கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் டிசம். 24, 2021 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய தலைமை உரையின்

கடந்த இதழ் தொடர்ச்சி.

அனைத்து மதத்தினருக்குமான பொதுவான பண்டிகையாக இருந்தும்கூட அரசு அலுவலகங் களில் கொண்டாட வேண்டாம்  என்ற  கேரளா  அரசு ஆணையை வரவேற்று எழுதுகிற போது பல செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கத்தில் பகிரப்படுகிறது. குஜராத்தில் ஒரு வழக்கிற்காக 2006இல் ஒரு தீர்ப்பு வருகிறது. பொது இடங்களில் இருக்கின்ற கோவில்களை பற்றிய தீர்ப்பு அது. இதுவரை கட்டியிருக்கும் கோவில்கள் இருக்கட்டும் இனிமேல் புதிய கோவில்கள் கட்டக் கூடாது. திரும்பவும் அதற்கு 2013இல் ஒரு தீர்ப்பு, 2018இல் ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் கோபால கவுடா என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கின்ற ஒரு நீதிபதியாக இருந்தார். அவரோடு அருண் மிஸ்ரா இருவரும் இணைந்து கூறினார்கள், ‘இனிமேல் பொது இடங்களில் கோவில் கட்டுகிற பிரச்சனை வந்தால் தலைமைச் செயலாளரை உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிப்போம்’ என்று அந்தத் தீர்ப்பில் கூறினார்கள். அதுகுறித்து விரிவான ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் இவற்றை திருப்பிப் படிக்கின்ற போது பல செய்திகள் நம கவனத்திற்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் பார்த்த தனித்துவமான பார்வையை உணரமுடிகிறது. எனது முன்னுரையில்கூட அதை குறிப்பிட்டிருந் தேன். ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வைக்கும் நாம் பார்க்கின்ற பார்வைக்கும் வேறுபாடுகள் பல இருந்திருக்கிறது. தற்போது கூட பெண்களுக்கான திருமண வயது 21 என்பதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் வரவேற்கிறோம்.

பெரியார் காதலைப் பற்றி கூறுகிறபோது சொல்வார், “குழந்தை தூங்கினால் காலை ஆட்டுமே என்று தாய் சொன்னதற்கு, தூங்கிவிட்டதாக நம்பச் செய்வதற்கு குழந்தை காலை ஆட்டுவதைப் போலத் தான், காதலர்களின் செயல்களும் இருக்கிறது. தெய்வீக காதல் என்பதைக் காட்டிக் கொள்வதற்கு பல விதமான செயல்களை செய்து கொண்டு உள்ளார்கள். அறிவார்ந்த காதல் வரட்டும் அந்த திருமணங்களை வரவேற்போம்” என்று கூறுவார்.

பெண்கள் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்யலாம் என்பதுதான் 18 வயது, திருமண வயது என்று இருக்கிறது. நாம் திருமண வயது வரம்பு உயரட்டும் என்று சொல்கிறோம். மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். நமக்கு ஒரு பார்வை அவர்களுக்கு ஒரு பார்வை. பெண்களுக்கான 33 விழுக்காடு குறித்து விவாதம் வந்தபோது பல பேர் அதை உள் இட ஒதுக்கீடு உடன் வரவேண்டும் என்று பேசினார்கள். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூட அப்படித் தான் கூறினார். தனி ஒதுக்கீடு என்று வருகின்ற போது  பெண்கள் இட ஒதுக்கீடே கூடாது என்று நினைப்பவர்கள் வடநாட்டுத் தலைவர்கள், உள்ஒதுக்கீடு இல்லாமல் வரக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்கள்.

ஆனால் நாமே தான் ஒரு கட்டத்தில் பேசினோம், வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுவை சட்டமாக்கிய போது நாமெல்லாம் சொன்னோம் அவர் கல்விக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரவில்லை, வேலை வாய்ப்பிற்கு மட்டும் கொண்டு வந்தார். வேலை வாய்ப்பிலும் கூட சில பிரிவுகளுக்கு மட்டுமே கொண்டு வந்தார். இராணுவத்துக்குக் கொண்டு வரவில்லை . அது மட்டுமில்லை உயர் ஆய்வுக்கு, உயர் மருத்துவத்திற்கு எல்லாம் இல்லை என்பதை சொல்லிவிட்டுத்தான் கொண்டு வந்தார். அப்போது நாம் கூறினோம், முதலில் வரட்டும் மற்றவை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.

முதலில் இந்த வேலைக்காவது வரட்டும் என்று கூறிய நாம், இப்போது பெண்களுக்கான 33 விழுக்காடு வரட்டும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லலாமே? இப்போது எந்த சூழலிலாவது பார்ப்பனர் ஒருவர் கூட வர முடியாத அளவில் இட ஒதுக்கீடு எங்கே இருக்கிறது ? ஏதாவது இட ஒதுக்கீடு நாம் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வாங்கி இருக்கிறோமா எதுவும் இல்லையே.?

பிற்படுத்தப்பட்டவர்கள் தான் அனைத்து இடத் திலும் இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக தனித் தொகுதியை தவிர மற்ற அனைத்து  தொகுதி களிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் இருக் கிறார்கள். அல்லது பார்ப்பனரல்லாதவர்கள் இருக் கிறார்கள். ‘ஏன் எதற்கு’ என்கிற பார்வைகளை  நாம் தலையங்கத்தின் வழியாக முன்வைத்தோம். உள் ஒதுக்கீடு என்ற நிபந்தனையை வலியுறுத்தினால் அதை ஒரு தடுப்பு வேலையாகத் தான் நாம் பார்க்கி றோம். முதலில் வரட்டும் பின் அடுத்த ஒரு கோரிக்கை வைப்போம் என்ற நிலையை நாம் எடுத்தோம்.

தலையங்கங்கள் என்பது நாம் எடுத்த தனித்த சில கருத்துக்களை நம் தோழர்களுக்கும், மற்றவர் களுக்கும் சில கோரிக்கைகளை நாம் வைத்துக் கொண்டே வந்து இருக்கிறோம். ஒவ்வொரு பரப்புரைப் பயணங்களையும் ஒரு தலைப்பு கொடுத்து நடத்தியிருக்கிறோம். ‘நம்புங்கள் அறிவியலை நம்பாதீர்கள் சாமியார்களை’ என்ற தலைப்பில் நடத்தி இருக்கிறோம். ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம், இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்’ என்று இட ஒதுக்கீட்டோடு இணைத்துப் பயணம் எடுத்தோம்.

அகமண முறை எதிர்ப்புப் பயணம் இப்படிப் பல பயணங்களை வருடந்தோறும் எடுத்திருக்கிறோம். அப்போது அவற்றைக் குறித்து கட்டுரைகள் பல வந்திருக்கின்றன. பல கட்டுரைகள் என்றால், பல பேர் எழுதியதாக அர்த்தமில்லை. எழுதியவர் ஒருவரே தான். விடுதலை இராசேந்திரன் தான் அப்படி அனைத்தையும் தானே செய்பவராகத் தான் அவர் இருந்திருக்கிறார். என்னால் ஒரு வரியைக் கூட ஒரு பத்தியாகத்தான் எழுத முடியும். குறைத்து, உடைத்து எழுத முடியாது. குறைத்து உடைத்து எழுதுங்கள் என்று என்னிடம் கூறுவார்.

இன்று வரை நான் எழுதினால் கூட அவர் தான் குறைத்து, உடைத்து எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதிக் கொண்டிருக்கிறார். தடா, பொடா, மரண தண்டனை, புதிய கல்வி இப்படிப் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். செய்தியை எளிமையாகப் புரிய வைக்கும் வலிமை அவரின் எழுத்துக்கு உண்டு. நாம் எழுதினோ மென்றால், அதற்கு விளக்க உரை மற்றொருவர் எழுத வேண்டும். புரிந்து கொள்ளும் வகையில் மட்டுமல்ல, நாம் எண்ணிய எண்ணத்தையும் அவரின் எழுத்து பிரதிபலிக்கும்.

விடுதலையில் அவர் எழுதுகின்ற போதிலிருந்தே பார்க்கிறேன். விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்தியாகத் தான் விடுதலையில் வரும் செய்திகள் இருந்தன. அணுஉலைக்கு எதிரான கட்டுரைகள் தொடக்க காலங்களிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. என்னிடம் ஒருவர் கேட்டார், அப்போதே ‘விடுதலை’ யில் அணுஉலையை எதிர்த்து எழுதப்பட்டிருக் கிறதே, ஏன் இப்போது ஆசிரியர் அறிவியல் என்று நியாயப்படுத்துகிறார் என்று கேட்டார். நான் கூறினேன், அந்த கட்டுரைகளை எழுதியவர் இன்னமும் எதிர்த்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் திராவிடர் கழகத்தில் இல்லை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருக்கிறார் என்று கூறினேன்.

இப்படி சமூகத்தில் மக்களுக்கு தேவையான வற்றை இயக்கத்தின் மூலமாகவும், இயக்கத்தின் செயல்திட்டமாகவும் முன் வைக்கிறோம், அல்லது நடந்த நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைக்கிறோம் இவை எல்லாவற்றையும் எங்கள் பொதுச் செயலாளர் இராசேந்திரன் எழுதிய தலையங்கங்கள் தான் கூறியிருக்கிறது. பெரியார் ஒரு முறை எழுதினார், ‘இதில் ஒரு தலையங்கத்தைத் தவிர அந்த காயலாக இருந்த போதும், மீதி அனைத்துத் தலையங்கங் களையும் நான் தான் எழுதினேன்’ என்றார். அப்படி அந்த ஒன்றைக் கூட விடவில்லை இராசேந்திரன் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சொர்க்கம் போக ரொக்கம் தேவை, இதைப் பற்றியும் கூறிவிட வேண்டும். இது கேலியாக, புனைப் பெயரில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. வாலாசா வல்லவன் கூட குத்தூசியை குறிப்பிட்டுக் கூறினார். அவரின் எழுத்தும் தனி சுகம் தான். யேசு நாதர் கூறினார் ‘வலது கன்னத்தில் அடித்தால், இடது கன்னத்தையும் காட்டு என்று’ இதை கட்டுரை தொடங்கும் போது எழுதிவிட்டு, ‘யேசுநாதர் இடக்கை பழக்கமுள்ளவராக இருக்க வேண்டும், அல்லது பின்னாலிருந்து அடித்திருக்க வேண்டும்’ அது எப்படியோ இருக்கட்டும் என்று கூறிவிட்டு கட்டுரைக்குள் குத்தூசி குருசாமி செல்வார். ஆனால், அதை படிக்கும்போது யோசித்துக் கொண்டே இருப்போம்.

பாரதியாரின் பாடல்களைப் பற்றி குறிப்பிடும் போது, ஊர்களில் தெருக்கூத்து நடைபெறும் அதில், கோமாளியாக நடிப்பவருக்கு மாலையாக போடுவதற்கு இளைஞர்கள், சாக்லேட் காகிதம், உடைந்த முறுக்கு, உடைந்த வளையல் இப்படி பலவற்றைக் கோர்த்து மாலையாகப் போடுவார்கள் அதுபோலத்தான் பாரதியார் கவிதைகளும் என்று குத்தூசி எழுதுவார். இப்படி தனித்துவமாக எழுதி யிருப்பார். பொதுச் செயலாளர் இராசேந்திரனும் அதே பாணியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கடவுள்களின் கதைகளைப் பற்றி, கடவுள் களுக்குள் நடைபெற்ற உரையாடல் என்று எழுதி யிருக்கிறார்.

அட்சய திருதியைப் பற்றி எழுதும் போது, தங்கம் வாங்குவதற்கு என்று ஒரு நாள் இருக்கிறது, அதே போல கடவுள்களின் பிறந்த நாளை வைத்து நாம் ஏன் இவற்றையெல்லாம் வாங்கக் கூடாது என்று பக்தர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியிருப்பார். விநாயகன் பிறந்த அன்று – சோப்பு, இராமன் பிறந்த நாளில் – செருப்பு இப்படி அறிவுரையை வழங்கி யிருப்பார்.

அதேபோல மனித உரிமை தளத்திலும் பலவற்றை எழுதியிருக்கிறார். இந்தத் தலையங்கங்கள் பழையதை நினைவூட்டும், எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என்பதைக் கூறி அதை படைத்த எங்கள் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கும், அதைத் தொகுத்தளித்த எங்கள் இணையதள பொறுப்பாளர் க. விஜய்குமாருக்கும் நன்றியை கூறி விடைபெறு கிறேன்

(நிறைவு)

பெரியார் முழக்கம் 13012022 இதழ்

You may also like...