சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!
தில்லை சிற்றம்பல மேடையில் தலித் ‘பெண்’ வழிபாட்டு உரிமையைத் தடுத்து நிறுத்திய தீட்சதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தீட்சதர்களை சட்டப்படி கைது செய்யக் கோரியும், நடராசன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வற்புறுத்தியும் சென்னையில் மார்ச் 11, 2022 பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை; ஆனால் நம்பிக்கை யாளர்கள் உரிமைகளைத் தடைப்படுத்துவதை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நம்பிக்கைகள் திணிக்கப்படும்போது அதை கண்டிக்கிறோம். தில்லையில் தலித் பெண் சிற்றம்பல மேடையில் வழிபடுவது அவரது மனித உரிமை; அதைத் தடுப்பது தீண்டாமைக் குற்றம்; மனித உரிமைக்கு எதிரானது; தமிழில் பாடுவது மனித உரிமை; அதைத் தடுப்பது மனித உரிமைக்கு எதிரானது; ஹிஜாப் அணிவதும் அணிய விரும்பாததும் அவர்கள் மனித உரிமை; அதைத் தடை செய்வது மனித உரிமை மீறல் என்று பலரும் விளக்கினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், தில்லை நடராசன் கோயில் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று தீட்சதர்கள் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. அது மக்கள் வரிப் பணத்தில் மன்னர்கள் கட்டிய கோயில் என்று கூறியதோடு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வந்த வழக்குகளை சுட்டிக் காட்டினார்.
தில்லை கோயிலில் 3000 தீட்சதர்கள் சிவபெருமானோடு தேவலோகத்திலிருந்து வந்த ‘பூதேவர்கள்’ என்ற வாதத்தை உச்நீதிமன்றமே ஏற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டினார். மத சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக்கும் 25, 26ஆவது பிரிவுகளை அரசியல் சட்டத்தில் சேர்க்க காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சாமி மேற்கொண்ட திரைமறைவு முயற்சிகளை விளக்கிக் கூறினார். காஞ்சி சங்கராச்சாரியாருடன் நெருக்கமாக இருந்த அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய ‘சங்கரா அன்ட் சன்மதா’ என்ற நூலை கலைமகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் நாடாளுமன்றக் குழு வினரை சென்னை ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தில் ஒரு தேநீர் விருந்துக்கு ஏற் பாடு செய்து, சங்கராச்சாரி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வரவழைத்தார். ‘இந்து’ ஆசிரியர் கஸ்தூரி சீனி வாசன், இதற்கு ஏற்பாடு செய்தார். சங்கராச்சாரி பிரதிநிதியாக தாத்தாச்சாரி இதில் பங்கேற்றார். மதத்தை அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் குழு இந்தியா வந்தபோது சங்கராச்சாரி தூதர்கள் அவர்களிடமும் இதே கருத்தை நேரில் வலியுறுத்தினர். சட்டம் இயற்றப் போவது நாங்கள் அல்ல; நாங்கள் சுதந்திரம் தருவது பற்றி ஆலோசிக்கவே வந்துள்ளோம் என்று கிரிப்ஸ் குழு கூறி விட்டது. பிறகு சட்ட நிபுணர்களைக் கொண்டு மதத்தை அடிப்படை உரிமையில் சேர்த்ததோடு மட்டுமின்றி, மதத்துக்குள் உள்ள ஒவ்வொரு தனித் தனிப் பிரிவும் (denomination) அதன் உட்பிரிவுகளும் (any section there of) அடிப்படை உரிமையின் கீழ் கொண்டு வந்த ஒரு வரைவை தயாரித்தார் சங்கரச்சாரி. பிறகு அரசியல் வரைவுக் குழுவை ஏற்க வைத்தார். இந்த உரிமை மாநிலப் பட்டியலுக்கு போய்விடக் கூடாது; ஒன்றிய அரசுப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று நேருவையே பணிய வைத்தார் என்று பதிவு செய் திருக்கிறார் தாத்தாச்சாரி. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, தில்லை கோயில் தீட்சதர் என்ற தனிப் பிரிவினருக்கு மட்டுமே சொந்தமானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பிரிவுகளே காரணமாக இருக்கின்றன என்று விளக்கினார் விடுதலை இராசேந்திரன்.
தேவாரம் திருவாசகத்தை தில்லை கோயிலுக்குள் முடக்கி பூட்டுப் போட்டார்கள் தீட்சதர்கள். அழியும் நிலையிலிருந்த அந்த ஓலைச் சுவடிகளை மீட்க ராஜராஜன் சென்றபோது அப்பர், சம்பந்தர், ஞானசம்பந்தர் நேரில் வந்தால்தான் தருவோம் என்று அடம் பிடித்தனர் தீட்சதர்கள். பிறகு இராஜ ராஜசோழன் அவர்கள் சிலைகளைக் கொண்டு வந்து காட்டி ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது சிலைகளை ஏற்க மாட்டோம்; நேரில் வரவேண்டும் என்று மீண்டும் அடம் பிடித்தபோது கதவை உடைத்து தேவாரம், திருவாசகத்தை மீட்டெடுத்து இராஜராஜசோழன் பதிப்பித்த கதையை இராஜராஜசோழன் திரைப்படம் கூறியதையும் பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகார மாநிலப் பொருளாளர் அமிர்தா தலைமை வகித்தார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி செந்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ) ரெட் ஸ்டார் இயக்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்க்கி வேலன், புரட்சிகர இளைஞர் முன்னணி சீராளன், தமிழ்தேசிய விடுதலை இயக்கம் மகிழன், மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் உரையாற்றினர்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மயிலை சுகுமார் ஆகியோருடன் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 17032022 இதழ்