ஜெயலலிதாவின் ஆளுநர் எதிர்ப்பும் அ.இ.அ.தி.மு.க.வின் சரணாகதியும்
நீட் மசோதா இரண்டாவது முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தற்குப் பிறகும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கிற கடமையி லிருந்து தவறி, தன்னுடைய ஆளுநர் மாளிகை யிலே முடக்கி வைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் நடத்துகிற தமிழ்ப் புத்தாண்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இதே முடிவை எடுத்து இருக்கின்றன. ஆனால் இந்த விருந்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அதிமுக அறிவித்திருக் கிறது. சொல்லப்போனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தான், நீட் விலக்கு மசோதாவை அவர் நிறைவேற்றினார். தான் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து துளியும் கவலை இல்லை. திமுக எதிர்ப்பு, பாஜக தயவு வேண்டும் என்ற பார்வையோடு அவர் தன்னுடைய கொள்கைகளுக்கு, சமூக நீதிக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.
ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சரான போது ‘சென்னா ரெட்டி’ ஆளுநராக இருந்தார். அப்போது, அவர் முரட்டுத்தனமாக ஆளுநரை எதிர்த்து அடாவடி அரசியலை செய்தார். 1993ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு உள்ளான போது, சென்னா ரெட்டி நேரில் சென்று விசாரித்தார். எப்படி ‘நீங்கள் நேரில் சென்று விசாரிக்கலாம் ?’ என்று கண்டனம் தெரிவித்தவர் ஜெயலலிதா. 1995இல் மதுரை காமராசர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் சென்னா ரெட்டி, மாவட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசினார் என்பதற்காக “அதிகாரிகளை அழைத்துப் பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. தான் தனியாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது “தவறாக நடக்க முயன்றார் ஆளுநர்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் ஜெயலலிதா.
மாநில அதிகாரங்களுக்குள் ஆளுநர் தலையிடுவதை எதிர்த்து தன்னுடைய அதிமுக தொண்டர்களை வைத்து திண்டிவனம் வழியாக வந்த ஆளுநரை வழி மறித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தவர் ஜெயலலிதா. ‘ஆளுநர் ஒழிக’ என்று முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். சென்னா ரெட்டி நடத்துகிற குடியரசு, சுதந்திர தின விழாக்களில் நானும் கலந்து கொள்ள மாட்டேன், அதிகாரிகளும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவு போட்டவர் ஜெயலலிதா. துணைவேந்தராக யாரை நியமிப்பது என்று பிரச்சனை வருகிற போது, ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதையும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. அதற்குள் சென்னா ரெட்டி மாற்றப்பட்டுவிட்டார் அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இப்படி அடாவடித்தனமாக, முரட்டுத்தனமாக ஆளுநரை எதிர்த்து அரசியல் நடத்தியவர் ஜெயலலிதா. ஆனால், இன்று அந்த கட்சியில், புரட்சித் தலைவி, அம்மா என்று ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கைகட்டி பாஜகவின் தயவிற்காக, பாஜக தங்கள் மேல் உள்ள ஊழல் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கைக்காக இன்றைக்கு சமூக நீதிக்கு, தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள தலைவிக்கு துரோகம் செய்து இந்த விருந்தில் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரோடு ஜெயலலிதா நடத்தியது போன்ற அடாவடி முரண்பாட்டை பின்பற்றத் தயாராக இல்லை. அவர் மிகவும் பக்குவமாக கையாள்கிறார். ஆளுநருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ‘ஆளுநர் தங்களது சட்டப்பூர்வமான கடமையை செய்யும் போதும், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான கடமையை செய்யும் போது தான் தமிழ்நாடு வலிமை அடையும். மாணவர் சேர்க்கை நடைபெறுகிற போது இதை நீங்கள் மேலும் தாமதப்படுத்தி கிடப்பில் போட முடியாது என்பதற் காகவே நாங்கள் இந்த நிலையை எடுத்திருக்கிறோம்’ என்று பண்போடு இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மேற் கொண் டுள்ள இந்த அணுகுமுறை என்பது, சமூக நீதிக்காக, சமூக நீதி நிலைக்க வேண்டும் என்பதற்காக மேற்க்கொண்ட பக்குவமான அணுகுமுறை, அதிமுக இந்த விருந்தில் பங்கேற்பது என்பது, சமூக நீதிக்கும், தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள தலைமைக்கும் இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்.
பெரியார் முழக்கம் 21042022 இதழ்