அமீத்ஷா குழுவின் இந்தித் திணிப்பு முயற்சிகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது
நாடாளுமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.டி.டி. ஆச்சாரி – அமித்ஷா குழுவின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது என்பதை விளக்கி ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (அக்.21) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.
- அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள இந்தித் திணிப்பு பரிந்துரைகளுக்கான அறிக்கையில் ஒன்றிய ஆட்சியின் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் கேந்திரா வித்யாலயாக்களில் இந்தி மட்டுமே பயிற்சி மொழி என்று கூறி ஆங்கிலத்தை அகற்றுகிறது. அரசியல் சட்டப்படி மாநில அரசுகள் இதை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
- ஏனைய நாடாளுமன்றக் குழுவுக்கும் ஆட்சி மொழிக் குழுவுக்கும் வேறுபாடு உண்டு. இந்தக் குழு ஆட்சி மொழிச் சட்டம் 1963 -4ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற குழு. ஆட்சி மொழியான இந்திப் பயன்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு.
- குடியரசுத் தலைவரிடம் நேரடியாகக் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் குழுவின் பரிந்துரைகளை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுத்தியாக வேண்டும். சட்டப்படி கிடப்பில் போட்டுவிட முடியாது.
- ஆட்சி மொழி குறித்து அரசியல் நிர்ணயசபையில் கடுமையான விவாதங்களுக்குப் பிறகு தேவநாகரி எழுத்து வடிவம் கொண்ட இந்தி, ஆட்சி மொழியாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 343ஆவது பிரிவு இதை பிரகடனப்படுத்துகிறது. அத்துடன் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து 15 ஆண்டுகள் ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 1963இல் ஆங்கிலமும் காலவரையின்றி ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. ஒன்றிய ஆட்சியின் நிர்வாகம் நாடாளுமன்றம், நீதிமன்ற செயல்பாடுகளில் அதன் காரணமாகவே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த நிலையில் ஒன்றிய ஆட்சியின் உயர் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தை முழுமையாக அகற்றி விட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அமீத்ஷா குழுவின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
- இந்தியை ஆட்சி மொழியாக்கும் நோக்கத்தில் செயல்பாடுகள் முன்னேற்றம் பற்றி ஆராய்வதே ஆட்சி மொழிக் குழுவுக்கான சட்டப்பூர்வ கடமை. அதையும் தாண்டி, பயிற்று மொழி எதுவாக இருத்தல் வேண்டும் என்று கருத்து கூறும் சட்டப்படியான உரிமை குழுவுக்குக் கிடையாது. ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கும் சட்ட உரிமையும் குழுவுக்குக் கிடையாது. (குழு, சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது)
- ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தியை மட்டுமே திணிக்கும் ஒன்றிய ஆட்சியின் முயற்சிகளை தென்னகம் கடுமையாக எதிர்த்தது. ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தி மட்டுமே என்ற நிலை வந்து விட்டால், அகில இந்திய பணியிடங்களுக்கான தேர்வுகளை தென்னாட்டினரும் இந்தி யில் மட்டுமே எழுத வேண்டும். இதனால் தென்னாட்டு மாணவர்கள் கடும் பின்னடைவை சந்திப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு தான் அரசியல் சட்டத்திலேயே 344(3) என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.
- அரசுத் துறைப் பணிகளில் இந்தி பேசாத மாநிலங்களின் கருத்துகள் அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அதற்கு உரிய மரியாதை தர வேண்டும் (due regard to the just claims and interests of persons belonging to non-Hindi speaking areas) என்று அந்த சட்டப் பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
- அரசியல் நிர்ணய சபையில் பேசிய மவுலானா ஆசாத், “தெற்கு-வடக்கு இரண்டும் வெவ்வேறானவை. வெவ்வேறு மொழிக் குடும்பம் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டையும் இணைப் பது ஆங்கிலம் மட்டும் தான். ஆங்கிலத்தை அகற்றி விட்டால் தெற்கு வடக்கு – ஒற்றுமை முடிவுக்கு வந்து விடும்” என்று எச்சரித்தார்.
- இந்தியும் உருதும் கலந்தது இந்துஸ்தானி. சுதந்திரப் போராட்டக் காலங்களில் இந்துஸ்தானி தான் பயன்படுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் தான் ஆட்சி மொழி பற்றிய கருத்தாக்கமே எழுந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் இந்துஸ்தானி கைவிடப்பட்டு ‘இந்தி’யை முன்மொழிந்தார்கள் (பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பேசிய உருது மொழி கலப்புடன் கூடிய இந்துஸ்தானியை மறுத்து சமஸ்கிருதக் கலப்புடன் உருவான இந்தியை பார்ப்பனர்கள் ஆட்சி மொழியாக்க வலியுறுத்தினார்கள் – ஆர்). இந்த வரலாறுகளை கவனத்தில் கொள்ளாமல் இந்தித் திணிப்பு தீவிரமானால் அது கடும் பாதிப்புகளை உருவாக்கி விடும்.
- அரசியல் நிர்ணய சபை செயல்பட்ட காலம் இப்போது இல்லை. எனவே இந்தியை மட்டும் நிர்வாக மொழியாக ஏற்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிடும். அறிவியல் தொழில் நுட்பம் சர்வதேச தொடர்புகளுக்கு ஆங்கிலம் அவசியமாகிவிட்டது. ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சிப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழில் : ‘இரா’
பெரியார் முழக்கம் 27102022 இதழ்