18. திருநெல்வேலி மாநாடுகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா தமிழ்ப் பெண்கள் மாநாடும் தமிழர்கள் மாநாடும் தமிழரிக்க சரித்திரத்திலே முக்கியமாக குறிப்பிடத்தக்க மாநாடுகள் ஆகும். தமிழர் இயக்கத்துக்கு அடிகோலியது திருநெல்வேலி ஜில்லா என்றே சொல்லவேண்டும். பார்ப்பன மதக்கொடுமையினால் தன்மதிப்புணர்ச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியுமின்றி தமிழர்கள் பின் நோக்கிச் செல்வதைக்  கண்ட  காலம் சென்ற திருநெல்வேலி பிஎம்.கைலாசம் பிள்ளையவர்கள் பிரம்ம சமாஜக்கிளையொன்றை திருநெல்வேலியில் ஸ்தாபித்து பகுத்தறிவியக்கத்துக்கும்  தமிழரி யக்கத்துக்கும்  முதல் முதலில் வித்தூன்றினார். அன்று முதல் பார்ப்பன மதிப்பிடையிலிருந்து விடுதலை பெறவும் தமிழர் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழர் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கவும் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்தன. ஜஸ்டிஸ் கட்சி தோன்றியபோது அம்முயற்சிகள் பலனடைந்தன.

பழைய கதை

முதலிரண்டு சீர்திருத்தச் சட்டசபைகளிலும் தமிழர்களே திருநெல்வேலி ஜில்லாப் பிரதிநிதிகளாக வீற்றிருந்தனர். ஜில்லா முழுதும் தமிழருணர்ச்சி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்கு முன் பொது ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று வந்தவர்கள் தலை குனியலாயினர். இவ் வண்ணம் தமிழர் இயக்கத் தோற்றுவாயாகவும் ஜஸ்டிஸ் கோட்டையாகவும் இருந்து வந்த திருநெல்வேலி ஜில்லா காங்கரஸ் சீசன் ஆரம்பமானதும், தூக்கம் கொள்ளலாயிற்று. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சொந்தப்பகை காரணமாக சச்சரவிட்டுக் கொண்டிருந்ததினால் அத்தருணத்தை நமது எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

காங்கரஸ் சீசனுக்குப்பின்

நம்மவர்களுள் சிலரும் அவர்களுக்குத் தோன்றாத் துணையாய் இருந்ததினால் சென்ற பொதுத் தேர்தலிலே நம்மவர்கள் முறியடிக்கப் பட்டனர். மஞ்சள் பெட்டி வெற்றியடைந்தது. அந்த மஞ்சள் பெட்டி மோகத்தில் மயங்கி நம்மவர்கள் பலர் எதிரிகளிடம் சரணாகதியடைந்தனர். அடையாதவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரியக் கடமைப் பட்டடவர்களும் எதிரிகள் கடைக்கண்ணோக்குக்கு ஆளாக விரும்பி எதிரிகளுக்கு தூபதூப நைவேத்தியப் பணிவிடைகள் செய்யலாயினர். தலைவர்கள் நிலையே இப்படியானால் சாமானியர் நிலையைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களும் கூட்டத்தோடு கோவிந்தா போடத் தொடங்கினர். திருநெல்வேலி ஜில்லாவிலே ஜஸ்டிஸ் உணர்ச்சி ? தமிழர் உணர்ச்சி மாயத் தொடங்கியது.

உண்மைத் தமிழர் ஏக்கம்

பகுத்தறிவுடைய உண்மைத் தமிழர் மனம் கொதித்தது. தமிழ் வளர்த்த பொதியத்தை தன்னகத்தே கொண்ட நற்றமிழ்நாடு – தமிழன்னை அரசு புரிந்த நெல்வேலி நாடு நாடோடிகள் ஆதிக்கத்துக்கு இடமாவது உண்மைத் தமிழர்கள் உள்ளத்தை உருக்கியது. தமிழர் இனித்தலை நிமிர்வது எக்காலம் எனவும் ஏக்க முற்றனர். நல்ல வேளையாக, தமிழர்கள் மனத்துயர் யாவும் சென்ற 16-ந்தேதி ஒழிந்து விட்டன. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ப்பெண்கள் மாநாடும் தமிழர் மாநாடும் தமிழர்களுக்கு அதிக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துவிட்டன. பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்த சென்னை டாக்டர் ? தருமமாம்பாளும் வரவேற்புக் கழகத்துக்குத் தலைமை வகித்து உபசரித்த திருவாட்டி சிரோன்மணி அம்மையாரும் மாநாட்டுத் தலைவர் திருவாட்டி மீனாம்பாள் அம்மையாரும் நெல்லை ஜில்லா மாதருலகத்தைத் தட்டியெழுப்பி விட்டனர்.

சிரோன்மணி அம்மையார் முழக்கம்

பண்டைத் தமிழ் மாதரின் கல்வியறிவாற்றல்களையும் வீரத்தையும் விளக்கிய பிறகு தன் கணவனை வன் கொலை புரிந்தவனாகிய பாண்டிய அரசனையும் அவனது நாட்டையும் தீயிட்டெரித்த கண்ணகி நம் மரபினில் தோன்றிய பெண் அணங்குதானே! மேலும் போர்க்களஞ் சென்ற தன் மகன் புறமுதுகிட்டு மடிந்திரப்பானேயானால் அவனுக்குப் பாலூட்டிய ஸ்தனங்களை அறுப்பேன் என்று சபதம் புரிந்து படுகளஞ் சென்று தன் மகன் மார்பில் காயம் பட்டுக் கிடப்பதுகண்டு மகிழ்ச்சியுற்று தன் இன்னொரு இளமகனையும் சண்டைக்கனுப்பிய மங்கையும் நம் மரபினில் தோன்றிய மாதுதானே! அவ்வாறிருக்க தாய் மொழிக்காக சிறைக்கோட்டம் புகுந்த தாய்மார்களும் சகோதரிகளும் வயோதிகர்களும் வாலிபர்களும் இளங்குழந்தைகளும் கடுந்தண்டனையடைந்து துன்பப்படும் போது நாம் யாருக்கு வந்த விருந்தோ என்று கவலையற்றிருப்பது ஞாயமா? நாம் முன்கூறிய வீரஞ்செறிந்த தாய்மார்களின் சந்ததிகள்தானா என்பதைச் சிறிது சிந்தனை செய்து பாருங்கள். என மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவர் திருவாட்டி சிரோன்மணியம்மாள் தூத்துக்குடிப் பெண்கள் மாநாட்டுப் பந்தலிலே நிமிர்ந்து நின்று முழுங்கியது திருநெல்வேலி ஜில்லாப் பெண்களை மட்டுமன்றி தமிழுலகப் பெண்கள் அனைவரையுமே தட்டியெழுப்பியிருக்குமென்பது நிச்சயம்.

தருமாம்பாள் வேண்டுகோள்

மாநாட்டைத் திறந்து வைத்த டாக்டர் தருமாம்பாள் இந்தி எதிர்ப்புப் போர் வரலாற்றையும் பெரியார் பெல்லாரிச் சிறையில் தவங்கிடப்பதையும் விளக்கிவிட்டு நமது தலைவர் சென்னையில் நடந்த தமிழ்ப் பெண்கள் மாநாட்டுக்கு வந்திருந்தபோது சமுத்திரத்தைப் போல் குழுமியிருநத நம் தமிழ்ப் பெண்களைக் காண அளவிலா மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் சிறையிலிருந்து மீண்டும் வெளிவந்து பார்க்கும்போது முன்னையவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியடையும் படியாக நாம் பல ஊர்களிலும் தமிழ்ப்பெண்கள் கழகங்களை நிறுவவேண்டும். இதுபோன்று இன்னும் பல மாநாடுகள் நடத்த வேண்டும் எனச்செய்துகொண்ட விண்ணப்பத்தின் எதிரொலி தமிழ்நாடு முழுதும் கேட்டிருக்கும் என்பதும் நிச்சயம். தாய்க்கு மதிப்புக்கொடுக்கும் தமிழர்கள் சிறை சென்ற தாயான டாக்டர் தருமாம்பாள் வேண்டுகோளுக்குத் தக்கபடி மதிப்புக்கொடுப்பார்கள் என்றும் நம்புகிறோம்.

மீனாம்பாள் யோசனை

மாநாட்டுத் தலைவி திருவாட்டி மீனாம்பாள் தமிழ் நாட்டுப் பெண்களின் சமூக வாழ்வை விருத்தி செய்யத் தமது தலைமைப் பேருரையில் பல அரிய யோசனைகளை விளக்கிக் கூறியுள்ளார்கள். பெண்களின் சமூக வாழ்வு விருத்தியடையும் போது அரசியலில் ஈடுபட அவர்களுக்கு ஆர்வம் பெருகும். ஆகவே திருவாட்டி மீனாம்பாள் அவர்கள் சமூக விஷயங்களை விளக்கிக் கூறியதை மிகவும் பாராட்டுகிறோம். தமிழர் மாநாட்டுக்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டிருந்த ஸர்.எ.டி. பன்னீர் செல்வம் நோய் காரணமாக மாநாட்டுக்கு செல்ல முடியாதபடி ஆனது மிகவும் வருந்தத் தக்கதே. எனினும் அவர் மாநாட்டுக்கு அனுப்பிய செய்தி மாநாடு வெற்றிக்குப் பெரிதும் உதவி புரிந்ததென சந்தேகமறக் கூறிவிடலாம்.

ஸர்.பன்னீர் செல்வம் செய்தி

ஸர்.பன்னீர் செல்வம் விடுத்த அறிக்கையில் தமிழர் நலன்கள் காக்கப்படவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மாநாட்டு நடவடிக்கைகள் அமைதியாக நடக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஒரு பக்கம் நாட்பட்ட குருட்டுப் பழக்க வழக்கங்களையும் மறுபக்கம் திராவிட நாட்டில் அரசியல் அதிகாரம் நடத்தும் ஒரு வலிபொருந்திய கட்சியைம் நாம் எதிர்த்துப் போராட வேண்டியதாக இருக்கிறது. தேச நிருவாகம் நடத்துவோர் செயல்கள் தமிழர் சமூகத்துக்கும், கலைகளுக்கும் நாகரிகத்துக்கும், கலைகளுக்கும்  ஊறு செய்யக்கூடியவைகளாக இருக்கின்றன. அவர்களது வரிவிதிப்பு முறைகள் மிராசுதார்கள், உழவர்கள் செல்வநிலையைப் பெரிதும் பாதிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. இவை போன்ற சர்க்கார் செயல்களைப்பற்றி யோசிக்க மாநாட்டில் தாராளமாக இடமிருக்கிறது. மாநாட்டில் சர்க்கார் செயல்களைக் கண்டிப்பதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது நமது புராதனக் கலைகள், ஐதீகம், பொருளாதாரநிலை ஆகியவற்றின் விருத்திக்கான யோசனைகளையும் திட்டங் களையும் நாம் சர்க்காருக்கு எடுத்து காட்டவேண்டும். கடைசியாக திராவிட நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய ஒரு இயக்கத்தை தோற்றுவிக்க தமிழ் நாட்டின் தென் மூலையிலுள்ள திருநெல் வேலித் தமிழர்கள் அடிகோல வேண்டும். அவ்வாறு செய்தால் தருணம் வரும்போது எதிரிகளை எதிர்த்துப் போராட நாம்  வலிமையுடையவர்களாயிருப்போம் எனக் குறிப்பிட்டிருந்தது எவ்வளவு முக்கியமானதென நாம் கூறவும் வேண்டுமா? ஸர்.பன்னீர் செல்வம் மாநாட்டுக்கு தலைமை வகிக்காத குறையை அவரது அறிக்கை ஒருவாறு நீக்கிவிட்டதென்றே சொல்லவேண்டும். மாநாட்டார் கவனிக்கவேண்டிய விஷயங்களை ஸர்.பன்னீர் செல்வம் ரத்தீனச் சுருக்கமாக விளக்கிக் காட்டியது பெரிதும் பாராட்டத்தக்கதே.

சாமியப்பா பேருரை

தமிழர் மாநாட்டுத் திறப்பாளர் ராவ்பகதூர் சாமியப்ப முதலியாரவர்கள், மாநாட்டை திறந்து வைக்குமுகத்தான் நிகழ்த்திய அரிய பேருரை அவர்களது அரசியல் ஞானப் பெருக்கையும் தமிழரியக்க வெற்றியிலுள்ள ஆர்வத்தையும் நன்கு விளக்கிக் காட்டக் கூடியதாக இருக்கிறது. கட்டாய இந்தியை பெற்றோரும் மாணவரும் எதிர்க்கவில்லையென கனம் ஆச்சாரியார் சென்னை மேல் சபையில் கூறியபோது, அப்படியாயின் கட்டாயம் எதற்கு? ஏன் இஷ்டபாடமாக்கக் கூடாது? இஷ்ட பாடமாக்கினால் எல்லாத் தொல்லைகளும் ஒழியாவா? என ராவ் பகதூர் சாமியப்ப முதலியாரவர்கள் ஆணித்தரமாக ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சரியான விடையளிக்க கனம் ஆச்சாரியாருக்கு முடியவில்லை. ஆகவே பாடத் திட்டத்தில் இந்தி ஒரு விஷயமாக இருக்கிறதேயன்றி கட்டாயம் எதுவுமில்லை. இருந்தாலும் இந்திப்பிரச்சினையை எதிர்ப்பாளர் வேறு காரியங்களுக்கு உபயோகப் படுத்தாமலிருந்தால் கனம் சாமியப்ப முதலியாரவர்கள் கூறும் யோசனையைப் பற்றி இந்நிலையிலும் சர்க்கார் யோசிக்கத் தயார் என ஒரு மழுப்பல் சமாதானம் கூறினார். அப்பால் அதுபற்றி கனம் ஆச்சாரியார் வாய் திறக்கவே இல்லை. கட்டாயம் என்ற பேச்சு நின்று விட்டால் இந்தி எதிர்ப்பாளர் கோரிக்கை நிறைவேறிவிடும். அப்பால் அவர்களது எதிர்ப்புக்குத் தேவையும் இல்லாதாகிவிடும். ஆகவே எதிர்ப்பாளர் இந்திப் பிரச்சினையை நேர்முகமாகவோ மறைமகமாகவோ வேறு காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடாதென கனம் ஆச்சாரியார் ஒரு நிபந்தனை வகுக்கத் தேவையே இல்லை. எனவே வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டிருக்கும் கனம் ஆச்சாரியார்  தூத்துக்குடி மாநாட்டில் ராவ்பகதூர் மாநாட்டில் ராவ்பகதூர் சாமியப்ப முதலியாரவர்கள் கடைசியாகச் செய்துகொண்ட விண்ணப்பத்தை மதித்து கட்டாயப்பகுதியை நீக்க முன் வருவாரா? முன் வருவது அவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

ஈஸ்வரம் பிள்ளை வரவேற்புரை

வரவேற்புக் கழகத் தலைவர் ராவ்பகதூர் ஈஸ்வரம் பிள்ளையவர்கள் நிகழ்த்திய பேருரை மாநாட்டுக்கு விஜயம் செய்திருந்தவர்களுக்கு ஒரு நல் விருந்தே. சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் வணங்கா முடி மன்னராய் வாழ்ந்து வந்திருப்பதை ராவ்பகதூர் ஈசுவரம் பிள்ளைய வார்கள் விளக்கிக் காட்டி மேற்கொண்டும் தமிழர்கள் எவருக்கும் அடிமைப்பட மாட்டார்கள் என சூசனையாகக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் நம்மவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இந்தி கட்டாய பாடத்தால் தமிழருக்கு ஏற்படும் இடையூறுகளையும், ராவ்பகதூர் பிள்ளையவர்கள் தொகுத்து காட்டியிருக்கிறார் அவர்களது வரவேற்புப் பேருரை தமிழர்கள் கண்ணைத் திறந்திருக்கு மென்பதற்கு சந்தேகமில்லை.

முத்தையா தலைமைப் பேருரை

தலைவர் மாஜி மந்திரி முத்தையா முதலியாரவர்களது பேருரை சுருக்கமாக இருந்தாலும் மிக்க பொருளமைதியுள்ளதாக இருக்கிறது. எதிர்காலத்து நம்மவர்களுக்கு நேர இருக்கும் விபத்துகளை முன்னாடியே உணர்ந்து தமிழர்கள் எல்லாம் அபிப்பிராய பேதங்களை மறந்து தமிழரியக்கத்தை வலுப்படுத்த முன்வரவேண்டுமென்று தலைவர் முதலியாரவர்கள் கூறும் பொன்னான அபிப்பிராயத்தை தமிழர்கள் எல்லாம் ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறோம். பொதுவாக திருநெல்வேலி ஜில்லாத் தமிழர்கள் மாநாடு வெகு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. அம்மாநாட்டுத் தீர்மானங்களை அமலில் கொண்டுவர திருநெல்வேலி ஜில்லா தமிழர்கள் தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு வேண்டுகிறோம். மாநாட்டுத் தீர்மானங்கள் வேறிடத்த வெளிவருகின்றன.

குடிஅரசு, தலையங்கம்- 23.4.1939

You may also like...