கோ.இளவரசன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கடந்த 05.01.2022 அன்று மறைந்த கழகத் தோழர் கோ. இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 20.01.2022 அன்று சென்னை சேத்துப்பட்டு கோ. இளவரசன் இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோ. இளவரசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இளவரசன் தனது மரணத்தின்போது எந்த சடங்குகளும் இடம் பெறக் கூடாது என்று தமது துணைவியாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 54 வயதில் துணைவரை இழந்த அவரது இணையர், உறவினர் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி எவ்வித சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகளை கழகத் தோழர்களின் ஆதரவுடன் நடத்திக் காட்டினார்.

மறைவுச் செய்தி அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர் களுடன் விரைந்து சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். துணைவர் படத் திறப்பு நிகழ்விலும் வாழ்விணையர் பங்கேற்றதோடு, கழக நிகழ்வுகளில் பங்கேற்கத் தோழர்களிடம் விருப்பம் தெரிவித்தார்.

நிகழ்வில், சேத்துப்பட்டு இராசேந்திரன் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/-யை, கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினார்.

இறுதியாக, சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூறினார்.

 

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற தலித் இளைஞர்கள் மீது ஜாதி வெறியர் தாக்குதல்

மதுரை மாவட் டம் மேலூர் வெள்ள லூர் பகுதிக்குட்பட்ட கிராமங்களான பழையூர் பட்டி, உச்சரிச்சான் பட்டி ஆகிய ஊர்களில் பொங்கல் விழாவை கொண்டாடியதற்காக பட்டியல் சமூக இளைஞர்களை கட்டி வைத்து ஜாதியவாதிகள் தாக்கியுள்ளார்கள்..

சம்பவம் நடந்த மறுதினம் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களையும் – மக்களையும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணி அமுதன், புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மேலூர் பொறுப்பாளர்கள் சத்ய மூர்த்தி, கருப்பையா உள்ளிட்டோர் சந்தித்தனர்.

மேலும் அதே வெள்ளலூர் அருகே அலங்கம்பட்டியில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட பட்டியல் சமூக இளைஞர் மீதும் ஜாதியவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட இளைஞரை மாவட்ட செயலாளர் மணி அமுதன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் பகுதிகளான பழையூர் பட்டி, உச்சாரிச்சான் பட்டி, அலங்கம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற ஜாதிய தாக்குதல், திருவண்ணாமலை வீரளூரில் நடைபெற்ற ஜாதிய தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜனவரி 28 காலை 10 மணிக்கு அண்ணா பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெரியார் முழக்கம் 27012022 இதழ்

You may also like...