ஈரோடு மாநகராட்சியில் யாக சாலைக் கூடமா? அகற்றக் கோரி கழகம் ஆர்ப்பாட்டம்: கைது
ஈரோட்டில் சட்டவிரோத வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) அகற்றும் போராட்டம் ஈரோடு மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.12.22 வியாழன் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான அரசு வளாகத்தினுள் சட்ட விரோதமாகவும், இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறும் மதசார்பற்றத் தன்மைக்கு எதிராகவும், தமிழ்நாட்டு அரசின் ஆணைகளை நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைத்து அங்கு மத விழா நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த சட்ட விரோத யாகசாலையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த பின்பும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் திராவிடர் விடுதலைக் கழகம் தாமே முன்வந்து அந்த யாக சாலையை அகற்றும் போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் காவல்துறையின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மாநகராட்சி வளாகத்தை நோக்கி சென்றனர். குழுமியிருந்த காவல் துறையினர் கழகத் தோழர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப் பட்ட தோழர்கள் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் : ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாநகரத் தலைவர் மரப்பாளையம் குமார், மாநகர செயலாளர் திருமுருகன், மாநகரத் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, சென்னிமலை கோபிநாத், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, நாமக்கல் மாவட்ட துணை அமைப் பாளர் பிரகாசு, பெருந்துறை பழனிச்சாமி, திராவிடப் பேரவையைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்பொழுது வரை அந்த சட்ட விரோத யாகசாலை அமைக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்தாத கடமை தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 08122022 இதழ்