கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’
‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘திராவிட மாடல்’ குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகிற போதெல்லாம் அடிக்கடி “திராவிட மாடல்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அது குறித்த பல்வேறு, கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
இந்த நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பு பெறாத மக்கள் கூட்டத்திற்கு அரசின் அனைத்தை யும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற முடிவு, ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டது தான் ‘சைமன் கமிசன்’. அப்போது, தமிழ்நாட்டு அரசியலில், அதாவது சென்னை மாகாண அரசியலில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் (நீதிக் கட்சி) தொடங்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள், பெரும் பணக்காரர்களும், மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தாலும், இயக்கத்தின் நோக்கமாய் அவர்கள் கூறியது, “அனைத்து மக்களுக்குமான சேவைகளை கொண்டு போய் சேர்ப்பது தான்”. இன்னும் சொல்லப் போனால், ‘Fusion of all castes’ அனைத்து ஜாதி களையும் ஒன்றாக்க வேண்டும் என்றுகூட அந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.
முதலில், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் தங்களுக்கான வாய்ப்புகளைத் தான் கொள்கையாக கொண்டிருந்தார்கள். அதில் வெற்றி யும் அடைந்தார்கள். அப்போது யார் கவனத்திற்கும் வராமல் இருந்த கோவில் சொத்துக்களை, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற நீதிக் கட்சி தான் கவனத்தில் கொண்டது. இதற்கான சட்டங் களை அவர்கள் ஆட்சிக்கு வந்த சில ஆண்டு களிலேயே நிறைவேற்றினார்கள். பெண்களுக்கான உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்பு, பார்ப்பனரல்லாத மக்களை பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்து அமைத்தல். அவர்களுக்கான மருத்துவக் கல்வி இடங்களை பிரித்துக் கொடுத்தல். அதில், சென்னை மாகாணத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சமமான எண்ணிக்கை கொண்ட மருத்துவர்கள் வர வேண்டும் என்று எண்ணினார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தையும் பார்க்கலாம். திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றும் போது கூட பெரியார் கூறினார், “இதற்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமலிருந்தால் சூத்திரர் கழகம் என்றுதான் அழைத்திருக்க முடிந்திருக்கும்” என்றார். அப்படி, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டிருந்த சூத்திர, பஞ்சம மக்களுக்கு மற்ற சமுதாயத்தினரைப் போன்ற சமநிலையை எய்துவதற்கு அந்த இயக்கம் (பார்ப்பனரல்லாதார் இயக்கம்) நீதிக்கட்சி தொடங்கி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்கள் செய்தே வந்திருக்கின்றன. அதை ஒவ்வொரு துறையிலும் செய்தே வந்திருக்கின்றனர்.
பெண்களை அதிகாரப்படுத்துதல்,அதிலும் முக்கியமான ஒன்று, 1925களில் நீதிக்கட்சி ஆணை யில் மருத்துவ படிப்புகளில் 25ரூ பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள். அப்போதுருந்த கல்வி கற்ற பெண்களை கணக்கில் கொண்டு வைத்திருந்திருக்கலாம். இப்போது 50ரூ ஆக உயர்ந்திருக்கிறது. 33ரூ நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்போதிருந்தே இந்த செய்திகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. இப்படி அரசின் திட்டங்கள் போய்ச் சேராத மக்கள் கூட்டத் திற்கு அதைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும், அவர்களை உயர்த்த வேண்டும், குடும்பத்தில் அதிலும் அடிமையாக இருக்கக் கூடிய பெண்களை உயர்த்த வேண்டும் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாக்குகிற திட்டம்தான் “திராவிட மாடல்” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த நாட்டில் மொழி மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழ் மொழி மீது வட மொழி ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழை விட தகுதி குறைந்த அல்லது வரலாறு இல்லாத சமஸ்கிருதம் உயர்த்திப் பேசப்பட்டது. அதிலிருந்து சமஸ்கிருதத் தையும், தமிழையும் பிரித்து அமைத்ததும்கூட திராவிடர் இயக்கம்தான். மொழியிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். மற்றொன்று, தமிழ்நாட்டில் தொழிற்சாலை வசதிகள் என்பது சமமாக வளர்ந்துள்ளது. ஒரு பக்கம் மட்டும் தொழிற்சாலைகள் வளர்ந்து மற்றொரு பக்கம் தொழிற்ச்சாலைகள் இல்லாமல் கிராமங்களாக எங்கும் இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் இணைந்து வளர வேண்டும் என்று பல திட்டங்கள் திராவிடர் இயக்கத்தால் கொண்டு வரப் பட்டுள்ளன. இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக குறிப்பிடுகின்ற சொல்லாகத்தான் “திராவிட மாடல்” என்ற சொல்லை நாம் பார்க்க வேண்டும்.
அனைத்து தரப்பினருக்கும், அனைத்தும் போய் சேர வேண்டும். அனைத்து பகுதிகளும் ஒரே சமயத்தில் வளர வேண்டும். பெண்களை அதிகாரப் படுத்த வேண்டும் என்பவற்றையெல்லாம் சேர்த்துத் தான் தமிழ்நாடு முதல்வர் ‘திராவிட மாடல்’ என்று குறிப்பிடுகிறார்.
இவைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையும் ஆகும். மாநில உரிமைகள் என்று பார்க்கிற போது, பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார், அடுத்து அண்ணா, தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களை இணைத்து, பிரிந்து செல்லக்கூடிய சம உரிமை உடைய ‘திராவிட சமதர்மக் கூட்டரசாக’ இருக்க வேண்டும் என்று அறிவித்தார். அரசியலமைப்பு சட்டத்திற்கு அது ஒத்துப்போகாத காரணத்தால், சட்டப்படி அதை தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதால் “மாநில சுயாட்சி” என்பதாக குறைத்துக் கொண்டு அரசியல் பணிகளை திமுக செய்யத் துவங்கியது. அதே தான் இப்போதும் ஒவ்வொன்றிலும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை தற்போதைய முதல்வர் செய்து கொண் டிருக்கிறார். இவை அனைத்தையும் இணைத்த சொல்லாகத்தான் “திராவிட மாடல்” என்ற சொல்லாக நான் கருதுகினேன்.
பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
“திராவிட மாடல்” என்ற சொல் தற்போது தமிழ்நாட்டில் மிக முக்கியமாக பேசப்படுகின்ற ஒரு சொல்லாக மாறி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் “திராவிட மாடல்” என்ற கோட் பாட்டை முன்னிறுத்தி தொடர்ச்சியாக பேசி, செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலமாக “திராவிட மாடல்” என்ற சொல் பேசு பொருளாக மாறிய பிறகு இது குறித்து பல கேள்விகளும் எழுப்பப் படுகின்றன. “திராவிட மாடல்” என்பதற்கு ஏதேனும் கோட்பாடுகள், வரை யரைகள் இருக்கின்றனவா? திராவிட இயக்கங்கள் மக்களுக்குச் செய்த சமூக சீர்திருத்தங்கள் அல்லது சமூக மாற்றத்தை முன்னிறுத்தி அதையே ஒரு கோட்பாடு என்று கூற முடியுமா ? என்ற கேள்வி சில முகாம்களிலிருந்து எழுப்பப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
“திராவிட மாடல்” என்பதற்கான கோட்பாட்டு உருவாக்கம், அதற்கான நடைமுறை செயல்பாடுகள், இவைகளெல்லாம் தத்துவ ரீதியாக நூல்களில் எழுதப்பட்டவை அல்ல. இவைகள் நடைமுறை களிலிருந்து, சமூக எதார்த்தத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை. இந்தியா என்ற பல பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில், அனைத்து இன மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும். அந்த மக்களிடையே சமத்துவம் பரவலாக்கப்பட வேண்டும். பரவலாக்கு கின்ற போது, யார் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்களோ, அவர்களை நோக்கிய, அவர்களை அதிகாரமளிக்கக்கூடிய, அவர்களை மேம்படுத்தக் கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் “திராவிடர் இயக்கம்” என்பதே 1916இல் உருவாக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்ற கோட்பாட்டை அறிமுகப் படுத்தியது.
அதைத் தொடர்ந்து, பண்பாட்டுத் தளங்களிலும் திராவிடர்கள், அடிமைப்படுத்தப்படுகிற புள்ளிகளை கண்டறிந்து அவைகளை அதிலிருந்து மீட்டெடுப் பதற்கான பல சமுதாய மாற்றச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் நடந்து வந்த காமராசர் – தி.மு.க. ஆட்சிகளில், ஒரு உண்மை கண்டறியப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு தேசிய இன மக்கள் வாழ்கிற இடத்தில், ஒவ்வொரு இனமும் சமத்துவமாக வாழ்கிறதா ? என்ற கேள்விக்கு இல்லை என்பது பதிலாகிவிட்டது. காரணம் ஜாதியால் அவர்கள் பிரித்து இருக்கின்றனர். வாழ்கின்ற பகுதியால் பிளவுபட்டு நிற்கிறார்கள். ஆக, ஜாதிப் பிளவு, சமூகப் பிளவு இவைகளை சரி செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்? என்கிறபோது, அவர்களை கல்வியில் அதிகார மளித்தல், வேலை வாய்ப்பில் அதிகாரமளித்தல் என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துடன் தான் அது துவங்கியது. அதற்குப் பிறகு அது படிப்படியாக செழுமைப் பெற்று வளர்ச்சியடைந்து அது சமூகத் தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ந்து சமூக சமத்துவ திட்டங்களும் வந்தன. சமூக நலத் திட்டம் என்பது, விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை தேவை களுக்கான வாழ்வுரிமையை மீட்டெடுத்துத் தருதல். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவை களெல்லாம் இலவச திட்டங்கள்; மக்களை இலவசமாக்குகிறார்கள், என்று குற்றம் சாட்டி னார்கள். உண்மையில் அவைகள் மக்களை இலவச மாக்கவில்லை. மக்களை சுயமரியாதைக்காரர்களாக, மக்களை அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்காதவர் களாக மாற்றியது.
அதற்குப் பிறகு தொழில் வளர்ச்சி வந்தது, பெண்ணுரிமை, சட்டங்கள் வந்தன. கோட்பாடு களாக பரிணாமம் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இன்றைக்கு “திராவிட மாடல்” என்பது இட ஒதுக்கீடு மட்டுமல்ல, இட ஒதுக்கீடு, மாநிலங்களின் தன்னாட்சி, பெண்களுக்கான உரிமை, இட ஒதுக்கீட்டிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடிய உள் ஒதுக்கீடுகள், பிற மொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழர்களை அடிமைப் பண்பாட்டில் இருந்து விடுவித்து அவர்களை சமத்துவப் பண்பாட்டை நோக்கி நகர்த்துதல் அனைத்தும் உள்ளடங்கி யிருக்கின்றன. இவை யெல்லாவற்றையும் விட மாறி வரும் உலகமயமாக்கல் சூழலில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டை ஒரு வளமான மாநிலமாக பொருளாதார ரீதியாக வளர்த்தெடுப்பது என்ற முக்கிய கோட்பாடும் இருக்கிறது. இவைகளை உள்ளடக்கித் தான் “திராவிட மாடல்” என்ற கோட்பாட்டை முதலமைச்சர் முன்னிறுத்தி இருக்கிறார், என்றார் விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் 14042022 இதழ்