பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்
திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில் மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.
மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்திருந்தும் அதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு புகார் அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1) திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் பல்வேறு வடிவங்களில தீண்டாமை கடைபிடிக்கப்படும் இடங்களை கண்டறிய தோழர்கள் குழுவாக செல்வது எனவும் அப்படி கண்டறிந்த இடங்களை பதிவு செய்து தலைமைக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
2) மாநில கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் “எது திராவிடம்? – எது சனாதனம்?” எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாநகர் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 25 இடங்கள் தெரிவு செய்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் உடுமலை பல்லடம் தாராபுரம் பகுதிகளில் 25 இடங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
3) கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகில் இராசு, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து தோழர் அய்யப்பன், தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், பெரியார் விழுது யாழிசை, யாழினி ஆகியோர் கலந்துகொண்டனர்
பெரியார் முழக்கம் 15062023 இதழ்