எழுவர் விடுதலை; துணிவுடன் முதலில் களமிறங்கிய வழக்கறிஞர் துரைசாமி

7 பேர் ‘விடுதலை’யில் துணிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடி வந்த பெருமை ‘பெரியாரிஸ்ட்’ மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்களுக்கே உண்டு. இதை வரலாற்றில் பதிவு செய்தாக வேண்டும். இது குறித்து வழக்கறிஞர் துரைசாமியின் பங்களிப்பை அவரது ஜூனியர் இளங்கோ முகநூலில் செய்துள்ள பதிவைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெருமையுடன் பதிவு செய்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்?  குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது. சிபிஐயினர் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திப்படுத்த கைது வேட்டையை தொடங்கி விட்டனர். முதலில் ஓ.சுந்தரம், திமுக பிரமுகர், இவர் தான் முதல் காவல். விடுதலைப் புலிகளை ஆதரித்த அரசியல் வாதிகள் கைதுக்கு பயந்து அங்கங்கே பதுங்கிக் கொண்டனர். அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. நிறைய தீ வைப்பு சம்பவங்கள்.  ஆதரவு அரசியல் கட்சியினர் எவரும் முன்வரவில்லை. சட்டவிரோத காவலில் இருந்த சுந்தரத்தை முதன் முதலில் தைரியமாக ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து வெளியே கொண்டு வந்தவர் வக்கீல் துரைசாமி.  சிபிஐயினர் தேடித் தேடி ராஜீவ் வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

சட்டப் போராட்டம் நடத்த அப்போது யாருமே முன்வரவில்லை. யாருக்கும் வழக்கை எடுத்து நடத்த தைரியம் இல்லை. பயந்து ஓடி ஒளிந்து கொண் டார்கள். அடுத்தடுத்து கைது செய்யப்பட விருந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆவடி மனோகரன்,  திராவிடர் கழக மாணவரணி அப்போதைய தலைவர் பாலகுரு, செயலாளர் பத்ரி நாராயணன் மற்றும் மிக முக்கிய தலைவரான அன்றைய திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், தற்போது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு சிபிஐயினரின் சட்டவிரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டனர். யாருமே தைரியமாக  முன் வராத வேளையில்  நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தும், சிபிஐயின் மல்லிகைக்கே சென்று மிரட்டி அவர்களை வெளியே கொண்டு வந்தது வக்கீல் துரைசாமி. இந்த தைரியம் யாருக்கு வரும். குறிப்பாக கொளத்தூர் மணியை கைது செய்து விட்டனர் சிபிஐ என்று தி ஹிந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் செய்தியாக வந்துவிட்டது. சிபிஐ டைரக்டர் கார்த்திகேயனையே மிரட்டி மிஸ்டர் கார்த்திகேயன் நீங்கள் மணியை எந்தவித ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்ய முடியும் என்று மிரட்டியே கொளத்தூர் மணியை வெளியே கொண்டு வந்தவர்.

பேரறிவாளனுக்கு அவருடைய தாயார் ஹேபியஸ் கார்பஸ் மனு போட அனுமதித்திருந்தால் அப்பொழுதே பேரறிவாளனை இவர் வெளியே கொண்டு வந்திருப்பார். பாவம், அவர் அம்மா சிபிஐயினர் விட்டு விடுவோம் என்று பொய்யாக சொல்லியதை நம்பி விட்டார். ஆரம்ப கட்டத்தில் வக்கீல் துரைசாமி மீது எத்தனை எதிர்ப்புகள் தெரியுமா; எவ்வளவு தாக்குதல்களுக்கு உள்ளானார் என்பதாவது தெரியுமா; இவர் ஆஜராவதைத் தடுக்க வீட்டில் போய் தாக்குதல் நடத்தியது தான் தெரியுமா; தொலைபேசியில் எத்தனை கொலை மிரட்டல்கள். நீதிமன்றத்திற்கு நீ இந்த வழக்கில் ஆஜரானால் உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என்று எத்தனை கடிதம் அனுப்பியிருப்பார்கள். இவ்வளவு தாக்குதல் களையும் முறியடித்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி தடா நீதிமன்றத்தில் ஏழு வருடமாக விசாரணையில் பங்கு கொண்டு வாதாடி நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை இணைந்து நடத்தி 19 பேர் விடுதலைக்கு உதவியும் இடர்பாடுகள் அனைத்தையும் உடைத்து அன்றைக்கு மிகப் பெரிய சரித்திர சாதனை படைத்தது வழக்கறிஞர் துரைசாமி தான். அப்போது இவ்வளவு மீடியா கிடையாது. அன்றைக்கே இந்த வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று வாதிட்டதன் அடிப்படை தான் இன்றைய எழுவர் விடுதலைக்கு அடித்தளம். இந்த வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தர அடித்தளமிட்டவரே வழக்கறிஞர் துரைசாமி தான். இவர் எழுதிய நூலான “ராஜீவ் கொலை – மறைக்கப்பட்ட உண்மைகள்” நூலைப் படியுங்கள். பல மர்மங்கள் உடையும். ஆனால் இந்த அறுவர் விடுதலையில் இவரை ஏன் இன்றைக்கு மறந்து விட்டோம்?

பெரியார் முழக்கம் 17112022 இதழ்

 

You may also like...