இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?
கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
21ஆம் நூற்றாண்டில்கூட இலங்கையின் பொருளாதார எதிர்காலம் தேயிலை, ரப்பர், ஏலம், மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியைச் சுற்றியே தொடர்ந்து பிணைந்திருக்கிறது. தேயிலை – ரப்பர் போன்ற பிரதான பொருள்களின் ஏற்றுமதி, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், வெளிநாடுவாழ் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த வருமானம் ஆகியவற்றின் மூலமே அது தனக்குத் தேவைப்பட்ட அன்னியச் செலாவணியைப் பெற்றுவந்தது. அந்த அன்னியச் செலாவணியைக் கொண்டுதான் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டது.
இருபத்தாறு ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் 2009இல் இராணுவ ஒடுக்குமுறையில் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
2013-க்குப் பிறகு உலக அளவில், பண்டங்களுக்கான சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் இலங்கையின் பொருளாதாரமும் வீழ்ந்தது, ஏற்றுமதி மந்த கதியை அடைந்தது, இறக்குமதி அதிகரித்தது.
இந்தச் சூழலில்தான், அரசின் நிதிநிலைப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5ரூ-க்கும் குறைவாக 2011-க்குள் கட்டுப்படுத்தப்படும் என்கிற உறுதிமொழியின் பேரில் 2009இல் பன்னாட்டுச் செலாவணி நிதியம் கடன் கொடுத்தது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காமலும் ஏற்றுமதி உயராமலும், அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து கரைந்துவந்த வேளையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) தலைமையிலான கூட்டணி அரசு 150 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் கேட்டு பன்னாட்டுச் செலாவணி நிதியத்தை 2016இல் அணுகியது. இந்தக் கடனை 2016 முதல் 2019 வரையில் தருமாறு கோரியது. 2020-க்குள் அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக்குறை அளவு ஜிடிபியில் 3.5ரூ அளவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளால் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. 2015இல் 5ரூ-ஆக இருந்த ஜிடிபி 2019இல் 2.9ரூ-ஆகக் குறைந்தது. 2015இல் 31.2ரூ-ஆக இருந்த முதலீட்டு விகிதம் 2019இல் 26.8ரூ-ஆக சரிந்தது. 2015இல் 28.8ரூஆக இருந்த சேமிப்பு விகிதம் 2019இல் 24.6ரூ-ஆகக் குறைந்தது. 2016இல் அரசின் வருவாய் ஜிடிபியில் 14.1ரூ-ஆக இருந்தது 2019இல் 12.6ரூ-ஆகக் குறைந்தது. அரசின் மொத்தக் கடன் அளவு 2015இல் ஜிடிபியில் 78.5ரூ-ஆக இருந்தது, 2019இல் 86.8ரூ ஆக அதிகரித்தது. இலங்கைப் பொருளாதாரத்துக்கு 2019இல் மேலும் இரண்டு புதிய அதிர்ச்சிகள் ஏற்பட்டன.
முதலாவது, 2019 ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரிலும் பிற இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் 253 பேர் உயிரிழந்தனர். இச்செய்தி ஏற்படுத்திய அச்சத்தால் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வருவது வெகுவாக வீழ்ச்சி அடைந்தது.
இரண்டாவது, 2019 நவம்பரில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்தது. கோதபய ராஜபட்ச தலைமை யிலான இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. “வரி விகிதங்களைக் குறைப்போம், விவசாயிகளுக்குச் சலுகைகளை அளிப்போம்” என எஸ்எல்பிபி தேர்தலில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றிருந்தது. இந்த வாக்குறுதிகள் இலங்கைக்குக் கடன் கொடுத்த பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு நேர் எதிரானவை. 2020இல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று, அதனால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நிலைமை படுமோசமான நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டது.
இலங்கை ஆண்டுதோறும் உர மானியமாக 26 கோடி அமெரிக்க டாலர்களை (ஜிடிபியில் 0.3ரூ) செலவிட்டு வந்தது. பெரும்பாலான உரம் இறக்குமதி மூலம்தான் பெறப்பட்டது. இறக்குமதியால் செலவாகும் அன்னியச் செலாவணிகளை மிச்சப்படுத்த கோத்தபய அரசு – அதேசமயம் மிகவும் வினோதமான முடிவை எடுத்தது. 2021 மே முதல் வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதிசெய்யப்பட மாட்டாது என்று அறிவித்தது. ஒரே நாளில் இலங்கை முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
ரசாயன உரங்கள் பயன்பாட்டை ஒரேயடியாகக் கைவிட்டுவிட்டு இயற்கை விவசாய முறைக்கு மாறினால் சாகுபடி கணிசமாகக் குறைந்து அத்தியவாசிய உணவுப் பொருள்களுக்கே கடும் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்படும் என்று வேளாண் விஞ்ஞானிகள் உள்பட அனைவரும் கோத்தபயவை ஒரே குரலில் எச்சரித்தனர். நெல் சாகுபடியில் 25ரூ, தேயிலைச் சாகுபடியில் 35ரூ, தென்னைச் சாகுபடியில் 30ரூ வீழ்ச்சி அடையும் என்று கூட்டாக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
பவுத்தத்துடன் சிங்கள பேரினவாதமும் கைகோர்த்தக் காரணத்தால் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அரசியல் தீர்வு காண மறுத்தது இலங்கை அரசு. அதனால் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. மதவாதம், தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்குவதால் நாடே பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிடும் என்ற பாடத்தை இலங்கை நெருக்கடி உணர்த்துகிறது. இந்துத்துவா ஆட்சி இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமா?
பெரியார் முழக்கம் 07042022 இதழ்