மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை
அன்பு தோழர்களே,
வணக்கம்.
சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம்.
மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில் ”பெரியார் மன்றத்தில்” அல்லது அருகாமையில் உள்ள ஒரு மண்டபத்தில் (இன்று மாலை இடம் உறுதி செய்யப்படும்) விருந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இரண்டாவது செய்தியாகும். விருந்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் நுழைவுக் கட்டணம் உரூ. 50-00 (அய்ம்பது உரூபாய்கள்) செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது கூடுதல் செய்தியாகும்.
அதுபோலவே சேலத்தில் உள்ள இந்து இயக்கங்களும் பெரியாருக்கு மாலைமரியாதை செய்ய விரும்பினால் அவர்களுக்கும், பதில் மரியாதை செய்ய நமது தோழர்களுக்கும் வாய்ப்பளிப்பதற்காக, சேலம், 27/3, இராஜாராம் நகரில் (காந்தி விளையாட்டு அரங்கத்தின் கிழக்குப்புற சாலையில்) அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர் திருமணக் கூடத்தில் (S.S.R Marriage Hall) 09.05.2017 செவ்வாய்க்கிழமை நண்பகல் மாட்டுகறி விருந்து சேலம் மாவட்டக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மூன்றாவது செய்தியாகும். விருந்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் நுழைவுக் கட்டணம் உரூ. 50-00 (அய்ம்பது உரூபாய்கள்) செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது இங்கும் உண்டு.
ஒரு வாய்ப்பு இல்லாமல் போனதற்கு மனவருத்தம் கொள்ளாமல் கிடைத்துள்ள இவ்விரண்டு வாய்ப்புகளையும் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உடன்பாடுள்ள தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும் செய்தியைச் சேர்ப்பிக்குமாறும் அழைத்துவருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
கொளத்தூர் தா.செ.மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்.
21.04.2017.