தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியாக இருக்கிற ஜி.ஆர். சாமிநாதன் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், மதவாதக் கொள்கையை ஆதரித்தும் பகிரங்கமாக பேசத் தொடங்கி இருக்கிறார்.
மகர சடகோபன் என்பவர் எழுதிய “திருப்பாவையில் நிர்வாக மேலாண்மை” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. அந்த மேடையில் எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு மேடையை பகிர்ந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். கருத்தை அப்படியே எதிரொலித்திருக்கிறார். இந்தியா இந்துக்கள் நாடாக இருக்கும் வரைத்தான் இங்கு மதச்சார்பின்மை நீடிக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது.
ஜி.ஆர்.சாமிநாதன் இதே கருத்தை பாரதிய சம்பிரதாயத்தை நாம் காப்பாற்றுகிற வரையில் தான் அரசியல் சட்டமே இங்கு இருக்கும் என்று கூறுகிறார்.
பாரதிய சம்பிரதாயம் என்றால் என்ன? அது பார்ப்பனிய சம்பிரதாயம். இந்திய சம்பிரதாயம் என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்த தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘பாரதிய’ என்ற சொற்றொடரைத் தான் இவரும் பயன்படுத்துகிறார். இந்தியா என்ற சொற்றொடரை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் எப்பொழுதும் பயன்படுத்துவதே இல்லை. அதேபோல அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது இருக்கின்ற மக்கள்தொகை விகிதாச்சாரம் அப்படியே மாற்றப்படாமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அரசியல் சட்டம் இருக்கும் என்றும் ஜி.ஆர். சாமிநாதன் கூறியிருக்கிறார்.
மக்கள் தொகை விகிதாச்சாரம் என்று இவர் கூறுவது இந்துக்களுடைய விகிதாச்சாரம், இஸ்லாமியர்களுடைய விகிதாச்சாரம், கிறிஸ்தவர்களுடைய விகிதாச்சாரம், னுநஅடிபசயயீhiஉ யீசடிகடைந என்ற ஆங்கில சொற்றொடரை பயன்படுத்தி ஜி.ஆர்.சாமிநாதன் கூறுகிறார். இந்த நாடு இந்துக்களுடைய தேசம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக விடக்கூடாது அத்தகைய ஆபத்து இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிற கருத்தைத் தான் இப்போது ஜி.ஆர்.சாமிநாதனும் அப்படியே பேசி இருக்கிறார்.
சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகின்றபோது அவர் எழுந்து நிற்கவில்லை, அவர் தியானத்தில் இருந்தார் என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். ஆம், சுவாமிகள் தியானத்தில் தான் இருந்தார் என்று கூறி அவருக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். இதை எதிர்த்து ஒரு கட்சியினர் போராடிய போது அவர்கள் ராமேஸ்வரத்தில் சங்கர மடத்தைத் தாக்கிய வழக்கை தான் விசாரித்ததாகவும், அந்த வழக்கில் ஏன் இந்த தாக்குதலை நடத்தினீர்கள் என்று கேட்ட பொழுது அந்தக் கட்சியினர் நாங்கள் எல்லாம் தமிழ் ஆர்வலர்கள் என்று கூறியதாகவும் அப்படியானால் இரண்டு திருக்குறளை கூறு என்று கூறியவுடன் அவர்களால் ஒரு குறளைக் கூட கூற முடியவில்லை என்று கேலியாக பேசியிருக்கிறார். தமிழ் ஆர்வலர்களாக இருப்பவர்கள் என்று சொன்னால் தமிழ் உணர்வுக்கு தமிழ்மொழி உரிமைக்கு போராடுபவர்கள் அத்தனை பேரும் தமிழ் ஆர்வலர்கள் தான். திருக்குறள்தான் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
எத்தனையோ பார்ப்பனர்கள் கோயில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மந்திரங்களுக்கு பார்ப்பன அர்ச்சகர்களுக்கு பொருள் தெரியுமா? சனாதன வேத மதத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் அனைவருக்கும் சமஸ்கிருதம் தெரியுமா? இத்தகைய கேள்விகளை ஜி.ஆர். சாமிநாதன் பார்ப்பனர்களிடம் கேட்பாரா? நிச்சயமாக அவர் கேட்க மாட்டார். தனது வீட்டில் மஹா பெரியவர் சங்கராச்சாரி படத்தை மாட்டி வைத்திருப்பதாக அவர் பெருமையுடன் கூறியிருப்பதோடு திராவிட இயக்கத்தைச் சார்ந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்க வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்து இவர் யார் உங்கள் தாத்தாவா என்று கேட்டதாக கேலி செய்திருக்கிறார். அதுவும் திராவிடக் குரலில் அவர் பேசியதாகக் கூறி கலைஞரைப் போல பேசி காட்டுகிறார். ஆக அவருக்கு திராவிடத்தின் மீது எவ்வளவு வெறுப்பு, வன்மம் இருக்கிறது என்பதையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
யார் இந்த மகா பெரியவர்? தீண்டாமை ஷேமகரமானது என்று கூறியவர். பெண்கள் வேலைக்குப் போக கூடாது என்று சொன்னவர். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்த பிறகு “பிராமண” பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாக சொன்னவர். இவை அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்திற்கு எதிரான சந்திரசேகர சரஸ்வதி படத்தைத் தனது வீட்டில் மாட்டி இருப்பதை பெருமையாகக் கூறியதோடு அந்த திராவிட இயக்கத் தலைவர் உங்கள் தாத்தாவா என்று கேட்டதை கேலி செய்திருக்கிறார். அந்த திராவிட இயக்கத் தலைவர் நாசூக்காகத்தான் கேட்டிருக்கிறார். உங்கள் தாத்தா படத்தை வேண்டுமானால் மாட்டிக் கொள்ளுங்கள்; சட்டத்திற்கு விரோதமாக கருத்துகளை தெரிவித்த இந்த சங்கராச்சாரி படத்தை மாட்டி வைத்திருக்கிறீர்களே ஏன்? என்று நக்கலாகத் தான் அந்த திராவிட இயக்க முன்னாள் அமைச்சர் கேட்டிருக்கிறார் என்பதைக்கூட ஜி.ஆர். சாமிநாதனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவரது பேச்சுகள் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கும் எதிராக இருக்கிறது. கடந்த 29.3.2023 அன்று நீதிபதிகள் கே என் ஜோசப், வி.நாகர்ஜுனா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பை கூறி இருக்கிறது. “வெறுப்பு எனும் ஒரு தீய வளையத்தில் நமது தேசம் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்குத் தீர்வு அரசியலில் இருந்து மதத்தை வெளியேற்றுவது மட்டுமே” என்று கூறியிருக்கிறது. ஆனால் மதம் இருக்கின்ற வரை தான் அரசியல் சட்டமே இருக்கும் என்று அதற்கு நேர் முரணான ஒரு கருத்தைக் கூறி சங்கராச்சாரி தமிழ்த் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காததற்கு ஆதரவாகப் பேசி, தீண்டாமைக்கு ஆதரவாக பேசிய மகா பெரியவரே தனது குருவாக ஏற்றுக்கொண்டு திராவிடத்தையும் கேலி பேசுகிறார். இவர் மீது நிச்சயமாக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் 13042023 இதழ்