தமிழை இலக்கியத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக தாங்கிப் பிடித்தவர் பெரியார் (2) – விடுதலை இராசேந்திரன்
- தன்னுடன் கருத்து முரண்பட்ட சகஜானந்தா, டி.கே. சிதம்பரனார் போன்ற அறிஞர்களுடன் நட்பு பாராட்டி உரையாடினார் பெரியார்.
- தீவிர சிவபக்தர் ‘கா.சு.’ பிள்ளை இறுதிக் காலத்தில் மாதந்தோறும் பணம் அனுப்பி உதவினார் பெரியார்.
- தேவநேயப் பாவாணரின் நூலை சுமந்து சென்று கூட்டங்களில் விற்றார். திராவிட மொழி ஞாயிறு என்ற பட்டத்தை வழங்கி யவர் பெரியார். சில தமிழ் தேசியர்கள் திராவிடம் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி ‘மொழி ஞாயிறு’ என்று சுருக்கி விட்டனர்.
ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை.
நான்காவது அத்தியாயம் – பெரியாருடன் இணைந்து பணியாற்றிய 50 புலவர்களுடன் பெரியாருக்கு இருந்த நெருக்கமான உறவுகளை விரிவாக அலசுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) மிகச் சிறந்த தமிழ் அறிஞர்; சட்டம் படித்தவர். நீதிபதி பதவிக்கு தகுதியிருந்தும் நீதிக்கட்சியில் ஈடுபாடு காட்டியதால் பதவி கிடைக்கவில்லை. தீவிர சிவபக்தர். கடைசி மூச்சு நிற்கும் வரை தினந்தோறும் மணிக்கணக்கில் சிவபூஜை செய்தவர். இறை நம்பிக்கையற்ற பெரியார், அவரைத் தமிழர் என்பதற்காக போற்றினார். இறுதி காலத்தில் பக்கவாத நோய்க்கு உள்ளாகி துன்புற்ற போது பெரியார் மாதந்தோறும் 50 ரூபாய் பணம் அனுப்பி உதவினார். இறை மறுப்புக் கொள்கை உடைய பெரியார் தானே உதவ முன் வந்தார் என்று உருக்கமாக எழுதுகிறார், மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு.
கம்ப ராமாயணத்தை தீவிரமாக ஆதரித்தவர் டி.கே. சிதம்பரநாதன் (டி.கே.சி.); அதைக் கொளுத்தச் சொன்னவர் பெரியார்; ஆனாலும் இருவரிடமும் நல்ல உறவு இருந்தது. ஒரு நாள் குற்றால மலைச் சாரலில் நண்பர்களுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த டி.கே.சி.யின் வீட்டுக்கு வருகிறார் பெரியார். பெரியாருக்கு குறள் குறித்து சில விளக்கங்களைத் தருகிறார். பெரியார் அதைக் கேட்டு, “உங்களைப் போல எந்தப் புலவரும் தெளிவாக விளக்கம் சொல்வதில்லையே” என்ற பெரியாரிடம், “நீங்கள் ஒரு இலட்சியத்தில் நின்று உழைக்கிறீர்கள், அதனால் விளங்குகிறது; ஏமாற்றிப் பிழைப்பவர் களுக்கும் சோம்பேறிப் பயல்களுக்கும் குறள் விளங்காது. உங்களிடம் இலட்சியம் இருக்கிறது; உண்மை இருக்கிறது; செயல் வடிவம் இருக்கிறது; எனவே குறள் விளங்குகிறது” என்கிறார். டி.கே.சி.யின் அறுபதாவது பிறந்த நாள் (சஷ்டியப்பூர்த்தி) இலஞ்சி குமாரரர் முருகன் கோயிலில் நடந்தது. கோயிலில் விழா நடப்பதால் போக வேண்டாம் என்று பெரியாரிடம் சொன்னார்கள். “அறுபதாம் கல்யாணம் டி.கே.சி.க்குத் தான் நடக்கிறதே தவிர, முருகனுக்கா நடக்கிறது?” என்று கேட்டுவிட்டுக் கோயிலுக்குள் போனார் பெரியார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த சகஜானந்தா 17 வயதில் துறவறம் பூண்டவர் தீண்டாமை ஒழிப்புக்கு ஒழுக்கத்தையும் தூய்மை யையும் தீண்டப்படாதவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பேசியவர். சிவப்பிரகாச முனிவரின் சீடர்; வ.உ.சி.யின் மாணவர். இவரது கொள்கையை கடுமையாக விமர்சித்தவர் பெரியார். ஆனாலும் அவரது தாழ்த்தப்பட்ட சமுதாயத் தொண்டுக்கு துணையாக இருந்ததோடு அவரது உரைகளை ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார். இவர் உருவாக்கிய சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்துக்கு அரசு நிதி நிறுத்தப்பட்டதை பெரியார் கண்டித்தார். “நூலகங்களில் கறுப்புச் சட்டைக்காரர்களின் நூல்களை வைத்து விடாதீர்கள்” என்று சட்ட மன்றத்தில் பேசியவர் சகஜானந்தா. அதற்காக அவர் மீது பகைமை காட்டவில்லை. அவர் மறைந்த போது அவரது கல்வித் தொண்டுகளைப் பாராட்டி எழுதினார் பெரியார். திராவிடர் கழகத் தோழர்கள் அவரது ‘ஆன்மீக’ உடலுடன் இடுகாடு வரை நடந்து சென்று மரியாதை செலுத்தினர்.
சகஜானந்தரின் எழுத்து பேச்சுகளைத் தொகுத்து வெளியிட்ட பூவிழியன், பெரியாரின் பாராட்டுரை களையும் இணைத்துள்ளார். ஆன்மீகத்தில் சைவத்தில் மூழ்கிய ஞானியார் அடிகள், மறைமலையடிகள், குன்றக்குடி அடிகளாருடன் பெரியார் நட்பு பாராட்டினார். அந்தப் பட்டியலில் சகஜானந்தரும் ஒருவர்.
தேவநேயப் பாவாணருக்கு ‘திராவிட மொழி ஞாயிறு’ என்ற பட்டத்தைத் தந்தவர் பெரியார். ஆனால், பிறகு சில தமிழ்த் தேசியர்கள் நேர்மையின்றி ‘திராவிட’ என்ற வார்த்தையை அகற்றி மொழி ஞாயிறு என்று மட்டும் பாவாணரை விளிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலை பெரியாரே எடுத்துச் சென்று தனது கூட்டங்களில் மக்களிடம் விற்பனை செய்தார்.
நான்காவது அத்தியாயத்தில், பெரியாரின் ‘மொழி’ குறித்த கருத்துகள் அவரது உரையிலிருந்தே மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. மனிதனின் முன்னேற்றத்துக்கு மொழியும் ஒரு கருவி தான் என்று நினைத்தவர் பெரியார். ஆனால் மொழியை தமது அரசியல் எதிரி, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது அவரும் மொழியையே அரசியல் ஆயுதமாகப் பயன் படுத்தினார். அவர் தமிழை இலக்கியத்துக்காக அல்ல; தமிழர்களுக்காகத் தாங்கி நின்றவர். அதனால் தான் அவர் மொழி குறித்தும் தமிழ் மொழி குறித்தும் சொன்னவை அழுத்தமானவை.
தமிழன் கோயிலில் உள்ள கடவுள் என்பவை களுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் கோயிலுக்கு தமிழரால் பூசை செய்யப்படவேண்டும். இந்த இரண்டு காரியமும் கடவுளையும் வழிபாட்டையும் பற்றியது மாத்திரமல்ல; தமிழ் மொழியின் தன்மானத்தையும் தமிழனின் தன்மானத்தையும் பற்றியதாகும். (‘விடுதலை’ 7.11.1957)
தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழ் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடிய வில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையில் உள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புது மொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். (மொழி – எழுத்து நூல்)
தமிழ் மொழி குறித்து பெரியார் எழுதிய, பேசிய 178 கட்டுரைகளை தேதி வாரியாகப் பட்டியலிட் டுள்ளார் நூலாசிரியர்.
தமிழ் மொழிக்காக பெரியார் முன்னெடுத்த களங்கள், கருத்துப் போர்களை முழுமையான தொகுப்பாகி, பெரியார் தமிழுக்கு ‘எதிரானவர்’ என்று உள்நோக்கத்தோடு சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளை தகர்த்து தூள்தூளாக்கியிருக்கிறது இந்த அத்தியாயம்.
நான்காவது அத்தியாயம் – இந்தி எதிர்ப்புப் போராட்டக்களம் குறித்தும், 5ஆவது அத்தியாயம் 1965 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார் எடுத்த நிலைப்பாட்டையும் பெரியார் கருத்துகளோடும் வரலாற்றுத் தகவல்களோடும் விவரிக்கிறது.
1965 போராட்ட வீச்சைக் கண்டு அண்ணா பயந்து போராட்டத்தைக் கைவிட்டார் என்று
பெ. மணியரசன் போன்றோர் வைக்கும் குற்றச் சாட்டுகள் அழுத்தமான சான்றுகளோடு மறுக்கப் பட்டுள்ளன.
பெரியார் சமூக முன்னேற்றம் என்ற கண்ணோட் டத்தில்தான் ஆங்கிலத்தை ஆதரித்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் முன் வைக்கப்பட் டிருக்கின்றன.
தமிழ் இலக்கியங்களோடும், தமிழ்ப் புலவர் களோடும் பெரியார் கொண்டிருந்த உடன்பாடு களையும் முரண்பாடுகளையும் ஏழாவது அத்தியாயம் ஆராய்கிறது. தொல்காப்பியம், இராமாயணம், கந்தபுராணம், சிலப்பதிகாரம் மற்றும் அகத்தியர், பரிமேலழகர், பாரதி குறித்து பெரியார் பார்வையை முன்னிறுத்துவதோடு “தமிழ்ப் புலவர்கள் தமிழைச் சாகாமல் காப்பாற்றும் பணியில் இனி இருப்பதை விட தமிழை வளர்க்கும் தொண்டில் ஈடுபடுதல் வேண்டும்” என்றே புலவர்களை வலியுறுத்தினார்.
தமிழ் இலக்கியத்தில் ஆரியக் கருத்துகள் நுழைக்கப்பட்ட வரலாறு, மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் மீது பெரியார் வைத்த விமர்சனத்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் முழுமையாக ஏற்றுக் கொண்டதை அவரது கருத்துகளிலிருந்தே மேற்கோள் காட்டி விளக்கப்பட்டுள்ளது.
‘தமிழன்’ என்றதலைப்பிலான அய்ந்தாவது அத்தியாயம் – ‘திராவிடம்’ என்ற பார்ப்பன எதிர்ப்புக் குறிப்புச் சொல்லை ஏற்றாலும் பெரியார், தனது எழுத்து பேச்சில் ‘தமிழன்’ என்றே குறிப்பிட்டதை ஏராளமான சான்றுகளுடன் நிறுவியிருக்கிறது. பெரியாரின் 229 மேற்கோள்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.
‘திராவிட – தமிழ் இரண்டும் ஒன்று தான்’ என்ற அத்தியாயம், பெரியாரின் குரல் தமிழருக்காகவே ஒலித்தது மட்டுமல்ல; மலையாளிகள், கன்னடர், ஆந்திரர் ஆதிக்கத்தையும் வன்மையாகக் கண்டித்ததை விளக்குகிறது.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 24022022 இதழ்