மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு
‘மாட்டிக்கிட்டாரு, அய்யரு மாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலை காஞ்சி ஜெயேந்திரன், சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதையொட்டி தலித் சுப்பையா எழுதினார். இந்தப் பாடல் பிறந்த வரலாற்றை அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கார்த்திக் சென்னையில் நடந்த படத்திறப்பு நிகழ்வில் விளக்கினார்.
“2004ஆம் ஆண்டு எங்கள் குழு டெல்லிக்குப் பயணமானது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது டெல்லியில் இரட்டை வாக்குரிமை, தனியார் துறை இடஒதுக்கீடு சுய நிர்ணய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்தப் போனோம். பயணத்தில் சங்கராச்சாரி கைது பற்றிய செய்தி கிடைத்தது. உடனே இந்த ஜெயேந்திரனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமே என்று சுப்பையா கூறினார். அது குறித்து சிந்தனையில் மூழ்கினார். டெல்லிக்குப் போனவுடன் ஓர் இரவு முழுதும் கண் விழித்து, ‘மாட்டிகிட்டாரு; அய்யர் மாட்டிகிட்டாரு’ என்ற பாடலை எழுதி மெட்டும் போட்டார். அடுத்த நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் அப்பாடலைப் பாடியபோது அரங்கம் அதிரும் அளவுக்கு கைதட்டல். மாநாட்டைத் திறந்து வைக்க வந்த வி.பி. சிங், கரவொலியைக் கேட்டு எதற்காகக் கை தட்டுகிறார்கள் என்று விசாரித்தார். ஆங்கிலத்தில் சங்கராச்சாரி கைது – கைதின் பின்னணி அவரிடம் விளக்கப்பட்டவுடன், மிகவும் உற்சாகமடைந்த வி.பி. சிங், மீண்டும் ஒரு முறை பாடச் சொன்னார். அப்போதும் கை தட்டல். பாடலைப் பாராட்டி ரூ.5000/- நிதியை குழுவினருக்கு வழங்கினார். தொடர்ந்து பல தலித் தலைவர்கள் பாடலை வரவேற்று மேடையில் நிதி வழங்கினார். அடுத்த நாள் மாநாட்டிலும் அதே பாடல்களைப் பாடச் சொன்னார்கள்! என்று கார்த்திக் விளக்கினார்.
பெரியார் முழக்கம் 24022022 இதழ்