திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?
கடந்த சில மாதங்களாக பெரியாரை இஸ்லாமியருக்கு எதிரானவராக சித்தரிக்கும் ஒரு பரப்புரையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘அறிவு ஜீவி’யாக அறியப்படும் ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி பெரியாருக்கு எதிரான ஒரு இயக்கத்தைத் தொடங்கும் முயற்சியில் இறங்கி, பிறகு தோல்வி யடைந்து தனது குரலை மாற்றிக் கொண்டார்.
வேடிக்கை என்னவென்றால் அண்மையில்தான் சீமான் இஸ்லாமியர்களுக்கு ‘நீலிக் கண்ணீர்’ வடிக்கிறார். பெரியார் பேசிய ‘திராவிடர்’ என்ற கோட்பாட்டுக்கு அடிப்படையே பார்ப்பனரால் வஞ்சிக்கப்பட்ட சூத்திரர், ஆதி சூத்திரர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை ஒரே அணியாக அடையாளப்படுத்தி பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவதுதான். சீமான் பேசும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துக்குள் தமிழ் பேசும் பார்ப்பனர்களும் நாங்களும் தமிழர் என்று ஊடுறுவுகிறார்கள். பார்ப்பன வர்ணாஸ்ரமக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் சுயமரியாதை வர்ணாஸ்ரம எதிர்ப்புப் போரில் ‘பிராமணர்’களும் ஊடுறுவி விட்டால் போராட்டத்தின் நோக்கமே சிதைந்து ஒழிக்கப்படும் என்பதால் பெரியார் திராவிடர் அடையாளத்தைத் தேர்வு செய்தார். தமிழ் பார்ப்பனர்களை உயர்த்திப் பேசும் சீமான் அவர்களும், ‘தமிழர்களே’ என்று பேசி வரும் சீமான், திராவிடமே சீரழித்தது என்று மேடைதோறும் முழங்கும் சீமான், தமிழர்களுக்கான அடையாளத்தை சைவத்துக்குள் தேடினார்.
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள், கன்னடர், தெலுங்கு பேசினால்கூட அவர்களை ‘தமிழர்’ எதிரிகளின் பட்டியலில் வைத்தார். முருகனே தமிழ்க் கடவுள் என்று சிலை வழிபாட்டையும் சைவத்தையும் தமிழர் அடையாளமாக்கி அவர்களுக்கான தேசம் இது என்று கூறி இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை கடவுள் மறுப்பாளர்களை தமிழர்கள் பட்டியலி லிருந்து விலக்கி வைத்தார். இவர்தான் இப்போது இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விடுகிறார். ஏன்? பெரியாரை எதிர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக்க வேண்டும் என்பது ஒன்று. தி.மு.கவுக்குக் கிடைத் திருக்கும் இஸ்லாமிய வாக்குகளை பிரித்தெடுத்து விட்டால், தி.மு.க. பலவீனமாகிவிடலாம் என்று பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவிடும் பா.ஜ.க. செயல் திட்டமே இதற்குப் பின்னணியில் இருக்கக் கூடும்.
ஓவைசி என்ற இஸ்லாமியத் தலைவர் மூன்றாம் அணி ஒன்றை உருவாக்கி, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, பல மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவினார். அரித்துவாரில் இரண்டு இலட்சம் இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசிய தியாகி என்பவர், உ.பி. ஷியா முஸ்லிம் வக்பு வாரிய தலைவராக இருந்த ஒரு முஸ்லீம் ஆவார். ஒரு மாதத்துக்கு முன் இந்துவாக மதம் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது தான் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பிடிக்கும் சூழ்ச்சித் திட்டங்களில் ஒவ்வொன்றாக தோல்வி கண்டது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அதிகாரம். அ.இ.அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்தார்கள்; ஒரு பிரிவை தங்கள் ஆதரவு அணியாக்கினார்கள்; பிறகு இரு பிரிவையும் சேர்த்தார்கள்; பிறகு ரஜினியை களமிறக்க முயன்றார்கள்; அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் இப்போது இஸ்லாமிய வாக்குகளை தி.மு.க.விலிருந்து பிரித்தெடுக்க “சீமான்களை”ப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகத்தையே அவரது திடீர் இஸ்லாமிய ஆதரவுக் குரல் எழுப்புகிறது.
பெரியார் எந்த மதத்தையும் ஏற்றுக் கொண்ட தலைவர் அல்ல. நபிகள் நாயகம் விழாக்களில் பல முறை இஸ்லாமியர்கள் அழைப்பையேற்று பேசியபோதுகூட அம்மதத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனம் செய்து விட்டு இஸ்லாமியர்களை இனத்தின் அடிப்படையில் அரவணைத்தார்; ஆதரித்தார். அவர்களை திராவிடர் என்ற இனத்தின் அடிப்படையில் பார்த்தாரே தவிர, மதத்தின் அடிப்படையில் அல்ல.
“முஸ்லீம்கள் யார்? இவர்கள் தமிழ்நாட்டில் ஆரியர் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்ததும் அதன் கட்டுப்பாடுகளுக்கு இழிதன்மைக்கு இடம் கொடுக்க விரும்பாமல் மதம் மாறிய திராவிடர்கள் தாம் இந்நாட்டு முஸ்லீம்கள் பெரும்பாலோர் ஆவார்கள். இந்நாட்டு கிறிஸ்துவர்களும், அவர்கள் இந்துவாயிருக்கும் போது இப்படித் தம் சமுதாய இழிவை நீக்கிக் கொள்ளவும், கிறிஸ்துவர்களுக்கென்று வழங்கப்பட்ட சில தனியான சலுகைகளைப் பெறவும் மதமாற்றம் செய்து கொண்ட திராவிடர்கள் தாமே யொழிய, இந்நாட்டுக் கிறிஸ்தவர் யாரும் ஜெருசலத்திலிருந்து வந்து குடியேறியவர் களின் சந்ததியார்களலல்லர்.”
– (‘விடுதலை’ 5.10.1948)
– இதுவே பெரியாரின் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் பற்றிய கருத்து.
1930இல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக இஸ்லாத்திற்கு மாற நினைத்தபோது பெரியார், “ஒரு இலட்சம் பேரோடு இஸ்லாமுக்கு மாறுங்கள்” என்று கூறினார். “இழிவு நீங்க இஸ்லாம் என்கிற மந்திரம் தான் நம்மை மனிதராக்க முடியும்” என்றார். (நூல்: ‘இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து’ – 1947)
1952 ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரி தமிழக முதல்வரானார். பதவியைப் பயன்படுத்தி ‘மனு சாஸ்திர’ பார்ப்பனியத்தைத் திணிக்க முயன்றார். அவருக்கு முஸ்லீம் லீக் ஆதரவு தெரிவிக்க முன்வந்த போது அதைக் கடுமையாக விமர்சித்து பெரியார்
1962ஆம் ஆண்டு எழுதிய ஒரு கருத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பெரியாரை இஸ்லாமியருக்கு எதிராக சீமான் எவரோ சொல்லிக் கொடுத்ததைப் பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நட்டில் இராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்தபோது பச்சை வர்ணாஸ்ரம ஆட்சியை நடத்தி பள்ளிகளை மூடி அதிகாரத்தை பார்ப்பன மயமாக்கி இந்தியைத் திணித்து அவனவன், அப்பன் தொழிலை ஆரம்பப் பள்ளி படிக்கும் மாணவர்களையே செய்ய வைக்கும் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய நேரத்தில் பெரியார் வெகுண்டு எழுந்தார். காங்கிரஸ் கட்சி பார்ப்பனரல்லாத தலைவர்களே சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரது ஆட்சி நடந்தது. பெரியார் போராட்டத்தினால் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க முடியாத நிலையில் இராஜகோபாலாச்சாரி, பதவி விலக நேரிட்டது. அப்போது பெரியார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வரதராஜுலு (நாயுடு) போன்றவர்கள் காமராசரை வலியுறுத்தி முதல்வர் பதவியை ஏற்கச் செய்து, இராஜாஜியின் பார்ப்பனிய வர்ணாஸ்ரமத் திட்டங்களை ஒழிக்கச் செய்தனர். “சூத்திர” மக்களுக்கான ஆட்சியை காமராசர் நடத்தத் தொடங்கினார். கொதித்துப் போன இராஜ கோபலாச்சாரி, 1959இல் ‘சுதந்திரா’ கட்சியைத் தொடங்கி காமராசரை வீழ்த்த வியூகம் வகுத்தார்.
1957இல், 15 சட்டமன்ற தொகுதிகளில் இடம் பெற்ற தி.மு.க. அடுத்து அதிகாரத்துக்கு வர காங்கிரசை எதிர்க்க வேண்டிய நிலையில் இராஜாஜி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. பெரியார் அதைக் கடுமையாக விமர்சித்தார். “இப்போது ஆச்சாரியார் ஆதரவு நிலை எடுத்தாலும், எதிர்காலத்தில் பார்ப்பன எதிர்ப்பு பேசாமல் தமிழ்நாட்டில் நீங்கள் உலவ முடியாது. அப்போது என்னிடம் ஆதரவு கேட்க வரக் கூடும்; நானும்கூட ஆதரவுத் தரலாம்; நினைவில் கொள்ளுங்கள்” என்று எழுதினார். (‘விடுதலை’ 1.1.1962)
ஆச்சாரியார் சுதந்திரா கட்சியைத் தொடங்கியபோதே, “பார்ப்பன சமுதாயம் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; அவரை ஆதரிக்கக் கூடாது” என்று பார்ப்பனர்களுக்கே காமராசர் ஆட்சியைக் காக்க வேண்டுகோள் விடுத்தார். (‘விடுதலை’ 1.1.1962)
அப்போதுதான் முஸ்லிம் லீக், ஆச்சாரியாரை ஆதரிக்க முன் வந்தபோது, “பார்ப்பானுக்கு பயந்து முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்தோம்; அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்; இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு, மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.
“ஏன் இப்படிச் சொல்கின்றேன் என்றால், பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால், அவனது பொய், பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. முஸ்லிம் துரோகம் செய்யக் காரணம் என்ன ? முஸ்லிம்கள் அதை வெளியிட்டு மக்களை திருப்தி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் துரோகக் கூட்டத்திலிருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்” என்று குறிப்பிட்டார்”. (விடுதலை 06.03.1962)
– என்று எழுதினார்.
முஸ்லீம் லீக், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நோக்கமே அவரது இந்த வேண்டுகோளில் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லீம் லீக் என்ற அரசியல் கட்சியினர் ஒரு தவறான அரசியல் நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதிய வரிகளை இஸ்லாமிய சமுதாயத்துக்கே எதிராக சித்தரிப்பது அப்பட்டமான திரிபுவாதம்; உள்நோக்கம்; வஞ்சகம் அல்லவா?
பெரியார் முழக்கம் 13012022 இதழ்