தலையங்கம் 7.5% உள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வின் பொய் முகம்
‘நீட்’ தேர்வை ஆதரிக்கும் பா.ஜ.க.வும் ‘சமூக ஆர்வலர்கள்’, ‘அரசியல் விமர்சகர்கள்’ என்ற முகமூடி களோடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் “பிரம்மா”வின் தலையில் பிறந்ததாகக் கூறும் பூணூல் செல்லக் குழந்தைகளும், திரும்ப திரும்ப ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிப்பதாகவும் அப்படி ஒரு யோசனையைக் கூறியதே பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தான் என்றும் கூறி வருகிறார்கள்; இது பச்சைப் பொய்.
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியபோது அப்போதும் ஆளுநராக இருந்த பன்வரிலால் புரோகித் கிடப்பில் போட்டார். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தினால் ஒப்புதல் தரத் தயார் என்று நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. பிறகு தமிழ்நாடு அரசே சட்டத்துக்கு பதிலாக அரசாணை பிறப்பித்தால் ஆளுநரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்றும் கலைஞர் கிராமப்புற மாணவர் இடஒதுக்கீட்டுக்கு அரசாணை தான் பிறப்பித்தார் என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, அரசாணை பிறப்பிக்கும் முயற்சிகளில் இறங்கியது. அரசாணை வரப் போகிறது என்பதை அறிந்த ஆளுநர் புரோகித், அவசர அவசரமாக சட்டமன்ற வரைவுக்கு ஒப்புதல் தந்தார்.
அது மட்டுமல்ல; புதுவையில் மாண்புமிகு நாராயணசாமி முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு) 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் கிரேன்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்துடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டார். இந்த நிலையில் உள்ஒதுக்கீடு சட்டம் காலதாமதப்படுத்தப்படுகிறது என்று புதுச்சேரியைச் சார்ந்த மாணவி சுப்புலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக உயர் அதிகாரி இரவிரஞ்சன் அரசின் கருத்துகளை அரசுக் குறிப்பாக எழுதி அதை ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர். சங்கர்நாராயணன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜன.23, 2021இல் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தரக் கூடாது என்று திட்டவட்டமாக மறுத்தது.
புதுவை அரசுக்கு இப்படி ஒரு சட்டம் இயற்றும் அதிகார மில்லை என்று கூறிய ஒன்றிய ஆட்சி, கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் மாநிலங்கள் இதில் தலையிட முடியாது என்று கூறியது. அதுமட்டுமல்ல; ஒன்றிய ஆட்சி தாக்கல் செய்த மனுவில் உள்ள சொற்றொடர்களை அப்படியே தருகிறோம்:
“The introduction of ‘NEET’ in 2016 had been for merit based medical admission. NEET by providing uniform national standards follow the Principle of one ntion one merit. Thus a separate quota for the students of government schools, as proposed by the union territory cabinet would dilute the merit of the neet examination..”
“ஒரே நாடு; ஒரே தகுதி என்ற நோக்கத்திற்காக ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவது நீட் தேர்வு உருவாக்கும் ‘தகுதி’யை நீர்த்துப் போக வைத்து விடும்” என்பதே ஒன்றிய அரசு தந்த பதில்.
புதுச்சேரி ஒன்றிய அரசின் முடிவை ஏற்றுக் கொண்டால் வேறு பல மாநிலங்களும் அதேபோல் கோரிக்கைகளை வைக்கும்போது, தகுதிக்காகக் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்வின் நோக்கத்துக்கே எதிரானதாகி விடும் என்றும் ஒன்றிய அரசு கூறியது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை என்பதையும் தெரிவித்து இருந்தது. ஒன்றிய அரசுக்கு ஏதும் இது குறித்து தெரிவிக்காமலே தமிழ்நாடு அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செய்திருக்கிறது என்றும் பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தது. நீதிமன்றத்தில் வாதிட்ட ஒன்றிய அரசு வழக்கறிஞர், மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் – ஒன்றிய அரசு – தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டையும் சிறுமைப் படுத்துகிறது என்று வாதிட்டார். (The advocate argued that the Central Government had been belittling the 7.5% reservation adopted in Tamilnadu) (ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு) என்று வாதிட்டார்.
இவ்வளவு உண்மைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து அண்ணாமலையும் அவரது சங்பரிவாரங்களும் பேசி வருவதோடு அது எங்கள் கட்சித் தலைவரின் மூளையில் உதித்த திட்டம் என்று கூறுகிறார்கள்.
‘ஒரே நாடு – ஒரே தகுதி’ என்பதற்காக வந்ததுதான் நீட். அதை எதிர்த்த அ.இ.அ.தி.மு.க. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரே நாடு – ஒரே தேர்தல் முறையை இப்போது ஆதரிக்கிறார். அந்த அடிப்படையில் அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரவேண்டும் என்கிறார். கொள்கைகள் ஏதுமில்லாத ‘அதிகாரத்துக்கும் ஊழலுக்கும்’ ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பர்கள் இப்படித்தான் முரண்பாடு களில் சிக்கும் சந்தர்ப்பவாதிகளாக செயல்படுவார்கள்!
பெரியார் முழக்கம் 17022022 இதழ்