நீட் : கிடப்பில் போடும் ஆளுநர்; பா.ஜ.க.-அ.தி.மு.க. இரட்டை வேடம்
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை இரத்து செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஓடிய பிறகும் ஆளுநர் மாளிகை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. முதல்வர் நேரில் சென்றும் அழுத்தம் தந்தும், காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன், நீட் இரத்து கேட்டு தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு நேரிலும் வற்புறுத்தியுள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஏ.கே. ராஜன் குழு நியமன ஆணையை இரத்து செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அடுத்தகட்டமாக தமிழக அனைத்துக் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக டி.ஆர். பாலு இப்போது அறிவித்திருக்கிறார். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் பா.ஜ.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் கையெழுத்திட்ட மறுத்து விட்டது என்ற தகவலையும் டி.ஆர். பாலு தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த இந்த இரண்டு கட்சிகளும் இப்போது திடீர் என்று பல்டி அடித் துள்ளன. குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்தும் உடன்வர மறுத்துள்ளனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று கூறினீர்களே; ஏன் இரத்து செய்ய வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மேடைகளில் நீட்டி முழங்கி வருகிறார். நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என்று குடியரசுத் தலைவர், தமிழக அரசுக்கு தெரிவித்த கருத்தை மக்களுக்கு தெரிவிக்காமலேயே ஓராண்டுக்கு மேல் மூடி மறைத்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதையும் மக்களிடம் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
பெரியார் முழக்கம் 30122021 இதழ்