19. வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு?

நோயாளிகள் வைத்தியனை நாடுவார்கள்; துணி வெளுக்க விரும்புவோர் சலவைத் தொழிலாலரைத் தேடுவார்கள்; சட்டைதைக்க விரும்புவார்கள். தையற்காரனிடம் போவார்கள்; மொழிபற்றிய சந்தேகத்துக் குள்ளானோர் மொழி வல்லார் அபிப்பிராய மறிய விழைவார்கள் இதுவே உலக இயல்பு. நோயாளி கருமானைத் தேடுவதும், சட்டைதைப்போர் வாணியனை நாடுவதும், சீனி வேபண்டுவோர் உப்புக்கடைக்குப் போவதும் உலகவழக்கல்ல. அவ்வாறு செய்வோர் வைத்தியக் காரராகவே மதிக்கப்படுவார்கள். ஆனால் காந்தி ராஜ்யத்திலே இந்த விநோதமே காணப்படுகிறது. கல்வித்துறையிலும் மொழித்துறையிலும் வர்த்தகம் கைத்தொழில் சுகாதாரம், உடை, உணவு, முதலிய துறைகளிலும் பகற்கனவு காணும் காந்தியார் அபிப்பிராயமே நாடப்படுகிறது. காந்தியார் சத்யாக்கிரகியாக இருக்கலாம்; சட்டமறுப்பு வீரராக இருக்கலாம்; பட்டினி நிபுணராக இருக்கலாம்; ஞானியாக இருக்கலாம்; அரசியல்வாதியாக இருக்கலாம்; ராஜ்யதந்திரியாக இருக்கலாம்; எனினும் மொழிவல்லார் என்றோ வர்த்தக கைத்தொழில் சுகாதார நிபுணரென்றோ கூறிவிட முடியாது. ஆயினும் தேசீயப் பொது மொழி விஷயத்தையே அவரது அபிப்பிராயத்தையே சென்னை முதன்மந்திரியார் ஒரு அத்தாரட்டியாக கொண்டிருக்கிறார்.

கல்வி நிபுணர்கள் கருத்தென்ன?

கட்டாய இந்தி விஷயத்தில் அரசியல் சம்பந்தமாகவோ மத சம்பந்தமாகவோ எதுவுமில்லை யென்றும் கட்டாய இந்தி கல்வி சம்பந்தமானதே என்றும் கனம் ஆச்சாரியார் கூறுவது மெய்யானால் கல்வி நிபுணர்கள் – மொழி நிபுணர்கள் அபிப்ராயமறிந்தே அவர்கள் விசம்மத்தமாக ஏற்பாடுகள் நடத்த வேண்டும் கருத்தறிய கனம் ஆச்சாரியார் முறைப்படி முயன்றதுண்டோ? காங்கிரஸ் அபிமானியும் ஒரு தேசீயக் கல்லூரிப் பேராசிரியருமான தோழர் சாராநாதய்யங்கார் இந்தியைக் கட்டாய பாடமாகத் தமிழ் நாட்டில் புகுத்தக்கூடாதென எச்சரித்ததுண்டா? உண்டானால் ஒரு கல்வி நிபுணர் அபிப்பிராயத்தை கனம் ஆச்சாரியார் ஏன் லக்ஷ்யம் செய்யவில்லை? தோழர் சாரா நாதய்யங்கார், ஜஸ்டிஸ் கட்சிக்காரரல்ல; சுய மரியாதைக்காரரல்ல; ஆரிய விரோதியுமல்ல; மனக்குறையுடைய ஒரு அரசியல் எதிரியுமல்ல, அவர் கல்வித்துறையில் அநுபவம் பெற்ற ஒரி பேராசியர்; மொழிபற்றி அபிப்பிராயம் கூறத் தகுதியுடையவர்; தமிழ் நாட்டார் இயல்பை நன்குணர்ந்தவர். எனினும் அவரது அபிப்பிராயத்துக்கு கனம் ஆச்சாரியார் மதிப்புக்கொடாதது ஏன்? அவரைப் போலவே எத்தனையோ கல்வி நிபுணர்களும் மொழி வல்லாரும் அபிப்பிராயப் பட்டிருக்கிறார்கள்.

வங்கப் பெரியார் அபிப்பிராயம்

இப்பொழுதுவங்கப் பேராசியர் ஒருவரும் அவர்களைப் போலவே அபிப்பிராயப்படுகிறார். வங்காளத்திலே காமில்லாவில் நடைபெற்ற 22-வது வங்க சாஹித்திய சம்மேனத்தில் தலைமை வகித்த கல்கத்தா சர்வகலாசங்கப் பேராசியர் டாக்டர் சுனித குமார சட்டர்ஜி இந்திய தேசீயப் பொதுமொழி பற்றிப் பேசுகையில் இங்கிலீஷைத் தவிர வேறு எந்த பாஷையை இந்திய தேசீயப் பொது மொழியாக்கினாலும் இந்தியரின் அறிவுக்கும் கலைகளுக்கும் ஆபத்துண்டாவது உறுதி. மக்கள் வேண்டாத ஒரு மொழியை அவர்கள் தலைமீது வலுக்கட்டாயமாகச் சுமத்துவது மகா கொடுமையாகும். ஆகவே இப்பொழுது எழுத்திருக்கும் பாஷா ஏகாதிபத்திய வெறியை எதிர்க்க ஒவ்வொரு வரும் வரிந்து கட்டிக்கொண்டு முன்வர வேண்டியது இன்றியமையாததாகும். இந்தி அறியாத மக்கள் இந்துஸ் தானியைக் கட்டாயம் படிக்கவேண்டும் என ஏற்பட்டால் இந்துஸ்தானியே சுவோர் வேறு ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயமாகக் கற்கவேண்டும் இன்றேல் இந்துஸ்தானி பேசுபவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று குறிப்பிட்டதாகத் தெரிகிறது. நுட்பமாகவும் பாரபட்சமின்றியும் ஆராய்ந்து பார்த்தால் டாக்டர் சுனித்குமார சட்டர்ஜியின் அபிப்பிராயம் பொன்னான அபிப்பிராயம் என்பது நன்கு விளங்கும். இங்கிலீஷே இந்திய தேசீய பொதுபாஷையாக இருக்கவேண்டும் என அவர் கூறுவது தேசபக்திப் புரட்டில் மூழ்கியிருக்கும் தியாகிகளுக்குச் சிறிது கசப்பாக இருக்கலாம். பாஷாவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்படும்போது அந்தந்த மாகாண மொழிகளே மாகாண தேசீய மொழியாக இருக்கும். எல்லா மாகாணங்களுக்கும் பொதுவான ஒரு சமஷ்டி மொழியாயிருக்க இங்கிலீஷுக்கே யோக்கியதை உண்டு. கட்சிப்பற்றோ வீண் அபிமானமோ இன்றி யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இங்கிலேஷே இந்திய சமஷ்டி மொழியாக இருக்க வேண்டு மென்று விளங்காமல் போகாது.

சரோஜினி கூற்று

மாஜி காங்கிரஸ் தலைவி சரோஜினி அம்மையார் சென்னை அரசியல் மாநாட்டில் பேசுகையில் இந்திய மாகாணக் கூட்டுறவுக்கு இந்தியையும் சர்வதேச கூட்டுறவுக்கு இங்கிலீஷையும் படிக்க வேண்டுமெனக் கூறினார். ஆகவே சர்வ தேசக் கூட்டுறவுக்கு இங்கிலீஷ் இன்றியமையாதது  என அவ்வம்மையார் ஒப்புக்கொள்கிறார்.  காங்கிரஸ்காரர் விரும்புகிறபடி பிரிட்டிஷ் தொடர்போ வேறு வெளி நாட்டுத் தொடர்போ வேறு  இல்லாத பூரண சுயராஜ்யத்தை இந்தியா பெற்றாலும் வெளிநாட்டுக் கூட்டுறவின்றி இந்தியாவுக்கு ஒருநாள் கூட வாழமுடியாது. சர்வ உலகக் கூட்டுறவிற்கு இங்கிலீஷைப் போன்ற பாஷை இந்தியர்களுக்கு இல்லவே இல்லை. இங்கிலீஷ் உதவியினால் சர்வ உலக மக்களோடும் நமக்குத் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் இங்கிலீஷ் இந்தியர்களுக்கு மிகவும் தேவையான பாஷை என்பது வெளிப்படை. சரோஜனியம்மையார் கூறுவது போல இந்திய மாகாணக்கூட்டுறவுக்கு இந்தி ஏற்ற மொழியா என கவனிப்போம்.

இந்திப் புரட்டு

இந்தியே இந்தியர்களில் பெரும்பாலோர் பேசும் மொழியென்பது வெறும் புரட்டென இந்திமொழியின் நிலைமையை நன்குணர்ந்த வங்கப் பேராசிரியர் ராமநாத சட்டர்ஜியும் மற்றும் பல வங்கப் பெரியார்களும் சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கிக் காட்டியுள்ளார்கள். இந்தியில் பல பிரிவுண்டென்றும் ஒரு பிரிவினர் பேசுவது ஏனையோருக்குப் புரியாதென்றும் மறைமலையடிகளும் இந்தி பொதுமொழியா  என்ற சிறுசுவடியில் எடுத்துக்காட்டியுள்ளார். ஆகவே இந்தி கற்பது எல்லா இந்தியமாகாணத்தாருக்கும் அவ்வளவு வசதியாக இராது; பாஷைவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்படும்போது அந்தந்த மாகாண மொழிகளே மாகாண தேசீயப் பொது மொழியாக இருக்கக் கூடுமாகையினால் மாகாண மொழியுடன் வேறொரு மொழி கற்பது கஷ்டமாகவே இருக்கும். மற்றும் இந்தி ஒரு விருத்தியடைந்த மொழியல்ல. வங்காளி, மராத்தி, தெலுங்கு மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா மொழிகள் நன்கு விருத்திபெற்ற மாகாண மொழிகள். அம்மொழிகளைக் கற்றோர்க்கு இலக்கணமோ இலக்கியமோ சொந்த லிபியோ இல்லாத இந்தி கற்பது கஷ்டமாகவும் அவருவருப் பாகவுமே இருக்கும்.

இங்கிலீஷ் சிறப்பு

மாகாண மொழிகளுக்கில்லாத பெருமை எதுவும் இந்திக்கு இல்லாததினால் இந்தியை வருந்திக் கற்க எத்தகைய தூண்டுதலும் இல்லை. இங்கிலீஷோ அங்ஙனமன்று. அது மிகவும் விருத்தியடைந்த ஒரு உயரிய பாஷை. உலகத்திலுள்ள அறிவு நூல்களையெல்லாம் விஞ்ஞான நூல்களையெல்லாம் இங்கிலீஷ் மூலம் வெகு சுளுவாகக் கற்றுக்கொள்ளலாம். மற்றும் சுமார் 150-வருஷகாலம் கற்றுவரும் பழக்கத்தினால் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் மிகவும் பழக்கமுடைய விருப்பமுடைய மொழியாகவும் ஆகிவிட்டது. இந்திய மக்களில் ஒரு சிறு தொகையினரே ஆங்கிலம் கற்றவர்களுக்கும்கூட பல இங்கிலீஷ் மொழிகள் சொந்த மொழிகள் போல ஆகிவிட்டன. ஆகவே இங்கிலீஷ் பயில்வது ஒரு பொழுதும் இந்தியர்களுக்குக் கஷ்டமாகவே இராது. மறும் இந்தியர் சுதந்திர உணர்ச்சி பெற்றதற்கும் பகுத்தறிவு உணர்ச்சி பெற்றதற்கும் காரணம் ஆங்கிலக்கல்வியே. இந்திய தேசீய காங்கிரசுக்கு தலைமை வகித்த பல பெரியார்கள் இதனை ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆபாசப்பொய்

ஆங்கிலக் கல்வியினால் இந்தியர்களுக்கு அடிமை மனப்பான்மை ஏற்பட்டு விட்டதாக கூறுவது ஆபாசமான – நீசத்தனமான -இழிதன்மையான பொய்யாகும். இந்தியர்களை குருட்டு நம்பிக்கை களுக்கு ஆளாக்கியது தேவபாஷை என்னும் ஸமஸ்கிருதமே. ஸமஸ்கிருதத்தின் வழி மொழியான இந்தியும் அத்தகையதே. மற்றும் ஆங்கில மொழியின் உதவியினால் வாங்காளி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய மாகாண மொழிகளும் எவ்வளவோ வளம் பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கண இலக்கிய நுட்பங்களும் அழகுகளும் சரித்திர உண்மைகளும் ஆங்கிலம் பயின்ற ஆராய்ச்சி வல்லாராலேயே வெளியாக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்திய தேசீயமொழியாக இருக்க இங்கிலீஷுக்கே லாயக்குண்டென டாக்டர் சுனிதி குமாரர் சட்டர்ஜி சுறுவதை எவராலும் மறுக்க முடியாது.

சுயநிர்ணய உரிமை எங்கே?

அப்பால் மக்கள் வேண்டாத ஒரு மொழியை வலுக்கட்டாயமாகச் சுமத்துவது மகாகொடுமை எனவும் அவர் கூறுகிறார். ஆம். அவர் கூறுவது முழுதும் உண்மையே. சுய நிர்ணய உரிமைக்கு மதிப்பு ஏற்பட்டு வரும் இக்காலத்திலே ஒருவர் கற்கவேண்டிய மொழியை இன்னொருவர் நிர்ணயம் செய்வது ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில் இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டுமென தமிழர் வேண்டவில்லை; வேண்ட அவர்களுக்குத் தேவையுமில்லை. காந்தியார் சொன்னார் என்பதற்காக தமிழர்கள் வெறுக்கும் இந்தியை தமிழ்நாட்டில் புகுத்துவது நீதியுமல்ல. ஆகவே ஒரு அந்திய மொழியை வலுக்கட்டாயமாகப் புகுத்தும் அநியாயத்தை எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்க முன் வரவேண்டுமென்று டாக்டர் சட்டர்ஜி கூறுகிறார். தமிழர்கள் ஒரு வருஷகாலமாகக் கட்டாய இந்தியைச் சட்டபூர்வமாக எதிர்த்து வருகிறார்கள். தமிழ் வாழ்க! இந்தி வீழ்க! எனக் கூறிய பாபத்துக்காக 1001 தமிழர்கள்  இன்றுவரை சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு வருஷகாலமாக தமிழர்கள் கட்டுப்பாடாக இந்தியை எதிர்த்து வந்தும் கனம் ஆச்சாரியார் பிடிவாதம் நீங்கவில்லை. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றபடி மேலும் 100 பள்ளிக்கூடங்களில் இந்தியைப் புகுத்த கனம் ஆச்சாரியார் ஏற்பாடு செய்து விட்டார். 8 மாகாணங்களில் இப்பொழுது காங்கரஸ் மந்திரிகள் நிருவாகம் நடத்திவந்தாலும் இந்தியைக் கட்டாய பாடமாக்க சென்னை மாகாண மந்திரியாரைத் தவிர வேறு எந்த மந்திரிமாரும் முன்வரவில்லை. வேறு மாகாணங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்க முயலும் போத தான் இந்தி எதிர்ப்பின் வன்மையை காங்கிரஸ்காரர் உணர்வார்கள். வங்காளர் ஆந்திரர், இப்பொழுதே எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் கனம் ஆச்சாரியார் பிடிவாதம் என்று ஒழியும்?

குடிஅரசு, தலையங்கம் -16.4.1939

You may also like...