வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார்.

அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில்

“பெருநெறி பிடித் தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”

என்று எழுதினார்.

உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார்.

தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல்

பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்)

50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார். “நாம் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம்,

ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம் வைக்க வேண்டாம்” என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்” என்றார். அதனால் அவரது இறுதி எழுத்தான 6ஆம் திருமுறை பலராலும் இருட்டடிக்கப்பட்டது.

பெரியார் வள்ளலாரின் 6ஆம் திருமுறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல் தொகுப்பை குடிஅரசு பதிப்பகம் சார்பில் நூலாக வெளியிட்டார். பெரியார் ஒரு முறை வடலூருக்கு சென்றபோது புலால் உண்போர் உள்ளே வர வேண்டாம் என்ற அறிவிப்பை மதித்து, திரும்பினார் என்ற வரலாற்றுக் குறிப்பு உண்டு.

1874 ஜன. 30இல் தமது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டவர் திரும்பி வரவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதவைத் திறந்தபோது இராமலிங்கனார் இருந்ததற்கான எவ்வித அடையாளமும் இல்லை. அவரது மறைவு குறித்து பல்வேறு செய்திகள் உலவுகின்றன.

சமூக சீர்திருத்தம் பேசிய வள்ளலார் இறுதி காலத்தில் உள்ளம் உடைந்தார்.  பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடிய அக்கால சமூகச் சூழலில் அவரது பயணம் தொடர்ந்தது.

“கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டி விட்டோம்” என்று மனம் உடைந்த அதே வள்ளலாருக்கு இன்று திராவிட ஆட்சி விழா எடுத்து பரப்புகிறது; வரலாறு திரும்புகிறது.

வள்ளலாரின் வைதீக எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வோம்.

– சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 27102022 இதழ்

 

 

You may also like...