பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, ‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:

தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். பொதுவாக திகைப்பில் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஒரு புதிய வேதியியல் மாற்றம் என்னை படம் பார்த்தபின் தொற்றிக் கொண்டதால் இருவேறுபட்ட பண்புகளைக் கொண்ட வார்த்தைகளை கோர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தயாரிப்பதற்கும் அதில் நடிப்பதற்கும், வெளியிடுவதற்கும், வர்த்தகம் மட்டுமே நிச்சயமாக நோக்கமாக இருந்திட இயலாது என்பதை சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பை உணர்ந்த ‘பெரியார்வாதி’ என்ற அடிப்படையில் உணர்கிறேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை – கண்ணோட்டத்தை – எவரும் இதுவரை தந்ததில்லை என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய

உண்மை.

மகாத்மா பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சாதி பற்றிய ஆய்வுகளையும் தரவுகளையும் கால வரிசையில் ஆய்ந்து அதன் கட்டமைப்பை விளக்கியுள்ளனர். சாதி ஒழிந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இன்றைய இளைஞன் ஒருவன் குறைந்தது பத்தாண்டுகள் சாதி குறித்து படித்து தேர்ந்தபின்பு பெறவேண்டிய தெளிவை இப்படம் வலிய சென்று ஊன்றி உணர்த்தியிருக்கிறது. காவல் உதவி ஆணையாளராக படத்தில் வரும் உங்கள் பாத்திரத்திற்கு முன்னால் நிற்கும் மற்ற காவலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதியை அடையாளப்படுத்தியும் பெருமைப் படுத்தியும் சிலாகித்து பேசுகின்ற காட்சியில் பெரும் வரலாற்று ஆய்வு பொதிந்து கிடக்கிறது.

அம்பேத்கர் தன்னுடைய 23வது வயதில் (1916) கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்விற்கு அனுப்பிய ‘இந்தியாவில் சாதிகள்: தோற்றமும், வளர்ச்சியும் மற்றும் இயக்கமும்’ (Caste in India:

Genesis, Mechanism and Development)) என்ற கட்டுரை அங்கு வாசிக்கப்பட்டபோது அவருக்கு வசப்பட்டது முது முனைவர் பட்டம் மட்டுமல்ல; இந்தியாவின் சாதி குறித்த பார்வை உலகிற்கும் வியப்பூட்டியது; நிறவெறியும் இனவெறியும் உலகில் நீண்ட வரலாற்றுக்கு சொந்தமானவை என்றாலும், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு எந்த புலனுக்கும் அகப்படாத சாதி! அடையாளம் பிற நாட்டினரை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அந்த அதிர்ச்சியை பெரியார் தமிழ் மண்ணில் வெடிக்கச் செய்து புரட்சி செய்தார். திராவிட இயக்கம் முன்னெடுத்த இந்த சாதி ஒழிப்பு இன்று முனை மழுங்கிவிட்டதோ என்று முற்போக்கு சிந்தனை யாளர்களே கலக்கம் அடைந்துள்ளபோது, நெஞ்சுக்கு நீதி! திரைப்படம் கலக்கம் விலக்கும் ஒளிக்கீற்று!  படத்தில் வரும் காவலர்கள் தாங்கள் யாருக்கு மேல் யார் என்ற சாதி பெருமிதத்தில் கவனமாய் – கட்டுப்பாடாய் இருப்பதை காட்சிப் படுத்தியபோது சாதியின் உண்மையான கோரமுகம் மட்டுமல்ல; இன்றும் நீடிக்கும் ஈனமான தத்துவம் என்பதை கச்சிதமாய் காட்சிப்படுத்தியது பாராட்டுக் குரியது.

சுருக்கம் இதுதான்; எல்லோரும் ஒரு தொழிலை மட்டுமே செய்தால் சமுதாயத் தேவைகள் நிறை வேறாது;  தேவைகள் நிறைவேற்றப்படாத சமூகம் அமைதியாய் இருக்காது. எனவே ‘தொழில் பிரிப்பு’! (Division of Labour) என்பது தேவை மட்டுமல்ல; இன்றியமையாததும்கூட எனவே இந்தியா தவிர எல்லா நாடுகளிலும் தொழில் பிரிக்கப்பட்டு சமுதாயத்தின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அதில் பேதமில்லை; உளவியல் பாரபட்சமில்லை; சமத் தன்மை இல்லை; தொழிலை மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு. ஏற்றுக் கொண்ட எந்த தொழிலும் அங்கு பிறப்பால் வருவதில்லை; இழிவானதுமில்லை. ஆனால், இந்தியாவில் அன்றைய ‘சனாதனம்’ – இன்றைய ‘இந்துத்துவா – போதிப்பது தொழிலாளர்கள் பிரிப்பு’ (Division of Labourers). பிறவி அடிப்படையில் அவர்கள் மேல் குறிப்பிட்ட ஒரு தொழிலை சுமத்துவதோடு நில்லாமல் – அவர்களை கல்வி மறுக்கப்பட்டவர்களாய், நாகரீகம் பெற முடியாதவர்களாய், உரிமைகள் பறிக்கப்பட்டவர் களாய் – சூத்திரர்களாய் – பஞ்சமர்களாய் – பிற்படுத்தப்பட்டவர்களாய், ஒடுக்கப்பட்டவர்களாய் சமூகத்தில் அட்டவணைப் படுத்துகிறது.

மேலும், மற்ற நாடுகளில் உள்ள ‘தொழில் பிரிப்பு’ (Division of Labour) ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்ற வரிசை (Horizontal) அமைப்பு. வரிசையில் வசதிகேற்ப ஒருவர் இடம்மாறி நிற்கலாம்; நிற்க முடியும். ஆனால் ‘தொழிலாளர்கள் பிரிப்பு’ (Division of Labourers)! ஒன்றின் மேல் ஒன்று என்ற செங்குத்து (Vertical) அடுக்கு அமைப்பு. அந்த அமைப்பில் யார் மேல் யார் கீழ் என்பதுதான் சாதி அடையாளம்; வெற்று பெருமிதம். இதைத்தான் தன் ஆய்வில், சாதிய அடுக்கில் மேலே செல்ல செல்ல ஒரு சாதிக்கு மதிப்பும் பெருமிதமும், கீழே வரவர ஒரு சாதிக்கு இழிவும் வந்து சேர்கிறது (Ascending order of reverence and descending order of contempt) என்று அம்பேத்கர் தன் ஆய்வில் நிறுவினார். இந்த ஆய்வை அசாத்தியமாய் நான்கய்ந்து காவலர்களை பேச வைத்து காட்சிப்படுத்தியது சாதி ஒழிந்த சமூகத்தை இங்கு காண விரும்பி உழைத்து மறைந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு தரப்பட்ட கொள்கைப் படையல். இந்த காட்சி தரும் சமூக உண்மையை ஏற்றுக் கொள்ள இன்றும் பலருக்கு தயக்கமிருக்கும். ஆனால், அவர்களின் மனசாட்சிக் கூட மறைமுகமாக தங்களை நகைக்கும் அளவில் படத்தின் காட்சி அமைந்துள்ளது.

சாதி குறித்த வாதப்பிரதிவாதங்களை இப் படத்தில் காட்சிப்படுத்தியது நுட்பமான உத்தி. எல்லோரும் சமமல்ல என்ற சாதிய மனம் தலை தலைமுறையாக கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தின் குரலை உங்கள் காவலர் ஒருவர் வெளிப்படுத்துகிறார்:

‘எல்லோரும் சமம் என்றால் யார் அரசனாக இருப்பது’ என்று உங்களிடம் பணிபுரியும் காவலரின் கேள்விக்கு ‘எல்லோரும் சமம் என்று நினைப்பவர் தான் அரசனாக வரவேண்டும்’  என்ற பதில் எவ்வளவு புரட்சிகரமானது: ‘ஜன நாயகம் என்பது ஒரு அரசாங்கத்தை தேர்ந் தெடுப்பது மட்டுமல்ல; அது சக மனிதனுக்கு உரிய சமத்துவத்தையும் மதிப்பையும் தருவது’ என்றார் அறிஞர் அண்ணா. அந்த வாசகங்களை ஒற்றை வரியில் காட்சிப்படுத்தியதை எண்ணி வியந்து மகிழ்ந்தேன்.

காவல் உதவி ஆணையாளராக உங்களோடு பணியாற்றிய அனைத்து காவல் அலுவலர்களுக்கும் தங்களின் அரசாங்கத்து பதவியைவிட சாதியை பெரிதாக கருதி பெருமிதம் கொள்வதை வெறும் படக் காட்சி என்று ஒதுக்க இயலாது. அந்த வறட்டுப் பெருமிதம் இன்னும் அரசு நிர்வாகத்தில் புரை யோடிப்போய் உயிர்ப்போடு இருக்கிறது என்பது தான் உண்மை. அடுக்குகளாய் கட்டமைக்கப்பட்ட சாதிய சமூக அமைப்பில் கடைசி அடுக்கில் இருக்கும் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலையை காட்சிப்படுத்தியதோடு நில்லாமல், அவர்கள் சந்திக்கும் சவால்களை நெஞ்சுக்கு நீதி! தோலுரித்து காட்டியிருக்கிறது. இந்த சாதிய ‘அடுக்கு கட்டமைப்பை’ பிராமணியம்தான் எப்போதும் இப்போதும் தலைமை தாங்குகிறது என்பதை படத்தின் கடைசி பாகத்தில் குறியீடாய் காட்டப்பட் டுள்ளது மனங்கொள்ளத்தக்கது. ஆம், படத்தில் வரும் எதிரிகள் எல்லோரின் குற்றங்களுக்கும் சாதிப் பெருமையும் சிறுமையும் காரணமாய் இருந்தாலும், அவற்றிற்கு தலைமை தாங்கியது பிராமணராக வரும் காவல் ஆய்வாளர் சுந்தரம் (அய்யர்). சுந்தரம் வெறும் தனிமனித கதாப்பாத்திரமல்ல; குறியீடு அவரை தனி நபராக கருதி அந்த முழு சமூகத்தையும் ஏளனம் செய்வது அறிவுடமை ஆகாது. அந்த பாத்திரம் ஒரு தத்துவம்.

ஏற்கவியலாத தத்துவம். ‘நான் பிராமணியம் என்று குறிப்பிடுவது ஒரு சமூகத்தையோ அவர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்தையோ அனுகூலத்தையோ அல்ல; நான் குறிப்பிடும் பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுதலிப்பது’ என்றார் அம்பேத்கர். அவைகளை மறுதலிக்க காரணமாக இருந்த சுந்தரம் எனும் காவல் ஆய்வாளர் பாத்திரம் மற்ற சமூகங்களின் சமத்துவத்தை சுதந்திரத்தை எப்படி கையாண்டு கதை முடிந்தது என்பதும், அந்த சூழ்ச்சி எப்படி காவல் உதவி ஆணையாளராக உங்களால் கண்டறியப்பட்டு வெல்லும் காட்சி சமூகத்தின் தீர்வுக்கான குறியீடு.

‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்றார் பெரியார்; ‘உலக சகோதரத்துவத்தை’ (Universal Brotherhood) வலியுறுத்தினார் அம்பேத்கர். மானுடம் போற்றும் இவ்விரு சிந்தனையாளர்களின் கூற்றை எவரும் புறந்தள்ள முடியாது; கூடாது. ஆனால் அதை சொன்னதற்காக அவர்கள் கம்பிக் கூண்டுக்குள் சிறைபட்டு கிடக்கும் முரணை போகிற போக்கில் இடித்துரைக்கும் காட்சியை தமிழக முதல்வரும், அரசும் புறந்தள்ளிவிடக் கூடாது.

‘நமக்கு என்னென்ன பெருமைகள், வசதிகள், தேவைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அத்தகைய பெருமைகள், வசதிகள், தேவைகள் மற்றவர்களுக்கும் வரவேண்டும் என்று விரும்புவதும், அதற்காக உழைப்பதும்தான் மனித நாகரீகம்! என்றார் பெரியார். அந்த நாகரீகத்திற்கு எதிராக கையாளப் படும் தீண்டாமை எனும் ‘தீட்டு’ அறிவியலிலும் அனுபவத்திலும் பொய் என்பதை லாவகமாக கையாண்டது சிறப்பிலும் சிறப்பு. சாதியும் தீண்டாமையும் பார்வைக்கு புலப்படும் பௌதீகப் பொருளல்ல (Physical Object); அது மூளையில் பதிக்கப்பட்ட வன்மம் (State of mind/notion). அந்த வன்மம் குறித்த எதார்த்த விமர்சன காட்சிகள் பலரை சிந்திக்க வைத்திருக்கும்; வைத்திருக்க வேண்டும்.

மதம் வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்ல வந்த திரைப்படங்கள் உண்டு; ‘ஒரே ரத்தம்’ தொடங்கி ‘ஜெய் பீம்’ வரை முயற்சிகள் பல. அவைகள் சாதி இந்த சமூகத்தின் அவமானம் என்று சொல்ல வந்தவை; பாராட்டுக்குரியவை. ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’ இந்திய சாதிய அமைப்பை வரலாற்று உளவியல் பின்புலத்தோடு ஆராய்ந்து, வரையறைப்படுத்தி – அந்த கட்டுமானம் ஏற்படுத்தும் காயங்களையும் – காயங்களின் வலிகளையும் முழுவதுமாக காட்சிபடுத்தி தீர்வையும் தந்த ஒரு படம்; ஒரே படம். பரவலாக வெகு மக்களின் மனங்களில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘சாதி’ இப்படத்திற்கு வணிக வெற்றியை அளித்திடுமா எனும் அய்யம் எனக்கும் உண்டு.

‘உதயநிதி இதை தவிர்த்திருக்கலாம்’ எனும் குரல் மெலிதாக ஒருபுறம் கேட்கவும் வாய்ப்புண்டு. இப்படி ஒரு தர்க்கம் வரும் என்று உங்களுக்கு எவரேனும் எச்சரிக்கை செய்யாமல் இருந்திருக்க முடியாது. என்றாலும், இப்படம் இன்றைய தேவை என்பதை உணர்ந்து உவந்தளித்த உங்களின் உள்ள வலிமையை பாராட்டமலிருப்பது பகுத்தறிவாளர்களின் பண்பாகாது.

இறுதியாக, ‘இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டியது சாதியை ஒழிக்க பாடுபடுவதும் மக்களின் இழிநிலையையும் மடமையையும் ஒழிக்க பாடுபடுவதும்தான்’ என்றார் பெரியார்.

இந்தப் படத்தின் வாயிலாக உங்களுக்கு பொதுத் தொண்டு ஆற்ற எல்லா தகுதியும் உரிமையும் மட்டுமல்ல; வீரியமும் விவேகமும் உண்டு என்று கண்டுணர்ந்து பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ வெல்லட்டும்!

 

பெரியார் முழக்கம் 02062022 இதழ்

You may also like...