தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்
‘சுயமரியாதை; ஜாதி ஒழிப்பு’ என்ற சொல்லாடல்கள் பல்வேறு திக்குகளிலிருந்து கேட்கத் தொடங்கி இருக்கின்றன. ‘நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை முக்கியமானது; ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது’ என்று கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, பெங்களூரில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசி யிருக்கிறார். ‘சவிதா’ என்ற சமூகத்தின் சார்பில் ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா வில் சித்தராமய்யா இவ்வாறு பேசியிருக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தில் ஜாதி எதிர்ப்புக்காகப் போராடிய பசவண்ணாவை அவர் நினைவு கூர்ந்திருக் கிறார்.
“நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த ஜாதியைச் சார்ந்தவர் இரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்து விட்டால் மீண்டும் ஜாதியைப் பேசத் தொடங்கி விடுகிறோம். ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது. செய்யும் தொழிலையே ஜாதியாக மாற்றி மேல் ஜாதி – கீழ் ஜாதி என்று பிரிவை வைத்துள்ளனர். மூட நம்பிக்கைகளை விதைப்பவர்களை புறக்கணிக்கா விட்டால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கருநாடகத்தில் 78 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றிருந் தாலும் ஜாதியைவிட மறுக்கிறார்கள். படித்தவர்களால் தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. சுயமரியாதைக்காரர் களாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை” என்று பெரியார் குரலை ஒலித்திருக்கிறார்.
ஜாதி ஒழிப்புப் பற்றி அரசியல் தலைவர்கள் பேசுவது வெகு அபூர்வமாகிவிட்டது. தீண்டாமை எதிர்ப்பு, இடஒதுக்கீடு பற்றி பேசக் கூடிய தலைவர்கள்கூட ஜாதி எதிர்ப்பைப் பேசுவது இல்லை. காரணம் வாக்கு வங்கி ‘ஜனநாயக’ அரசியலுக்கு ஜாதி தேவையும் அவசியமுமாக இருக்கிறது என்பதுதான்.
“நமக்கு ஜனநாயகம் சுதந்திரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்களே! அன்று சூத்திரனாக இருந்தவன் இன்றைக்கும் சூத்திரனாகத்தான் இருக்கிறான்” என்றார் பெரியார். (‘விடுதலை’ 29.7.1969)
தீண்டாமைக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர முடித்திருக்கிறதே தவிர, தீண்டாமைக்கு அடிப்படையான வேராக இருவரும் ‘ஜாதி எதிர்ப்பு’ சட்டம் கொண்டு வருவது பற்றி கனவில்கூட சிந்திக்க முடியாத நிலையில் தானே இந்த நாடு இருக்கிறது?
ஜாதிக்குள்ளே திருமணம் என்பதே ‘சமூகக் கவுரவம்’ என்ற சிந்தனை பொதுப் புத்தியில் திணிக்கப்பட்டு விட்டது. பெற்ற பிள்ளைகளையே ஜாதி கவுரவத்துக்காக கொலை செய்யும் அளவுக்கு மனிதர்களை ஜாதி மிருகங்களாக்கி வைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் ‘இலைமறை; காய்மறையாக’ இருந்த ஜாதி, இப்போது வெளிப்படையாகப் பேசப்படுகிறத. ‘தமிழ்த் திருமண மய்யம்’ என்ற பெயரால் ‘வரன் தேடித் தரும்’ வணிக நிறுவனங்கள், ஜாதிகளுக்குள் ‘வரன் தேடுவதை’ தொலைக்காட்சிகளில் விளம்பரங்களாக வெளியிடும் நிலைக்கு நாடு பின்னடைவுக்குப் போய் விட்டது. தமிழ் நாட்டிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்கள் பற்றிப் பேசவே தேவையில்லை. ஜாதிச் சங்கங்கள், ஜாதி உணர்வை வெறியாக மாற்றுவதற்கு துடிக்கின்றன. அதை அரசியலுக்கு தங்களின் சொந்த செல்வாக்கு வளர்ச்சிக்கு மடைமாற்றுகின்றன.
சமூக நீதி என்ற பேசப்படும் இடஒதுக்கீட்டின் நோக்கம், ஜாதிகளுக்குள் சமத்துவத்தை உருவாக்கி ஜாதி எதிர்ப்பை நோக்கி முன்னே நகர்வதற்கான கொள்கை. ஆனால் இடஒதுக்கீடும் அதன் வழியே கல்வி பெற்று அதிகாரப் பதவிகளுக்கு வந்தவர்களும் அடுத்தக்கட்ட நகர்வு நோக்கி நகர முடியாமல் ஜாதி உணர்வு தடுத்து விடுகிறது. பெற்ற கல்வி சமூக மாற்றத்துக்குப் பயன்படாமல் ‘சுயநலன்’ ஜாதி நலன் நோக்கியே சுழலச் செய்து கொண்டிருக்கிறது. இதுவே இப்போதும் பார்ப்பனியம் வீழ்த்த முடியாத சக்தியாக நிலை பெற்று நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்ற கருத்தாக்கம், பார்ப்பனர்களின் மேலாதிக்க எதிர்ப்போடு முடிவடைவ தில்லை. பார்ப்பனியக் கருத்தியலிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அது கட்டமைத்த ஜாதிய நிறுவனங்கள், ஜாதிய சிந்தனைகள், ஜாதிய அமைப்புகளை பலவீனப்படுத்தி, அதன் செல்வாக்கை பலவீனமாக்கும் பண்பாட்டுப் புரட்சியில் கருக் கொண் டிருக்கிறது. பசவண்ணா தொடங்கிய ‘லிங்காயத்’ அமைப்பு, ஜாதி எதிர்ப்புக் கொள்கைக்கானது என்றாலும் லிங்காயத்துகளே இப்போது ஒரு ஜாதியாகிவிட்டனர்.
இதுதான் பார்ப்பனியத்தின் வெற்றி. இந்தப் பின்னணியில் சித்தராமய்யா என்ற அரசியல் தலைவர், ஜாதியை எதிர்த்துப் பேசியிருப்பதும், சுயமரியாதைத் தத்துவத்தின் நியாயங்களை வலியுறுத்தியிருப்பதும் உண்மையிலேயே பாராட்டி வரவேற்கப்பட வேண்டும்.
பெரியார் முழக்கம் 13012022 இதழ்