வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை
சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தாழ்த்தபட்ட பழங்குடியினருக்கு ஒரளவு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புசட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை அவசர அவசரமாக அமுல்படுதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் தொடர்சியான நீடித்த போராட்டங்கள் நடைபெற்றன. பலமாநிலங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிர்ப் பலி ஏற்பட்டது. இதன் பின்னரே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றமே வாபஸ்பெற்றது.
தமிழகத்தில் இடதுசாரிகட்சிகளும், திராவிட இயக்கங்களும், தலித் அமைப்பு களும் ஒருங்கிணைந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 9.4.2018 மற்றும் 2.7.2018 ஆகிய தேதிகளில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் இருப்புபாதை காவல்படை, ஆத்தூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்குகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கறிஞர்கள், வி.ராஜா, எ.சங்கரன் ஆகியோர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நடத்தி வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் 24.11.2022ல் மாலை 7 மணியளவில் தீர்ப்பு வழங்கபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.ஏழுமலை. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர். மு.தமிழ்மாறன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் க.ராமர், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ.ப.பெரியசாமி, விசிக மாவட்ட துணைச் செயலாளர் சி.ராமமூர்த்தி, விசிக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் பா. பாசறை பாலு, விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் ச. பொன்னி வளவன் ஆகிய 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பு சமூக நீதி போராட்டத்தை மேலும் மேலும் முன்னெடுத்து உத்வேகம் அளிப்பதாகும். பொதுநல நோக்கதுடன் நீதிமன்றங்களையும் ஒரு போராட்ட களமாக மாற்றிவரும் தோழர்கள் வி. ராஜா, ஏ.சங்கரன் போன்ற வழக்கறிஞர்கள் அதிகமானோர் உருவாகும்போது வழக்குகளும் உறுதிமிக்க போராளிகளை உருவாக்கும்.
செய்தி: க. ராமர், கள்ளகுறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்
பெரியார் முழக்கம் 26/01/2023 இதழ்