ரோஸ்மேரி – ஆவியுடன் பேசி, இசையமைத்தாரா? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (1)
‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.
சென்னை உச்சநீதிமன்ற பதவியிலிருந்த வெ. இராமசுப்பிரமணியம், பதவியில் இருக்கும் போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அறிவியலையே கேள்விக் குள்ளாக்கும் தொடர் கட்டுரை ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதினார். பிறகு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கிறார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய சட்டக் கடமையி லிருந்து விலகி, ‘அறிவியலுக்கு அப்பால்’ அற்புதங்களைத் தேடிய அவரது கட்டுரைத் தொடர் பிறகு நூலாகவும் வெளியிடப் பட்டது. நீதிபதி எடுத்து வைத்த கருத்துகள் அறிவியலா? அறிவியல் என்ற பெயரில் பரப்பப்பட்ட கற்பனைச் சரடுகளா? இந்தக் கேள்விகளுக்கு ஆணித்தரமான மறுப்பைத் தருகிறது இக்கட்டுரை. முக்கியத்துவம் பெற்ற இக்கட்டுரையை அறிவியலில் பகுத்தறிவில் உடன்பாடு உள்ள அனைவரும் மக்களிடம் பரப்ப வேண்டும். – ஆசிரியர்
நூலின் பெயர் “அறிவியலுக்கு அப்பால்”. 2014ஆம் ஆண்டு வெளி வந்தது. அறிவியலால் விடை கூறமுடியாத புதிர்களாக அவர் தொகுத்த பட்டியலுக்கு மறுப்பு.
புதிர் 1: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஸ் மேரி பிரவுன் என்பவர், மறைந்த இசைக் கலைஞர்கள் பலரின் ஆவியோடு பேசி அவர்களின் இசையை உள்வாங்கி இசை யமைத்தார். இத்தனைக்கும் அவர் இசை கற்கா தவர். இன்று வரை அவர் எப்படி இசையமைத் தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
விடை: 1994இல் ராபர்ட் கரோல் தொகுத்த “The Skeptics Dictionary”யில் (கேள்வி கேட்போர் அகராதி) இதற்கான விடை உள்ளது. எல்லோரும் சொல்வதை போல, ரோஸ் மேரி பிரவுன் இசை தெரியாத வரல்ல. அவர் 2 ஆண்டுகள் இசை பயிற்சி பெற்ற தகவலும் இந்த அகராதியில் உள்ளது. அது மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமே இசைக்குடும்பம் என்பதையும் அவர் மறைத்துள்ளார். 1989இல் வேரன் ஜோன்ஸ் எழுதிய “Anomalistic Psychology – A Study of Magical Thinking” என்ற நூலில் ரோஸ் மேரி பிரவுனின் இசைகளை ஆய்வு செய்து, அது அவருடைய ஆழ்மனதில் இருந்து வந்தவையே தவிர, ஆவிகளோடு பேசி பெறப்பட்டவை யல்ல என்பதை நிரூபித்துள்ளார். 1989லேயே நிரூபிக்கப்பட்ட ஒன்று, 2014இல் நூலை எழுதிய நூலாசிரியருக்கு புதிராகத் தெரிவது விந்தையிலும் விந்தை.
புதிர் 2: ஜூலெஸ் வெர்னே என்ற நாவலாசிரியர் எழுதியவையெல்லாம் அப்படியே பிற்காலத்தில் நடந்துள்ளன. 1870 இல் “Around the Moon” (நிலவைச் சுற்றி என்ற நூலை எழுதினார். அந்நாவலில் அவர் 4 விஷயங்களை எழுதி யிருந்தார். 1. கேப் டவுனில் இருந்து நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும். 2. செயற்கைக் கோள் கோண வடிவில் இருக்கும். 3. அதில் 3 பயணிகள் பயணிப்பார்கள், 4. 39, 600 கிலோ மீட்டர் வேகத்தில் செயற்கைகோள் நிலவை அடை யும். அவர் இவற்றை எழுதி 99 ஆண்டுகளுக்கு பின், இவையனைத்தும் நடந்தன. 1969இல் கேப் டவுனில் இருந்து அப்போல்லோ 11 என்ற கோண வடிவிலான செயற்கைகோள், மூன்று பயணிகளுடன் (எட்வின், ஆர்ம்ஸ்ட்ராங்க், காலின்ஸ்), 38, 500 கிலோமீட்டர் வேகத்தில் நிலவை அடைந்தது. நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆன்மீக சக்தி அவரிடம் இருந்தது.
விடை: எதிர்காலத்தில் நடக்கப்போகும் அறிவியல் மாற்றங்களை முன்கூட்டியே கணிப் பதற்கு ஆன்மீக சக்தி எதுவும் தேவையில்லை. அறிவியல் போகும் திசையை படித்து, கற்று உணர்ந்திருந்தாலே போதும். பெரியார் தன்னுடைய “இனி வரும் உலகம்” (1943) என்ற நூலில் சோதனைக்குழாய் குழந்தை, அலைபேசி போன்ற எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை கணித்து கூறியிருந்தார். இதற்கு காரணம் ஆன்மீக சக்தியல்ல. பெரியார் அறிவியலின் போக்கை உன்னிப்பாக கவனித்ததே காரணம். இது தர்க்கரீதியான பதிலாக இருந்தாலும், ஜூலெஸ் வெர்னே தன்னுடைய கணிப்பைப் பற்றி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.
Strand என்ற இதழில், 1895இல், மரியி பெல்லோக் எழுதிய “வீட்டில் ஜூலெஸ் வெர்னே” என்ற கட்டுரை யில் ஜூலெஸ் வெர்னேவின் பேட்டி பதிவாகி யுள்ளது. எதிர்கால கண்டுபிடிப்புகளை வெர்னே நாவலில் குறிப்பிட்டது தற்செய லானது என்றும், கதைகளை எழுதுவதற்கு முன், புத்தகங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், அறிவியல் அறிக்கைகள் ஆகியவற்றை படித்து விட்டு எழுதியதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இதில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் இல்லை.
(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)
(தொடரும்)
பெரியார் முழக்கம் 31032022 இதழ்