இரத்தம் கசிய நின்று, இன்றைய சர்வாதிகாரத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார். இப்படிப்பட்ட சர்வாதிகாரத்துடன் தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. ஆகவேதான் போரும் கடுமையானதாகவே இருக்கிறது. ஆயினும் என் செய்வது? ஜன நாயகம் நிலைக்க வேண்டும். இல்லையேல் தான் பிறந்த நாட்டிலேயே அடிமையாய் உள்ளதை மறைத்து வாழும் உலுத்தனாய், நடைப்பிணமாய் வாழவேண்டுமே! அந்த வாழ்வு வாழ எந்த சுயமரியாதையுள்ளவன் ஒப்புவான்? கேடுகெட்ட அந்த வாழ்வைவிட சுபாஷ் பாபு தம் செயல் மூலம் காட்டியபடி தியாக புத்தியுடன் நடத்தும் போர் மேலானதாகும். சுத்தத் தமிழர் செத்த வாழ்வு வாழ்வதா? கூடாது! ஆகவே, இன்று காங்கிரசின் பேரால் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தில் சிக்காது தப்பி அதனை எதிர்த்தொழித்து உண்மையான ஜனநாயக வாழ்விற்கு அடிகோல வேண்டுகிறோம்.
குடிஅரசு, தலையங்கம் -14.5.1939