தலையங்கம் பிரபாகரன்?
தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலகத் தமிழர்களின் பிரதிநிதி என்ற நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு பழ. நெடுமாறன் அவர்கள் அறிவித்திருப்பது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. பழ. நெடுமாறன் அவர்கள் இதை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடிய முன்னோடி தலைவர்கள் எவரும் அவருடன் இல்லை. இந்த அறிவிப்பிலிருந்து அவர்கள் விலகி நிற்க முடிவு செய்துவிட்டனர்.
அவ்வப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி வந்த பழ. நெடுமாறன் அவர்கள், அண்மைக்காலமாக இதில் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது இதை அறிவிக்க வேண்டிய தேவை – அவசியம் ஏன் வந்தது? மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி உரிமைகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல் என்று கருதும் பழ. நெடுமாறன், அதைச் சாக்கிட்டு பிரபாகரன் வெளியில் வர முடிவு செய்துள்ளார் என்கிறார்.
13ஆவது சட்டத் திருத்தம் என்ற போலி அதிகாரப் பரவுதலை உறுதியாக எதிர்த்தவர் பிரபாகரன். அவர் போராடியது தமிழ் ஈழத்தின் விடுதலைக்காகத்தான். அதற்கான மாற்று சிங்கள அரசால் முன்வைக்கப்படுமானால் பரிசீலிக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
சிங்கள அரசு மவுனம் சாதித்தது; உடனே சர்வதேச சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, ஈழ விடுதலைக்கு மாற்றாக ஒரு அரசியல் திட்டத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் முன்வைத்த போது, அதை நிராகரித்தது சிங்கள அரசு என்பது கடந்த கால வரலாறு.
இந்தப் பின்னணியில் 13ஆவது சட்டத்திருத்தம் என்ற ஏமாற்றுத் திட்டத்தை தமிழர்களுக்கான தீர்வாகக் கருதி பிரபாகரன் வெளியில் வரப்போகிறார் என்ற வாதம், அந்த தன்னிகரற்ற விடுதலைப் போராளியை அவமதிப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
வேறு மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒன்றிய பாஜக ஆட்சியின் ஈழத்தமிழர் ஆதரவு நிலையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு பிரபாகரன் வரவேற்க தயாராகிவிட்டார் என்பதையே பழ. நெடுமாறன் அவர்களின் இந்தக் கருத்துகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. எனவே தான் ஒன்றிய பாஜகவுக்கு பெருமையையும் வலிமையையும் சேர்க்கும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பு வெளி வந்திருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது.
பெரியார் திராவிடர் கழகமாக இருந்த காலத்திலும் திராவிடர் விடுதலைக் கழகமாக இருக்கும் போதும் தமிழீழ விடுதலைப் பிரச்சினையைத் தூக்கி சுமந்து அதற்காக கடும் விலையைக் கொடுத்தது நமது இயக்கம். கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அடக்குமுறை ஆள் தூக்கி சட்டங்களின் கீழ் மாதக்கணக்கில் சிறைப்பட்டிருந்தார். தோழர்கள் பலரும் இதேபோல் அடக்குமுறைகளைச் சந்தித்து இப்போதும் நீதிமன்றத்தால் வழக்குகளுக்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இப்பிரச்சனையில் துணிவோடு நேர்மையாக கருத்துக்களை முன்வைக்கும் தார்மீக உரிமை நமக்கு இருக்கிறது.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒரு மாபெரும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தினாலும் அவரைத் தனிமனிதராகப் பார்க்க முடியாது; அது ஒரு வீரம் செறிந்த தலைமைத்துவம். 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பிறகு 14 ஆண்டுகளாக அவர் வெளிப்படவில்லை. இதன் மூலம் பிரபாகரன் – உடலால் உயிருடன் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டாலும்கூட அவரே தனது தலைமைத்துவம் தற்போது களத்தில் தேவை இல்லை என்பதை வெளிப்படுத்தவே விரும்புகிறார் என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும். தனது இருப்பு இல்லை என்பதே அவர் வெளிப்படுத்தும் சேதி. இருப்பை உறுதி செய்ய நினைத்தால் பிரபாகரன் அவர்களே நேரில் தோன்றி அறிவிப்பார். இந்த ‘மவுனத்தை’த் தகர்க்க பழ. நெடுமாறன் போன்ற மூத்த தலைவர்கள் ஏன் துடிக்க வேண்டும் என்பதே நமது கேள்வி!
மட்டுமின்றி பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை. ஏதோ தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டும் இதற்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.
ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவரை சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காய்களாக மாற்றுவதை நாம் ஒருபோதும் ஏற்க இயலாது. தமிழ் ஈழப் பிரச்சனைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைவர் பழ. நெடுமாறன் என்ற முறையில் நாம் எப்போதும் அவரை மதிக்கிறோம். அவருடன் இணைந்து களமாடியவர்கள் என்ற உரிமையோடு எதிர்ப்பைப் பதிவு செய்து இந்த வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.
பெரியார் முழக்கம் 23022023 இதழ்