தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை.

போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு அடிப்படையான கேள்வி. இந்த மாநாடு நடக்கும் நாட்டின் அதிபரே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் தலைவராக நீடிப்பார் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இனப்படுகொலை செய்த நாட்டின் அதிபருக்கு இந்த மகுடத்தைச் சூட்டலாமா என்பது அடுத்த கேள்வி!

இலங்கையுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டால் தொடர்ந்து தமிழர் பிரச்சினையில் எப்படி அழுத்தம் தர முடியும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்துவிட்டதாலேயே இலங்கையுடன் உள்ள உறவு துண்டிக்கப்பட்டுவிடுமா என்று கேட்க விரும்புகிறோம். அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் வந்தபோது, அதை ஆதரித்து வாக்களித்த நாடுதான் இந்தியா! அதனால் இலங்கையுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதா, என்ன? வடக்கு மாகாணத்தில் இலங்கை தேர்தலை நடத்தியதற்குக் காரணமே இந்தியா தான் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறாரே! அய்.நா.வில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களித்தப் பிறகுதானே, இதுவும் சாத்தியமாகி யிருக்கிறது?

வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், தமிழர் பகுதியைப் பார்வையிட இந்தியாவின் பிரதமர் நேரில் வரவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதை ஒரு ஆங்கில நாளேடு தனது கருத்துக்கேற்ப திரித்து வெளியிட்டது. ‘காமன்வெல்த்’ மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதே வடக்கு மாகாண முதல்வரின் விருப்பம் என்பதுபோல் அந்த ஏடு தனது கருத்தை அம்மாநில முதல்வர் மீது திணித்தது. தாம் பிரதமரை அழைத்தது, தமிழர் பகுதிக்குத் தானே தவிர, காமன்வெல்த் மாநாட்டுக்கு அல்ல என்று, அம்மாநில முதல்வர் இப்போது தெளிவுபடுத்திவிட்டார்.

இலங்கையை இந்தியா பகைத்துக் கொண்டால், சீனா, இலங்கையில் கால் ஊன்றி விடும் என்று வெளிநாட்டுத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறி வருகிறது. ஏற்கனவே இலங்கையில் சீனா ஆழமாகக் கால் ஊன்றித்தான் நிற்கிறது. தொழில் மற்றும் வணிகங்களில் சீனாவின் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மிகப் பெரும் துறைமுகக் கட்டுமானப் பணியே சீனாவுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வெளி விவகாரத் துறை ‘மேதாவிகள்’ தங்களது ‘ராஜதந்திர’ மூளைகளால், இவற்றையெல்லாம் ஏன் தடுக்க முடியவில்லை என்று கேட்க விரும்புகிறோம்.

காமன்வெல்த்தைப் புறக்கணிப்பது என்பது இலங்கைக்கு, இந்தியா தரும் மற்றொரு அழுத்தம் தானே தவிர, இலங்கையோடு அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் துண்டித்துக் கொள்வது அல்ல. இப்போதும் சீனாவோடும், பாகி°தானோடும் இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு தானே இருக்கிறது? எங்கோ இருக்கிற கனடா நாட்டின் அதிபர் புறக்கணிக்கிறார். ஆனால், நேரடியாக தொடர்புடைய இந்தியா, அதில் பங்கேற்க வேண்டும் என்பது தமிழர் தேசிய இனத்துக்கு இழைக்கப்படுகிற தேசிய அவமானம்!

தமிழினத்தின் உணர்வுகள் அறுபட்டாலும் கவலையில்லை. இலங்கையுடன் உள்ள அரசியல் உறவு துண்டிக்கப்படவே கூடாது என்பதுதான் இந்திய தேசிய பார்ப்பனியத்தின் கருத்து என்றால், இந்தியாவுடனான தமிழர்கள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை தானே உருவாகும்?

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...