மதம் மாறுதல்

மதம் மாறுதல்

தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்திலிருந்து மாறிவிடுவதாகச் செய்து கொண்ட முடிவையும் நாசிக் மகாநாட்டில் அவரது தலைமையின் கீழ் செய்யப்பட்ட தீர்மானமான ஆதி இந்துக்கள் மதம் மாற வேண்டுமாய்த் தீர்மானித்ததையும், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆதரித்ததையும், குடி அரசில் ஆதரித்தெழுதியதையும் பற்றி சிலர் குறைகூறித் திரிவதாய் தெரிகிறதுடன், ஒரு தோழர் அதை விளக்க வேண்டுமென்று கேட்கும் முறையில் கண்டித்து ஒரு கடிதம் எழுதி ஒரு அணா ஸ்டாம்பும் அனுப்பி இருக்கிறார்.

இதை மதித்து இதற்கு சமாதானம் எழுத வேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று தோன்றினாலும், அதன் பேரில் விஷமப் பிரசாரம் செய்ய சில விஷமிகளுக்கு இடம் இல்லாமல் போகட்டும் என்பதாகக் கருதி நமது அபிப்பிராயத்தை எழுதுகிறோம்.

முதலாவது சுயமரியாதை இயக்கத்தில் எப்படிப்பட்ட தீர்மானங்கள் இருந்தாலும் அவைகள் சிபார்சு செய்யக் கூடியதை தவிர எல்லாத் தீர்மானங்களும் நிர்ப்பந்தமானதும் “”அவைகளை அனுசரிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல. அதில் மெம்பர்களாகவே இருக்கத் தகுதியுடையவர்கள் அல்ல” என்கின்ற அதிகாரமானதுமான தீர்மானமல்ல.

இரண்டாவது சுயமரியாதை இயக்கத்தில் ஆஸ்திகர்களும், நாஸ்திகர் களும் மெம்பர்களாய் இருக்கலாம் என்கின்ற முறை அனுபவத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மூன்றாவது, ஒருவன் இந்து மதத்தை விட்டால் மதமில்லாதவனாகவும், நாஸ்திகனாகவும் தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும் மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை அனுசரிக்கக் கூடாது என்றோ, நாஸ்திகனாக ஆகாவிட்டால் இந்துமதம் தான் மேலானது என்றோ சொல்லக்கூடிய நிபந்தனையுமில்லை.

நான்காவது இந்துமதத்தில் இருந்து வேறு மதத்துக்குப் போவது அல்லது மதம் மாறுவது என்றால் இந்துமதத்தைப் போல ஒரு மூட நம்பிக்கையுள்ள மதத்துக்குப் போவதுதான் என்பது அர்த்தமுமல்ல.

இன்று மதம் என்கின்ற தலைப்பின் கீழ் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், பௌத்தம், பாரசீகம், சீக்கியம், ஆரியசமாஜம், பிரம்மசமாஜம் ஆகியவைகள் வருவது போல், சார்வாக மதம், லோகாயுத மதம், மாயாவாத மதம், சூன்யவாத மதம், பஞ்ச பூத மதம், சங்கர மதம், வேதாந்த மதம், நாஸ்திக மதம் என்கின்ற வார்த்தைகளும், தனது முடிவில் மதத்தைச் சேர்த்துக் கொண்டு தான் வழங்கப்படுகின்றன.

ஒருவன் லோகாயுத மதத்துக்கோ, சார்வாக மதத்துக்கோ, நாஸ்திக மதத்துக்கோ போகிறேன் என்று கருதி இந்துமதத்தை விட்டு மாறுகிறேன் என்றால், அதை ஆதரிப்பதுகூட குற்றமானாலும் ஆகலாம் போல் இருக் கிறது இந்த மதமொழிப்பு வீரர்களுடைய கருத்துப்படி என்று எண்ண வேண்டியிருக்கிறது.

நிற்க நாம் செய்யும் சீர்திருத்தமானது  நமது மதமொழிப்பு உணர்ச்சியானது, சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த தினத்திலேயே பிரசாரம் செய்யப்பட்டுவிடவில்லை. செங்கல்பட்டு மகாநாட்டில் கடவுளுக்கென காசைத் தொலைக்க வேண்டாம் என்றோம். பூஜை அபிஷேகம், ஆராதனை, உற்சவம் ஆகியவைகள் கூடாது என்றோம். ஈரோடு மகாநாட்டில் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதே என்றோம். பிறகு மூன்றாவது விருதுநகர் மகாநாட்டில் மதங்கள்கூட கூடாது என்றோம்.

இப்பொழுது இன்னும் தீவிரமாகப் போக ஆசைப்படுகிறோம். இவைகள் எல்லாம் சுயமரியாதைக்காரர்களுக்குச் சரியாயிருக்கலாம்; சுயமரியாதைக்காரர்களுக்கு உபதேசமும் செய்யலாம்.

ஆனால் அம்பத்காரைப் போன்ற ஒரு ஆஸ்திகர் அல்லது ஏதாவது மதத்தின் பேரால் மனிதன் வாழ்ந்தாக வேண்டும் என்றும் கருதி இருக்கிறவர் களை சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்வது என்று கேட்கின்றோம்.

அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போடுவதா? அல்லது எக்கெதியோ அடைந்து எக்கேடோ கெட்டுப்போ என்று அலக்ஷியமாக விட்டுவிடுவதா என்று கேட்கின்றோம்.

சுயமரியாதைக்காரர்கள் கல்யாண பந்தத்தை  கல்யாண முறையை  கொள்கையை சரி என்று ஒப்புக் கொள்ளுவதில்லை. அவ்வளவோடு மாத்திரமல்ல, இன்னமும் எவ்வளவோ தூரம் போகிறார்கள். பலர் எப்படி எப்படியோ நடக்கிறார்கள்.

அப்படி எல்லாம் இருந்தாலும்கூட அக்கொள்கைகளை லட்சியம் செய்யாமல் இன்று புரோகிதம் மாத்திரமில்லாத அளவில் அதுவும் பார்ப்பனப் புரோகிதம் மாத்திரம் இல்லாத அளவில் சுயமரியாதைக்காரர்கள் எவ்வளவு கல்யாணங்கள் நடத்துகிறார்கள்? தாலி கட்டும் கல்யாணங் களைக்கூட தலைமை வகித்து நடத்திக் கொடுக்கிறார்களே இதன் அருத்தம் என்ன? என்று கேட்கின்றோம். இப்படி இன்னமும் எவ்வளவு நடக்கின்றன?

இவை ஒருபுறமிருக்கட்டும். தீவிர சுயமரியாதைக்காரர் ஒருவரை ஒரு “”பறையன்” கண்டு வணங்கி “”அய்யா எனக்கு சாமியை விட்டுவிட போதிய அறிவோ, தைரியமோ, தியாக புத்தியோ வரவில்லை. ஆனால் எனக்கு இந்த தீண்டத்தகாதவனாய் இருக்க இனி ஒரு நிமிஷம் கூட சகிக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் பார்ப்போம்” என்று கெஞ்சினால் அவனுக்கு இந்த தீவிர சுயமரியாதைக்காரர் அல்லது சுயமரியாதை சமதர்மக்காரர்கள் என்ன பதில் சொல்லுவார்கள் என்று கேட்கின்றோம்.

“”நீ சாமியைவிட தைரியமில்லாதவன் உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். ஆதலால் நீ தீண்டாதவனாகவே இருந்து செத்துப் போ” என்று சொல்லுவார்களா அல்லது “”அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நீ எக்கேடோ கெட்டுப்போ” என்று சொல்லுவார்களா என்று கேட்கின்றோம்.

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பத்காரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம்.

முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம், கடவுள் இருக்கலாம், மூடநம்பிக்கை இருக்கலாம், மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம், சமதர்மமில்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்கு கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர் களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொதுஉடமைக்காரர் களுக்கும் மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற  ஒதுக்கப்பட்டிருக்கின்ற  தாழ்த்தப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம்  தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.

உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம்.

ஏனெனில் அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு “”எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்” என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் “”சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்” என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர் “”இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இஸ்லாம் மார்க்கம் தாண்டவமாடும் துருக்கி, ஈஜீப்ட், பர்ஷியா முதலிய இடங்களில் மூடி கிடையாது என்பதோடு, அம்பத்கார் தமது மனைவிக்கு மூடி போடா விட்டால் எந்த முஸ்லீமும் அவரை கோவிலுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. எப்படி இருந்தாலும் நாம் அதைப் பற்றி இப்போது விவகரிக்க அவசியமில்லை என்று கருதுகிறோம்.

ஆகவே தோழர் அம்பத்கார் மதம் மாறுவதில் எந்த மதம் மாறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. உலகாயுத மதத்தையோ, நாஸ்திக மதத்தையோ தழுவவோ அல்லது முஸ்லீம் மதத்தைத் தழுவவோ போகிறாரோ என்பதும் நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் வெறும் ஏமாற்றமும் சூழ்ச்சியும் கொண்டதும், சண்டாளன், பாவி, இழி குலத்தவன், தீண்டத்தகாதவன் என்று மனிதனை வெறுத்துத் தள்ளுவதும், ஒருவர் உழைப்பை ஒருவர் கொள்ளை கொள்ளுவதுமான காரியங்களை மதக்கட்டளையாகக் கொண்டதுமான இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றால், அதைப் பொருத்தவரையில் முதலில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடையவும் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்.

இந்து மதம் சீர்திருத்தமடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்துமதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்துமதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.

இந்துமதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை. அதை சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்துமத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொருத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொருத்தது அல்ல.

எந்த மகாத்மாவானாலும், சீர்திருத்தக்காரனானாலும், சுவாமி பட்டம் பெற்றவனானாலும், தன்னுடைய சீர்திருத்தத்தை மதம், சாஸ்திரம் அனுமதிக்கிறது என்று வேஷம் போட்டுத்தான் சீர்திருத்தம் செய்ய ஆசைப்படுகிறாரே ஒழிய வேறில்லை.

எந்த வேதமும், எந்த மதமும், சாஸ்திரமும் இந்த மகாத்மாவுக்கும், சுவாமிக்கும் சீர்திருத்தம் செய்ய எங்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. அது வேதத்தின் சாரமான  பகவான் வாக்கான என்று சொல்லப்படும் கீதையிலும், மனு தர்ம சாஸ்திரத்திலும், பராசர் ஸ்மிருதியிலும் பச்சையாய் சொல்லி இருக்கிறது. இவற்றை விவகாரத்துக்கு இடமானது என்று சொல்லிவிட முடியாது. இன்று பொதுஜனங்களை ஏமாற்ற, தற்கால சாந்தியாக சொல்லிக் கொண்டாலும் அந்த முறைக்கும், சாஸ்திரத்துக்கும் மாத்திரமல்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் அரசியல் காப்பளித்துவிட்ட பிறகு இந்த விவகாரத்துக்கு இடமேது என்று கேட்கின்றோம்.

இன்று ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொண்டு நாளைக்கு எந்த ஊர் என்று கேட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

ஆகவே தீண்டாமை விஷயத்தில் இவ்வித குழப்பம், இருவித அருத்தம், சமயம் போல் திருப்பிக் கொள்ளும் சௌகரியம் ஆகியவைகள் இல்லாத மதமே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவர் களுக்கு ஏற்றதாகும் என்பது நமது அபிப்பிராயம்.

வெகு நெருக்கடியான சமயத்தில் அம்பத்கார் இடமும், சிவராஜு இடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொது ஜனங்களிடம் லக்ஷக் கணக்கான பணமும் வசூல் செய்து கொண்டு அதைச் செலவழித்து எலக்ஷனில் வெற்றியும் அடைந்து கொண்டு கடைசியில் தீண்டாமை விலக்கு சம்மந்தமாக சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் தானே இன்று அம்பத்கார் வேறு மதத்துக்குப் போகிறாரே என்று வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறார்கள்?

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அம்பத்கார் வேறு மதத்துக்கு போவதை அனுமதிக்கக்கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா?

இதையெல்லாம் கவனித்தால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆதலால் அம்பத்காருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன் அம் முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமதபிப்பிராயம்.

குடி அரசு  தலையங்கம்  17.11.1935

You may also like...