‘இந்து’ பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்ற கூக்குரல், தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. புராணங்களில் இருப்பதை, உள்ளதை உள்ளபடி எடுத்துப் பேசினாலே, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று சங்கிகளும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். அப்படியானால் அவர்கள் அந்த புராணத்தை தான் தடை செய்ய வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர, புராணத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவதாகும் ?

ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘கீதாஞ்சலி ஸ்ரீ ‘ என்ற பெண்மணி ‘ரெத் சமாதி’ என்ற இந்தி நாவலை எழுதி இருக்கிறார். அந்த நாவலுக்கு சர்வதேச புகழ் வாய்ந்த ‘புக்கர் பரிசு’ கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு நாவலுக்கு பரிசு கிடைப்பதை அந்த மாநிலம் பாராட்ட வேண்டும். ஆக்ராவில் கீதாஞ்சலியை பாராட்டுகிற நிகழ்ச்சிக்கு ரங்கீலா என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. அந்த நாவலில் வருகிற சில பகுதிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் காவல்துறையில் புகாரளிக்க அந்தப் புகாரை உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் டுவிட் செய்ய உடனடியாக காவல்துறை அந்த நிகழ்விற்கு அனுமதி மறுத்துவிட்டது.

காரணம், சிவன் குறித்தும் பார்வதி குறித்தும் அதில் கூறப்பட்ட கருத்துகள், இந்துக்கள் மனதைப் புண்படுத்துகிறது என்பது தான். இதற்கு ரங்கீலா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரியான விளக்கம் ஒன்றைத் தந்திருக்கிறார்கள்.

புராணங்களில் இருக்கிறது என்று கூறினாலே புண்படுத்துகிறது என்று எப்படி கூறுகிறீர்கள் ? அப்படிப் புண்படுத்துகிறது என்று சொன்னால், அந்தப் புராணங்களைத் தடை செய்யக் கோரி நீங்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். அதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவது ஆகும்? என்ற கேள்வியை எழுப்பியிருக் கிறார்கள். விஷ்ணு புராணம், லிங்க புராணம், சிவ புராணம் என்று பல்வேறு புராணங்கள் கற்பனைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன. கடவுள்களின் பிறப்புகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் இருப்பதை எடுத்துக் காட்டினாலே இந்துக்களின் மனது புண்படுகிறது என்று புலம்பத் துவங்கி விடுகிறார்கள்.

‘பூக்கர் பரிசு’ என்ற மிக உயரிய பரிசு பெற்ற ஒரு நாவலுக்கு, மனதைப் புண்படுத்துகிறது என்ற காரணம் காட்டி அந்த நிகழ்ச்சிக்கு தடை போடுவது என்பது சர்வதேச உலகம் இந்தியாவை எவ்வளவு கேவலமாக பார்க்கும்.

புண்படுத்துகிறது என்று கூறுபவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. சமூகத்தில் சரிபாதியாக இருக்கிறவர்கள் பெண்கள். ஆனால் பெண்களை இந்து மத சடங்கிலிருந்து, இந்து புரோகிதர் வேலை பார்ப்பதிலிருந்து முற்றாக ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே இது இந்து பெண்களை அவமதிப்பது ஆகாதா ? புண்படுத்துவதாகாதா ? இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சுவயம் சேவக்குகளாக பெண்கள் இருக்கக் கூடாது என்று தடை இருக்கிறதே இது இந்துப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற மிகப் பெரிய அவமானம் அல்லவா?

பெரியார் முழக்கம் 04082022 இதழ்

You may also like...