விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

மக்களிடம் ஜாதி, மதம் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் தனது ‘விடுதலைக் குரல்’ கலைக்குழு வழியாக போரிசைப் பாடல்களை பாடி வந்த தலித் சுப்பையா, பிப். 16, 2022 அன்று புதுச்சேரியில் முடிவெய்தினார். இறுதி காலத்தில் தலித் சுப்பையா எனும் பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.

ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் ஏழைக் குடும்பத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், தடைகளைத் தகர்த்து, கல்வி பயின்று, 1980களில் புதுச்சேரிக்கு குடியேறினார். தொடக்கக் காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளோடு புரட்சிப் பாடகரானார். பல நூறு பாடல்களை எழுதி, அவரே இசை அமைத்தார். தலித் சுப்பையா என்று தன்னை அடையாளப்படுத்தினார். பாடல் வரிகளில் அலங்காரங்கள் அழகுச் சொற்களைத் தவிர்த்து, வரலாறு களையும் சிந்தனைகளையும் பொதித்து வைத்தார். தனது இசை நிகழ்ச்சி மேடைகளை சிந்தனை மேடைகளாக்கினார்.  பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர் விடுதலைக் கழக மேடைகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அவர் இறப்பு செய்தி கிடைத்தவுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, அவரது குழுவில் பங்கேற்றுப் பாடி வந்த தோழர் நாத்திகன், அருண்குமார் ஆகியோர் புதுவை சென்று இறுதி மரியாதை செலுத்தினர். அதைத்  தொடர்ந்து, 18.02.2022 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித் சுப்பையாவின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த 20.2.2022 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அவரது படத் திறப்பு நினைவேந்தல் நிகழ்வையும் திராவிடர் விடுதலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அவரது கலைக் குழுவில் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணித்த பாடகர் மணிமேகலை, அவரது துணைவர் கார்த்திக், நாத்திகன் ஆகியோர் லெனின் சுப்பையாவின் பாடல்களைப் பாடி அவரது மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது குழுவில் தொடர்ந்து பயணித்த கார்த்திக், ஒவ்வொரு பாடலையும் லெனின் சுப்பையா எந்தப் பின்னணியில் எழுதினார், யாருக்காக எழுதினார் என்ற வரலாற்றத் தகவல்களையும் எந்த நேரத்திலும் தனது கலையை விலை பேசாத சமரசமற்ற இலட்சிய உறுதியையும் இணைப்புரையாக ஒவ்வொரு பாடலுக்கும் வழங்கியபோது அவையே கண்ணீர் சிந்தியது. ஒன்றரை மணி நேரம் இசை நிகழ்ச்சி உருக்கத்துடன் பார்வையாளர்கள் இதயங்களில் துயரச் சுமையை அழுத்தியவாறே நடந்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, லெனின் சுப்பையா படத்தைத் திறந்து வைத்தார். லெனின் சுப்பையாவுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி, அவருக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சார்ந்த தீனா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை மீது அவர் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்ததையும் தனது குடும்பத்தைவிட இலட்சியத்தை மிகவும் ஆழமாக நேசித்ததையும் உருக்கமாக எடுத்துச் சொன்னார். தலித் சுப்பையாவின் இரண்டாவது மகன் கார்க்கி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு, 2005ஆம் ஆண்டு, அக்.2 இல் திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தமிழர் எழுச்சி விழா மாநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்திய தலித் சுப்பையா, பாடல்களுக்கான இணைப்புரையாகப் பேசிய கருத்துகளைத் தொகுத்து 27.2.2005 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டிருந்தது. அத் தொகுப்பில் தலித் சுப்பையா பதிவு செய்த கருத்துகளை விடுதலை இராசேந்திரன் எடுத்துக் காட்டி உரையாற்றினார். (அந்த உரையின் சுருக்கம் இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது) தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைமையேற்று நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி உணர்வுடனும் உருக்கத்துடனும நடந்தேறியது.

‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவை தலித் சுப்பையா பாடல்களுடன் தொடர்ந்து அவரது குழுவில் பயணித்தவர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்வில் பேசியவர்கள் வலியுறுத்தினார்கள்.

பெரியார் முழக்கம் 24022022 இதழ்

You may also like...