சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!
ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை போடும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராததோடு, தமிழ்நாடு அரசுக்கு சில சட்ட விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 24 மணி நேரத்தில் அதற்கு சட்ட ரீதியான பதிலை தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. அந்த சட்டப் பிரச்சனைகள் எம்மைப் போன்ற பாமர மக்களுக்குப் புரியாது என்ற கவலையோடு ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத கேள்விகளுக்கும் ‘கோடங்குடி மாரிமுத்து’ இந்த பதில்களை பணிவோடு சமர்ப்பிக்கிறார்.
ஆளுநர் கேட்காத கேள்வி : சில ஆண்டு காலமாவது கிடப்பில் போடாமல் 24 மணி நேரத்தில் எனக்கு பதிலை அனுப்பி என்னை அவமானப்படுத்துகிறீர்களா ?
கோடங்குடி மாரிமுத்து பதில் : அப்படியெல்லாம் இல்லை யுவர் எக்சலென்சி! எங்கே நீங்க மகாபாரதத்தில் சூதாட்டம் நடந்திருக்கிறது. அதுவே நமது பாரத கலாச்சாரம் என்று அடுத்தக் கூட்டத்தில் பேசி விடப் போவீர்களோ என்று பக் பக் என்று பதறியது; உடனே பதிலை அனுப்பி விட்டோம்.
ஆ. கேள்வி : ஏற்கனவே உயர் நீதிமன்றம் இந்தத் தடை அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கூறியிருக்கும் பொழுது சட்ட மீறல் செய்து சட்டம் இயற்றலாமா ?
கோ.மா பதில் : என்னது அரசியல் சட்டமா? அப்படினு ஒன்னு இந்த நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா ? ரிஷிகளும் முனிவர்களும் ஏற்றுக்கொள்ளாத இந்தக் குப்பைகள் எல்லாம் நமக்கு ஏன் ஜி ?
ஆ. கேள்வி : அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என்று இரண்டுக்குமான வித்தியாசம் உங்கள் சட்டத்தில் காட்டப்பட வில்லையே ?
கோ.மா பதில் : அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டில் வெற்றி பெறவும் திறமை வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாதா ஜி? இப்ப பாருங்க, நீங்க ஆளுநராக வந்தது உங்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டம், இந்த அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி நீங்கள் சூதாட்டத்தையும் நியாயப்படுத்திப் பேசுறீங்க பாருங்க அதுக்குப் பேரு திறமை.
ஆ.கேள்வி : ரம்மி சூதாட்டத்தில் நேரடியாக ஆடி டிக் அடிப்பது திறமை ஆன்லைனில் விளையாடுவது சூது, இரண்டையும் சேர்த்து தடை செய்வது என்ன நியாயம் ?
கோ.மா பதில் : அடேங்கப்பா ! சூதாட்ட போதையில்கூட திறமை இருப்பதை எவ்வளவு சிறப்பா நியாயப்படுத்துறீங்க ! தர்மத்தைக் காக்க கொலை செய்யலாம் என்ற கிருஷ்ண பகவான் உபதேசத்த கரைச்சு லிட்டர் லிட்டரா குடிச்சவங்க நீங்க. உங்களுக்கு தான் இப்படியெல்லாம் மூளை வேலை செய்யும்.
ஆ. கேள்வி : எந்த மசோதாவுக்கும் நான் ஒப்புதல் தர மாட்டேன் என்று உங்களுக்கு ஏற்கனவே புரிய வைச்சிட்டேன். பிறகு ஏன் புதிய புதிய மசோதாக்களை கொண்டுவந்து தொலைக்கிறீங்க ?
கோ.மா பதில் : தெரியும் தான். ஆனால் இதையே அரசு ஆணையாக போட்டதுமே அதற்கு ஒப்புதல் தந்தீங்களே அதனால் தான்….
ஆ. கேள்வி : அதனால கேவலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு ஆட்சி மசோதாவை நிறைவேற்றி விடுவதா? அப்போ ஒப்புதல் தந்தது உங்க அரசுக்கு அடித்த அதிர்ஷ்டம், இப்போது திருப்பி அனுப்புவது என்னுடைய திறமை. நல்லா புரிஞ்சிக்கோங்க. சூதாட்டத்தை முழுமையாக தடை செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவில் தான் தடை செய்ய முடியும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது உங்கள் காதுகளில் விழவில்லையா ?
கோ.மா பதில்: நாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவங்க, மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாம்னு நினைக்கிறோம். நீங்களெல்லாம் பாரதத்தை காப்பாத்த அவதாரமாக வந்து அதிகாரம் பன்றவங்க.
ஆனா ஒன்ன மட்டும் புரிஞ்சிக்கங்க எஜமான்.
நீங்களும் சூதாட்ட ‘கில்லாடி’ மசோதா காலாவதியாகிற கடைசி நாளைப் பார்த்து கேள்வி கேட்டு அரசு மசோதாவை ‘ட்ரம்ப் கார்டா’ வைச்சு வெட்டிறிங்க பார்த்தீங்களா? பாண்டவர்கள் பெண்டாட்டியை பணயம் வைத்தது மாதிரி; அது தான் ‘ஹைலைட்’.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 01122022 இதழ்