பெரியாரியலுக்கு – ஒரு வரலாற்று ஆவணம் (1) – விடுதலை இராசேந்திரன்

  • பெரியார் தமிழ்ப் புலவர்களை இனம் சார்ந்து அரவணைத்தார்.
  • அவர்கள் இருட்டடிப்புக்குள்ளாக்கப் படுவதைக் கண்டு வருந்தினார்.
  • தமிழறிஞர்களின் அறிவாற்றலை மனந்திறந்து பாராட்டினார்.
  • தமிழ் நூல்களை தனது ‘குடிஅரசு’ ஏட்டில் அறிமுகப்படுத்தினார்.

 

ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை.

ப. திருமாவேலன் இரண்டு தொகுதிகளாக 1579 பக்கங்களுடன் வெளி வந்திருக்கிற நூல் “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற ஆவணம், பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுவோர்க்கு பதில் தருவதே இந்த நூலின் நோக்கம் என்று நூலாசிரியர் ப. திருமாவேலன் கூறினாலும் நூலின் உள்ளடக்கத்தை அப்படிச் சுருக்கி விடக் கூடாது. பெரியார் சிந்தனை மற்றும் தத்துவங் களுக்கான ஒரு வரலாற்று ஆவணமாக இது வெளி வந்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் படைக்கும் நூல்களைவிட பத்திரிகையாளர் எழுதும் நூல்கள் மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்று விடுகின்றன என்பது எனது கருத்து. மக்கள் மனதில் நியாயமாக எழக்கூடிய கேள்விகளைப் புரிந்து அவர்களுக்கான மொழிகளில் விளங்க வைக்கும் எழுத்துத் திறன் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. ப. திருமாவேலன் பத்திரிகைத் துறையில் சிறந்த செய்தியாளராக, பத்திரிகை ஆசிரியராக நீண்டகால நீண்ட அனுபவம் நிறைந்தவர். வெகு மக்களுக்கான பத்திரிகைகளிலும் இயக்கங்களின் இலட்சியப் பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். எந்த நிலையிலும் தனது பெரியாரியல் அடையாளத்தோடு சமரசம் செய்து கொள்ளாத நேர்மையாளர். இந்த நூலின் உள்ளடக்கம் அதற்காக தேர்வு செய்த தலைப்புகளே இதை உணர்த்துகிறது. பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்து ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’ பத்திரிகைகளைப் படித்து, பல்வேறு அறிஞர்களின் வரலாற்று நூல்களைப் படித்து ஏராளமான செய்திகளை குவித்துத் தந்திருக்கிறார். தமிழறிஞர்களின் பல வரலாற்று நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார். காலத்தின் தேவையாக இந்த ஆவணத்தை தமிழ் வாசகர்களுக்கு அர்ப்பணித் திருக் கிறார்.

பெரியார் மீது பொறுப்பற்ற அவதூறுகளை சிலர் வீசுவதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்கப்பட வேண்டியதுதான். இந்த எதிர்ப்புகளால் தான் பெரியாரியலுக்கு இப்படி ஒரு வரலாற்று ஆவணம் கிடைத்திருக்கிறது.

முதல் தொகுதி – பெரியார் தமிழ் மொழிக்காக நடத்திய போராட்டங்கள்; தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் முன் வைத்த கருத்துகள்; நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை விரிவாக விளக்கு வதோடு பெரியாருக்கும் தமிழ்ப் புலவர்களுக்கு மிடையே இருந்த நட்பு உரையாடல்கள் குறித்து ஏராளமான தகவல்களை திரட்டித் தந்திருக்கிறது. பெரியாரைப் போற்றிய பெரும் புலவர்கள், பெரியார் போற்றிய தமிழ்ப் பெரியார்கள், பெரியாருடன் இயைந்து வாழ்ந்த பத்து ஆளுமைகள், பெரியாருடன் இணைந்து பணித்த அய்ம்பது புலவர்கள் என்று நான்கு தலைப்புகளில் பெரியார் மற்றும் அவருடன் உறவிலிருந்த தமிழறிஞர்களின் எழுத்துகளிலிருந்தே எடுத்துக் காட்டி விளக்குகிறார் நூலாசிரியர். இதில் நூலாசிரியர் தனது கருத்துகளைத் தவிர்த்து ஆவணங்களிலிருந்தே பதிவுகளை சான்றுகளாக்கி யிருப்பது தான்நூலின் தனித்துவமான சிறப்பு.

தமிழ்ப் பெரியார்களை பெரியார் போற்றிப் பாராட்டி, ‘குடிஅரசு’ இதழ்களில எழுதியவைகளி லிருந்து 40 ஆதாரங்களை எடுத்துக் காட்டி யிருக்கிறார்.

அதில் ஒருவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். மிகச் சிறந்த தமிழ் அறிஞர். தமிழ்த் தேர்வில் அக்காலத்தில் மிக உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர். திருவாடுதுறை மடம், உயர் மதிப்பெண் பெறுவோருக்கு ரூ. 1000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வந்தது. ஆனால் ‘தெ.பொ.மீ.’ பார்ப்பனரல்லாதவராக இருந்த காரணத்தால் நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பரிசுத் தொகை மறுக்கப்பட்டு, ‘பார்ப்பனரல்லாதார் துவேஷத்தோடு’ உ.வே. சாமிநாதய்யருக்கு வழங்கப்பட்டது என்று பெரியார் கண்டித்தார்.  இத்தனைக்கும் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் என்பவர் அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கத்தையும் பெரியாரையும் மிகவும் இழிவு படுத்திப் பேசியவர்; எழுதியவர்; அதற்காகவே பத்திரிகை நடத்தியவர். காங்கிரஸ் கட்சி அவருக்கு ரூ.2000 மாத ஊதியம் தந்து பெரியார் இயக்கத்தைத் தாக்கி எழுத வைத்தது. திரு.வி.க.வின் ‘ஆன்மீகத்தில்’ பெரியாருக்கு மாறுபாடு உண்டு. ஆனாலும் அவரது தமிழ்த் தொண்டைப் பெரியார் பெரிதும் புகழ்கிறார். அவர் நடத்திய நவசக்தி, தேசபக்தன் பத்திரிகைகளைப் படித்துத் தான் நான் தமிழ் எழுதவே கற்றுக் கொண்டேன். நான் தமிழ் பேசுவதும், எழுதுவதும் தமிழ்க் கொலை தான் என்று சுய விமர்சனம் செய்யும் பெரியார், திரு.வி.க.வின் எழுத்துகளைப் படித்தே பத்திரிகையில் எழுத லானேன்; 50 நூல்களையும் எழுத முடிந்தது என்கிறார்.

1938இல் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது. அது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த முழக்கம் என்று எழுதிய ‘குடிஅரசு’ ஒரு சான்றை முன் வைத்தது. தலைமை ஏற்ற மறைமலை அடிகள் மதவாதியின் பிரதிநிதி; பேசிய சோமசுந்தர பாரதியார் காங்கிரஸ் பிரதிநிதி; பேசிய ஈ.வெ.ராமசாமி, பகுத்தறிவாளர்களின் பிரதிநிதி. எனவே தமிழ்நாடு தமிழருக்கே என்பது மிழ் நாட்டின் ஒருமித்த முழக்கம் என்று எழுதியது ‘குடிஅரசு’.

தமிழறிஞர்களிடம் பெரியார் எந்த அளவு நன்மதிப்பு கொண்டிருந்தார்?

“மதங்களைப் பற்றிய நமது கருத்துகளுக்கு எதிராக இடையூறு செய்பவர்களுக்கு எதிர்வாதம் புரிவோருக்கு சுயமரியாதை உணர்வுடைய நமது தமிழறிஞர்கள் மறைமலையடிகள், கா. சுப்ரமணியம் பிள்ளை, திரு.வி.க. போன்றவர்கள், இதற்கு ஆராய்ச்சிபூர்வமாக பதில் தந்து நமக்கு ‘பின்புலமாய்’ இருக்கிறார்கள் என்ற துணிவில் அவர்களை மலைபோல் நம்பி இருக்கிறோம்” என்ற அளவுக்கு பெரியார் எழுதி பெருமைப்படுத்தினார்.

பொன்னம்பலனார் நடத்திய ‘சண்டமாருதம்’ பத்திரிகையை ஆதரித்து அந்த ஏட்டுக்கு சந்தாதாரர் ஆக வேண்டும் என்று பெரியார் வேண்டுகோள் விடுத்தார். பொன்னம்பலனார் சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாக ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு தேவாரம், திருவாசகம், வடலூர் இராம லிங்கனார் பாடல்களை கண்களில் நீர் ஒழுக தேம்பித் தேம்பி அழுது கொண்டே பாடிக் கொண்டிருந்தவர். இப்போது சுயமரியாதைக் கொள்கையின் பக்கம் திரும்பி ‘சண்டமாருதமாக’ எதிரிகளைத் தாக்கி வருகிறார் என்று எழுதினார் பெரியார்.

அக்காலத்தில் வெளி வந்த தமிழ் நூல்கள், அறிஞர்களின் தமிழ் பத்திரிகைகளை ‘குடிஅரசு’ வரவேற்று எழுதி உற்சாகப்படுத்துவதை வழக்க மாக்கிக் கொண்டிருந்தது. பண்டிதர் ஆனந்தம் எழுதிய ‘பாலர் பரிணாமம்’, ராமச்சந்திர செட்டியார் எழுதிய ‘இளைஞர் பாடல்கள்’, தெ.பொ.மீ. மற்றும் தேவநேயன் எழுதிய கால்டுவெல்லின் “ஒப்பியன் மொழி இலக்கணம்”, மாணவர் சிவப்பிரகாசம் எழுதிய புறநானூற்று வீரப் பாடல்கள், புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’, அப்பாத்துரை யாரின் ‘வருங்காலத் தமிழகம்’, அண்ணல் தங்கோவின் இதழான ‘தமிழ்நாடு தமிழருக்கே’, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இலக்கியப் படைப்புகள் என்று ஏராளமான தமிழ் நூல்களை, இதழ்களை வரவேற்றுப் பாராட்டியது பெரியாரின் ‘குடிஅரசு’. திராவிடத்தையும் பெரியாரியலையும் கடுமையாக எதிர்த்த ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) தொடங்கிய ‘தமிழ் முரசு’ மாத இதழையும் பெரியார் வரவேற்று பலரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்று எழுதினார். “ம.பொ.சிவஞான கிராமணியார், காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவரெனினும் தேசியத்தால் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் வந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்” என்று பதிவு செய்திருக்கிறார் பெரியார் (குடிஅரசு 13.7.1946). மாறுபட்ட முகாம்களிலிருந்து தமிழ் – தமிழருக்கு ஆதரவுக்குரல் வந்தாலும் ஓடிச் சென்று அரவணைத்திருக்கிறார் பெரியார்.

பெரியாருடன் இயைந்து வாழ்ந்த பத்து ஆளுமைகள் என்ற மூன்றாவது அத்தியாயம் வ.உ.சி., மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம், இலக்குவனார் தேவநேயப் பாவாணர், அண்ணல் தங்கோ, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பெரியாருக்கு இருந்த நெருக்கமான உறவுகளை விரிவாக அலசுகிறது. அத்தனையும் பெரியார் எழுத்து, தலைவர்களின் வரலாற்று நூல்களிலிருந்து மேற்கோளாக எடுத்தாளப்பட் டிருக்கின்றன.

பெரியாரோடு முதலில் உடன்பட்டு பிறகு மாறுபட்டு விலகியவர்கள் இறுதி காலத்தில் பெரியார் தொண்டின் மகத்தான தனித்துவத்தை அங்கீகரித்து பாராட்டியே மறைந்திருக்கிறார்கள். குறிப்பாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழர்க் கழகம்’ என்று பெயர் சூட்ட வலியுறுத்திய அண்ணல் தங்கோவை குறிப்பிட வேண்டும். சில தமிழ்த் தேசியங்கள் பெரியாருக்கு எதிராக அண்ணல் தங்கோவை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ‘திராவிட நாடு’ என்ற சொல்லை அண்ணல் தங்கோ இறுதி வரை உறுதியாக எதிர்த்தாரே தவிர, திராவிட இயக்கக் கொள்கைகளில் அவர் பற்றுக் கொண்டிருந்ததோடு, பெரியார், அண்ணா, கலைஞர் என்று திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமும் உறவும் கொண் டிருந்தார்.

பெரியார் மறைவுக்கு முன் வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அண்ணல் தங்கோவும் அதே மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்டிருந்தார். பெரியாரை நேரில் சந்திக்க அவர் மிகவும் வற்புறுத்திய நிலையில், நடமாட முடியாத நிலையிலிருந்த அண்ணல் தங்கோவை மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. பெரியார் மறைவுச் செய்தி கேட்டு கண்கலங்கினார். 1968இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணாவின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார். பராசக்தி படத்தில் இறுதியாக வரும் “எல்லோரும் வாழ வேண்டும்; உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்” என்ற பாடல் அண்ணல் தங்கோ எழுதியதுதான் என்று கலைஞர் ‘முரசொலி’ ஏட்டில் (17.1.2004) பதிவு செய்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு குடியாத்தம் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய கலைஞர், “தனித் தமிழைப் பரப்புவதற்காக அரும்பாடுபட்ட அண்ணல் தங்கோ வாழ்ந்த ஊர் இந்த ஊர். அவரும் நானும் குடியாத்தம் ஆற்று மணலில் நடந்த பொதுக் கூட்டங்களில் பலமுறை பேசியிருக்கிறோம்” என்று நினைவு கூர்ந்தார்.

திராவிடர் கழகத்திலிருந்து அவர் 1944இல் விலகினாலும் உறவைத் துண்டித்துக் கொள்ள வில்லை. பெரியார் தமிழினத்தை சீரழித்தார் என்று சேறுவாரித் தூற்றவில்லை. 1952இல் அவர் எழுதிய “மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?” என்ற நூலைப் படித்தால் பெரியார் மீதும் திராவிடர் இயக்கத் தலைவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றையும் மதிப்பையும் உணர முடியும். “தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, தனது தளர்ந்த வயது முதிர்ந்த காலத்திலும் இரவென்றும் பகலென்றும் காலையென்றும் பிறவென்றும் கருதிப் பார்க்காமல் இன்றைக்குத் தான்  இருபது ஆண்டு நிறைவுப் பெற்ற இளங்காளைத் தமிழ்மகன் போல் துணியை இழுத்திழுத்துக் கட்டிக் கொண்டு இளைஞர்கள் யாம் என்பார்கூட வெட்கப்படும்படி ஒரு சிறிதளவும் ஓயாது உட்காராது ‘உசு’ என்று படுக்காது, வாழ்க்கைத் துணை நாடிச் சாயாது, தனி வண்டி, தனி வகுப்பு நாடாது, ஆரியத்தைப் பார்ப்பனியத்தை – காந்தியத்தை – கடவுளியத்தைச் சமய வலைச் சிக்கலை இவைகளால் உண்டாகும் தொல்லைகளை எதிர்த் தெரித்துப் போராடி வரும் பேராண்மையாளர்” என்று பெரியாரைப் பற்றி உணர்ச்சி வரிகளால் தனது நூலில் எழுதியவர்தான்அண்ணல் தங்கோ. ‘தமிழர் கழகம்’ என்ற பெயர் சூட்ட வேண்டும் என்ற கருத்தைத் தவிர அவர் திராவிடர் கழகத்தைத் தூற்றவில்லை; ‘திராவிடர்’ என்று பேசியவர்களை பிராண்டவில்லை.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 17022022 இதழ்

You may also like...