கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக்காதே; ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் கண்டனம்
கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைக் கும் மையம் அமைக்கும் பணியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; தமிழ் நாட்டு அரசு ஒன்றிய அரசின் இந்த நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கூடங்குளம் மக்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மாபெரும் போராட் டத்தையும் மதிக்காமல் கூடங் குளத்தில் இரண்டு அணு உலைகளை நிறுவி இயக்கிக் கொண்டு இருக்கிறது.அது மட்டும் அல்லாமல் மேலும் நான்கு உலைகளை நிறுவும் பணிகளை ஒன்றிய அரசு செய்து கொண்டு வருகிறது.
அணு உலைகளே மிகவும் ஆபத்தானவை என உலகின் அறிவியல் தொழில் நுட்ப விஞ்ஞானத்தில் உச்சங்களைத் தொட்ட ரஷ்யா ஜெர்மன் ஜப்பான் போன்ற நாடுகளே அத்திட்டங்களைக் கைவிட்டு விட்டன. ஆனால் அணு உலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் ரஷ்ய நாட்டிடம் தொழில் நுட்பம் பெற்று இந்திய ஒன்றியத்தில் அதுவும் நம் தமிழ்நாட்டில் அணுஉலைகளை அமைத்திருப்பது பெரும் ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ் நாட்டின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில் அணு உலைகளைவிட மிகவும் ஆபத்தான கதிரியக்க வீச்சு தன்மைகொண்ட அணு உலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் அதுவும் கூடங்குளம் அணு உலைகளுக்கு அருகாமை யிலேயே புதைப்பது என்று இந்திய ஒன்றிய அரசு முடிவெடுத்து அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிக மிக ஆபத்தான ஒன்றாகும்.
அணு உலைக் கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்று உலக நாடுகளே தீர்வு காணமுடியாமல் மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அவற்றை புதைப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் தீங்கு.
கதிரியக்க வீச்சு கொண்ட அணுவுலைக் கழிவுகளின் ஆபத்தை உணர்ந்து ஒன்றியத்தில் உள்ள பிற மாநிலங்கள் அணுக் கழிவுகளை அங்கு புதைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முடிவை கடுமையாக எதிர்த்து அணுக் கழிவுகளை தங்கள் மாநிலங்களில் புகைக்க விடாமல் தடுத்து விட்டனர்.
உதாரணத்திற்கு கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் கைவிடப்பட்ட சில கிலோமீட்டர்கள் ஆழமான சுரங்கபகுதிகளில் இந்த அணு உலைக் கழிவுகளை புதைப்பதற்கான யோசனை இருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. யோசனை இருப்பதாக தெரிவித்ததற்காகவே கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களது மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், இரயில் மறியல் ஆர்ப்பாட்டங்கள் என கடும் எதிர்ப்பை மக்கள் திரளோடு பதிவு செய்த காரணத்தினால் ஒன்றிய அரசு கர்நாடகாவில் அணுக் கழிவுகளை புதைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பின்வாங்கியது.
பிறகு தமிழ்நாட்டில் அந்த ஆபத்தான அணு உலைக் கழிவுகளை புதைப்பதற்கு ஒன்றிய அரசு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இத்திட்டம் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிட்டால் கூடங்குளம் அணு உலையில் வெளியேற்றப்படும் ஆபத்தான அணு உலைக் கழிவுகளை மட்டும் அல்லாது ஒன்றியத்தின் பிற மாநிலங்களில் இருக்கும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில்தான் கொண்டுவந்து புதைக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் “அணுக்கழிவுகளை புதைப்பதற்கான பாதுகாப்பான முறையான தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்திருக் கிறீர்களா?” என்று கேட்டதற்கு ஒன்றிய அரசு அளித்த பதில் “அவற்றை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும்” என்பதே.
ஆனால் நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் ஒன்றிய அரசு அணு உலைக் கழிவுகளை கொட்டுவதற்கான பாதுகாப்பான தொழில் நுட்ப ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லை; ஆனால் அதற்குள் புதைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது.
இது குறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் தற்போது எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் இருந்து ஒன்றிய அரசிடம் அணு உலைக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில் நுட்பமே இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது.
இவ்வகையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணு உலைக் கழிவுகளை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமலும், தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் புதைக்க ஒன்றிய அரசு செய்து வரும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். அதேபோல தற்போது அமைக்கப்பட்டு வரும் அணு உலைகள் 3,4,5,6 ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஒன்றியத்தில் பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து ஆபத்தான அணு உலைக் கழிவுகளை தத்தமது மாநிலங்களை புதைக்க விடாமல் தடுத்தது போலவே தமிழ் நாட்டு அரசும் தங்களுடைய கடும் எதிர்ப்பை பதிவு செய்து அணு உலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்கும் ஒன்றிய அரசின் நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்த முன் வருகிறது என்றால் நாமும் கர்நாடகாவை போலவே முழு அடைப்புப் போராட்டம், இரயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள் என மக்கள் திரள் எழுச்சி போராட்டத்தை நடத்தித் தான் இதனைத் தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை தூண்டுகிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தமிழ்நாட்டு அரசும் இவ்வகையான போராட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கவேண்டும் என்பதும் நம் கோரிக்கையாகும்.
பெரியார் முழக்கம் 17022022 இதழ்