தஞ்சை மாவட்டம் வடசேரியில் ஜாதிவெறியர்களின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம்.

தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழக தலைவர் அறிக்கை !

தமிழ்நாட்டில் மிகவும் வெளிப்படையாக செயல்படும் ஜாதிவெறி சக்திகள்!
கொஞ்சமும் அச்சமின்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஜாதிவெறியர்கள் !
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தங்கள் ஜாதி வெறியை பரப்ப பயன்படுத்தும் அவலம் !

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கைகளையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாக மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம் பொறியாளர் கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியன், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும் கேட்கும் வகையில் பரப்பினர்.

தற்பொழுது முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பின் நிறுவனர், தலைவர் செங்குட்டுவன் வாண்டையார் எனும் ஜாதி வெறியன் மிகவும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தும், காவல்துறைக்கு சவால் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலிலும் இறங்கி அதனை வாட்ஸ் அப் உரையாடல் மூலம் அனைவருக்கும் பரப்பி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த 20.08.2015 அன்று பட்டுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு, மன்னார்குடிக்கு சென்றார். அப்போது வழியில், தஞ்சை மாவட்டம் வடசேரி என்னும் ஊரில் கொடியேற்றி விட்டு செல்ல திட்டமிட்டு, காவல்துறையிடம் ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்தனர். ஆனால், அன்று பகல் 2 மணிக்கு, திருமாவளவன் வடசேரிக்கு புறப்பட்ட போது, அவர் வடசேரியில் கொடியேற்றுவதை கண்டித்து வடசேரி ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த, 40க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்துள்ளனர். மேலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் ஒரு கும்பல், பயங்கரப் பெட்ரோல் குண்டுகளுடன் திருமாவளவன் அவர்கள் செல்லும் போது, அவர் மீது அந்தக் குண்டுகளை வீச திட்டமிட்டதாக காவல்துறை தெரிவித்து திருமாவளவன் அவர்களை வடசேரி வருவதை போலீஸாரே தடுத்துள்ளனர்.அவரை வேறு வழியில் மன்னார்குடிக்கு காவல்துறை அழைத்து சென்றுள்ளது.

ஏற்கனவே 2010 ல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்ற போது பரவாக்கோட்டை எல்லையில் திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர்.ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்று விட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், அனைத்து உரிமைகளும் சமமாக அனைவருக்கும் உள்ளது எனவும் இந்நாட்டில் யாரும் எங்கும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என சொல்லப்படுகிறது. ஆனால் தோழர் திருமாவளவனை ஒரு ஊருக்கு செல்ல விடாமல் தமிழக காவல்துறையே தடுத்திருப்பது ஜாதிவெறியர்களுக்கு துணை போகும் செயலே. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி பெற்ற வடசேரி எனும் ஊரில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கி அந்நிகழ்சியை நடத்த துணைபுரிவதுதான் காவல்துறையின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் கடமையும், இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் செயலும் ஆகும். ஆனால் மாறாக காவல்துறை இவ்வாறு நடந்திருப்பது தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்திருப்பதையும், ஜாதிவெறியர்கள் சர்வ சுதந்திரமாக செயல்படுவதையும் காட்டுகிறது.
இவ்வளவும் நடந்த பிறகும் தமிழக காவல்துறை செங்குட்டுவன் வாண்டையார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜாதி வெறியர்களுக்கு மீண்டும் மீண்டும் துணைபோகும் செயலாகும்.

இத்தகைய ஜாதி வெறி சக்திகளின் செயல்பாடுகளை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழக அரசு, காவல்துறை இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையிலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்சி நடைபெற பாதுகாப்பு வழங்குவதோடு, துணைநிற்பதுதான் தமிழக காவல்துறையில் மரியாதையை காப்பாற்றும் செயலாகும். இதனை தடுக்கும் ஜாதிவெறியர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திராவிடர் விடுதலைக் கழகம் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவர்களின் உரிமைப்போராட்டத்தில் தொடர்ந்து களத்தில் நிற்கும். தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக ஜனநாயக, இடதுசாரி சக்திகள் ஒன்றிணைத்து போராட முன் வரவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.

கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...

Leave a Reply