கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்கு கண்டனம் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 2.4 (18000 கோடி)பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட கடனுதவியை இந்திய அரசு சிறிலங்காவுக்கு செய்துள்ளது. இந்நிலையில், மார்ச் 25 அன்று சிறிலங்கா அரசின் அவசர வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு 40,000 டன் டீசல் வழங்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
மார்ச் 17 ஆம் நாள் அன்று சிறிலங்கா அரசுக்கு 1 பில்லியன் டாலர் ( 7500 கோடி ரூ) கடன் கொடுப்பதாக அறிவித்தது இந்திய அரசு. பிப்ரவரி 2 அன்று சிறிலங்கா அரசுக்கு 500 மில்லியன் டாலர் கடன் கொடுக்க உடன்படிக்கை ஏற்பட்டது. அதற்கு முன்னர், எளிய கடன் வசதியாக 400 மில்லியன் டாலர், 515.2 மில்லியன் டாலர் கடன் தொகையைத் திருப்பி செலுத்தவதற்கு கூடுதல் அவகாசம் என கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட கடனுதவியை இந்திய அரசு சிறிலங்காவுக்கு செய்துள்ளது. இந்நிலையில்தான், மேற்சொன்ன 40,000 டன் டீசல் கொடுக்க முன்வந்துள்ளது இந்திய அரசு.
கட்டமைப்புவகை தமிழின அழிப்பு(Structural Genocide) செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு தமிழர் நலன் தொடர்பான எவ்வித நிபந்தனையுமின்றி இப்படி அள்ளிஅள்ளி கொடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
சிறிலங்காவில் வரலாறு காணாத பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இனவெறி அரசியலால் ஏற்பட்ட படைச்செலவு, கட்டுங்கடங்காத ஊழல், கழுத்தை நெரிக்கும் கடன் ஆகியவற்றால் ஏற்பட்ட நெருக்கடி இது. இந்த பொருளியல் நெருக்கடி மிகப்பெரிய அரசியல் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதனால், ஆளும் கோத்தபய இராசபக்சே அரசுக்கு எதிராக சிங்கள மக்களிடையே மிகப் பெரிய எழுச்சிப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சிங்கள ஆளும்வகுப்பு ஆற்றல்களுக்கு இடையேயான முரண்பாடும் தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில், இனவழிப்பு சிறிலங்காவை( Genocidal Sri Lankan State) ஆட்சி செய்துவரும் கொலைகார இராசபக்சேக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய அரசின் கடனுதவிகள் பயன்படப் போகின்றன.
இத்தகைய பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போதும்கூட தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்குப் பகுதியில் இன்றைக்கும் சுமார் 2 இலட்சம் சிங்களப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு, பன்னாட்டு உடன்படிக்கைகளைமீறி தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்றும் வரலாற்றுத் தாயகம் என்பதற்கான சான்றுகளைச் சிதைக்கும் நோக்கிலேயே தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித்திட்டம், வனத்துறை, வனவிலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை செயல்பட்டு வருகிறது என்றும் தமிழ் கிராமங்களின் எல்லைகளை மாற்றியமைப்பதன்மூலம் சிறிலங்கா அரசு இன விகிதாச்சாரத்தில் மாற்றம் கொண்டுவருகிறது என்றும் தமிழ்த் தலைவர்கள் கடந்த மாதம் இந்திய தூதரகத்திடம் கொடுத்த கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
மாந்தவுரிமைக்களுக்கான ஐ.நா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரி 27 நாளிட்ட A/HRC/46/20 அறிக்கையில் அனைத்தளாவிய அல்லது எல்லைக்கடந்த மேலுரிமை அல்லது அதிகார வரம்புக்கான (extraterritorialial or Universal Jurisdiction) கோட்பாடுகளின் அடிப்படையில், உறுப்பரசுகள் தமது நாட்டில் சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்த அனைத்துத் தரப்பினர் மீதும் உள்நாட்டுப் புலனாய்வு செய்யமுடியும் என்றும் மோசமான மாந்தவுரிமை மீறல்களைச் செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான பயணத் தடைகள், சொத்துமுடக்கம் குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டிருந்தார். கோத்தபய இராசபக்சே ஆட்சிக்கு வந்த பிறகு, மீளிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும், மாந்த உரிமைகளையும் பாதிக்கக்கூடிய போக்குகளான குடியியல், அரசுப் பணிகளைப் படைமயமாக்குவது, மாந்தவுரிமை மீறல்களுக்கும் குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறுவதற்கு ஏற்படுத்தப்படும் அரசியல் தடை, பெரும்பான்மைவாத மற்றும் ஒதுக்கி வைக்கும் சொல்லாட்சிகள் உள்ளிட்ட ஆறு போக்குகளைச் சுட்டிக்காட்டினார்.கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஓராண்டு காலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அதே மோசமான இராணுவச் சூழல் நீடிக்கிறது என்றும் இப்போது நடந்துவரும் ஐ.நா. மாந்தவுரிமைக் கூட்டத் தொடரிலும் ஆணையர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொத்துகொத்தாய் தமிழர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களுக்கான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு காண தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2013 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தும் சட்டப்பேரவை தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள ஈழ விடுதலை ஆற்றல்கள் அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளங்களில் சிறிலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் (Boycott Sri Lanka) என்று தொடங்கிய இயக்கம் இதற்கு உந்துதலாக அமைந்தது. இவற்றையெல்லாம் இந்திய அரசு கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமலே சிறிலங்கா தொடர்பான அரசியல் முடிவுகளை எடுத்துவந்தது. தமிழ்நாட்டு மக்களின் கருத்தை மதிக்காத வழக்கமான எதேச்சதிகார ஒற்றையாட்சிப் போக்கின் தொடர்ச்சியாக சிறிலங்காவுக்கு அடுக்கடுக்கான கடனுதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
மிகப்பெரிய பொருளியல் நெருக்கடியை சிறிலங்கா சந்தித்து கொண்டிருக்கிறது என்பது உண்மையே. அதனால், ஈழத்தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சிறிலங்காவை ஆண்டுவரும் சிங்கள பெளத்தப் பேரினவாத ஆற்றல்களுக்கு தமிழர் நலன் தொடர்பான எவ்வித வெளிப்படையான நிபந்தனைகளும் இன்றி உதவிக்கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. தமிழ் மக்களின் உடனடிக் கோரிக்கைகளான தாயகப் பகுதியில் இருந்து சிங்களப் படை வெளியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துதல், வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியைத் துண்டாடுவது, நிலங்களை அபகரிப்பது ஆகியவற்றை நிறுத்துதல், காணாமலாக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், இந்திய – இலங்கை உடன்படிக்கையின்படி வடக்குகிழக்கை இணைத்து மாகாணசபை தேர்தலை நடத்துவது உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகளைக்கூட இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு விதிக்கவில்லை. வழமைப்போலவே சிங்கள ஆளும் வகுப்பும் இந்திய ஆளும் வகுப்பும் தத்தமது நலங்களின் பெயரால் செய்து கொண்ட ’கொடுக்கல் வாங்கலாகவே’ இது அமைந்துள்ளது.
இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு தரும் கடனுதவிகள் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஈழத்தமிழர்களை இனவழிப்பு செய்வதற்கு உதவுவதே ஆகும், கூடவே தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை காலில்போட்டு மிதிப்பதுமாகும்.
இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றொழித்ததோடு கட்டமைப்புவகை இனவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் கடனுதவி செய்வதை ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
தோழமையுடன்,
கொளத்தூர் தா.செ.மணி
ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தொடர்புக்கு: 99433 59666