பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு
பெரியாரிய பெரும் தொண்டர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி நிறுவனர் வே.ஆனைமுத்து நினைவலைகள் வெளியீடு, படத்திறப்பு, கருத்தரங்கம், 02.01.2021 அன்று சென்னை நிருபர் சங்கத்தில் மாலை 3:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் தலைமை வகித்தார்.
முதல் நிகழ்வாக, வே. ஆனைமுத்து உருவப் படத்தை, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் திறந்து வைத்து
வே. ஆனைமுத்து அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா நினைவு மலர் வெளியிட, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றுக்கொண்டார். மலரை வெளியிட்டு உரையாற்றிய ஆ.இராசா, ‘காவியை வீழ்த்த அனைத்து கருப்புச் சட்டைகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று உரையாற்றினார்.
இரண்டாவது அமர்வில், வே.ஆனைமுத்துவின் நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் துரை சித்தார்த்தன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் இரா.திருநாவுக்கரசு வரவேற்புக் கூறினார். தொடர்ந்து, ‘தோழர் வே. ஆனைமுத்துவின் குறி இலக்கான கூட்டாட்சி அமைய…’ என்ற தலைப்பில் தன்னாட்சி தமிழகத்தைச் சேர்ந்த ஆழி செந்தில்நாதன் உரையாற்றினார். இறுதியாக, ‘வகுப்புரிமை போராட்டத்தில் தோழர் வே.ஆனைமுத்து…’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். நிகழ்விற்கு தமிழ்க்களம் இளவரசன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 06012022 இதழ்