வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 1/4
சமீபத்தில் நடந்த ஜெயமோகனின் புத்தகவெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு மலையாள எழுத்தாளர் (பெயர் நினைவில்லை) ஜெயமோகன் குறித்து மலையாளத்தில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்… … ஜெயமோகனேதான். அப்போது அந்த மலையாள எழுத்தாளர் ஒரு நண்டு கதை கூறினார். ஒரு அரசன் ஓவியர் ஒருவரிடம் ஒரு நண்டை வரையுமாறு பணித்தானாம். அதற்கு அந்த ஓவியர் எடுத்துக்கொண்ட காலங்கள் பல ஆண்டுகள். ஏனெனில் செய்நேர்த்தியோடு வரைய வேண்டுமென்பதற்காகவாம். இதைக் கலைஞர்களின் அடையாளமாகச் சொன்னார் அந்த எழுத்தாளர். கதையோ நண்டோ பிரச்சினையில்லை. இதை ஜெயமோகனை வைத்துக்கொண்டு சொன்னதுதான் பிரச்சினை. அந்த அரசன் ஜெயமோகனிடம் நண்டைப் பற்றி எழுதச்சொன்னால் என்ன செய்திருப்பார் ஜெயமோகன்? நண்டு எப்படி தமிழர்களின் பொது உணவாக மாறாமல் போனது, நண்டை உண்பது குறித்த வெறுப்பிற்கும் ‘பிராமண’ எதிர்ப்பிற்கும் உள்ள ஒற்றுமைகள், உணவுச்சமநிலையைக் குலைத்த திராவிட இயக்கத்தின் சதி, குறிப்பாக ‘ஈ.வெ.ரா’வுக்கு அதிலிருந்த பங்கு குறித்தெல்லாம் ஒரே நாளில் 30 பக்கங்களை எழுதிக்குவித்திருக்கமாட்டாரா? அந்த மலையாள எழுத்தாள்ர் ஜெமோவின் முன்னிலையே நண்டு கதை சொன்னதைப் போன்ற நகைச்சுவைதான் கேணி அமைப்பு, ஜெயமோகனுக்கு ‘நம்மால் ஏன் விவாதம் செய்ய முடிவதில்லை” என்று பேச தலைப்பு கொடுத்தது.
ஜெயமோகனிடம் விவாதிக்கும்போது இரண்டு பிரச்சினைகள் வரும். (பல பிரச்சினைகள் வரும் என்பது வேறு விஷயம்)அவர் சொன்ன ஒரு கருத்தை வைத்து நாம் ஒரு கேள்வி எழுப்பினால், அவர் சொல்கிற பதில் நம்மை இரண்டாவது கேள்வி கேட்கத்தூண்டும். முதல்கேள்வி அம்போ என்று நிற்கும். இப்படியாக விவாதத்தைக் கடத்துவதில் ஜெயமோகன் மன்னன். இரண்டாவதாக நாம் ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டாலும் படுவோம், ஜெயமோகன் நிதானமாகவும் தந்திரமாகவும் அவதூறுகளை முன்வைக்கச் சளைக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் நமது உணர்ச்சிவசப்படலையே அவர் தன் ‘நியாயத்திற்கான’ சாதகமாகவும் ஆக்கிக்கொள்வார். வைக்கம் பிரச்சினை விவகாரத்திலும் அதுதான் நடந்தது, நடக்கிறது. முதலில் ஜெயமோகனின் ‘கருத்துக்களை’த் (அவரது வார்த்தைகளிலேயே) தொகுத்துக்கொள்வோம்.
* வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.
*எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்
*வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்
* காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்
*வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.
* (வைக்கம்) போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை
*ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை
பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் வன்மத்துடன் உதிர்க்கும் கருத்துகள் குறித்தும் கட்டியெழுப்ப விரும்பும் பொய்கள் குறித்தும் பின்னால் பேசுவோம். முதலில் வைக்கம் போராட்டம் குறித்து…
ஜெயமோகன் உதிர்க்கும் அவதூறுகள் குறித்து தோழர் தமிழச்சி எழுதியுள்ள பதிவுகளே அவரை மறுக்கப் போதுமானவை.
”ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை” என்கிற வரிகளை எழுதுவதற்கு ஒருவர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரியாத அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சைப்பொய்யைப் பரப்பித் திரியும் அயோக்கியத்தனம் கொண்ட அவதூறுவாதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜெயமோகனின் சிறப்பே இவை இரண்டுமாக இருப்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டபோது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். கேரளக் காங்கிரஸ் நடத்திய ஒரு போராட்டத்திற்கு அண்டை மாநில சக இயக்கத்தலைமையை அழைத்தது என்கிற வரலாற்றுப் புரிதல் கூட தன் வாசகனுக்கு இருக்காது என்பதில் ஜெயமோகனுக்குத்தான் எவ்வளவு அழுத்தமான ‘நம்பிக்கை’?
அந்த அதீத நம்பிக்கையில்தான் “அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை” என்று ஜெயமோகனால் எழுதமுடிகிறது. ஒரு இயக்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எவ்வாறு எந்த அமைப்பின் சார்பும் இல்லாமல கலந்துகொள்ள முடியும்? அப்படி கலந்துகொள்ளவேண்டிய சுயவிருப்பம் அல்லது நிர்ப்பந்தம் பெரியாருக்கு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இன்னொரு நகைச்சுவையைப் பாருங்கள், பெரியாருக்குத் தொண்டர்பின்புலம் இல்லையென்றால் அவர் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதானே அர்த்தம்? தர்க்கம் குறித்தெல்லாம் ஜெயமோகன் பேசுவதை விடவும் அபத்தமானது வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?
மேலும் ”கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று ஜெயமோகன் சொல்லும் பொய்க்கான மறுப்புகளாகத் தோழர் தமிழச்சி கேரளாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசியர் டி.கே.ரவீந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து எழுதியுள்ள ஆய்வுநூல், வைக்கம் போராட்டத்தின் தளகர்த்தாக்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் பெரியார் குறித்து தன் சுயசரிதையில் எழுதியுள்ள விஷயங்கள், வைக்கம் போராட்டத்தை நேரில் பார்த்து பார்வையிட்ட ஆங்கிலேய அதிகாரி சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரியார் குறித்துக் குறிப்பிட்டுள்ளமை, கேரள அரசு வைக்கம் பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரியார் பெயரால் வளைவுகள் அமைத்தது என பல செய்திகளை முன்வைக்கிறார். இதற்கெல்லாம் ஜெயமோகனின் பதில் என்ன தெரியுமா?
“அது ‘அதிகாரபூர்வ’ திக வரலாறு. அதற்கான பதிலாக, உண்மைவிளக்கமாக, மிக அடிப்படையான எளிமையான வரலாற்றுத்தகவல்களைக் கொண்டு என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பின்னணி, நிகழ்ந்த விதம், அதன் தரப்புகள் என்னால் சொல்லப்பட்டிருக்கின்றன” என்பதுதான். தமிழச்சி தரவுகளாக முன்வைத்தது எல்லாம் கேரள ஆளுமைகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரியின் தரவுகள். இது எப்படி ‘அதிகாரப்பூர்வ’ திக வரலாறு ஆகும் என்பது ஒருபுறம் இருக்க, ‘பெரியார் எப்படி வைக்கம் போராட்டத்தில் முக்கியத்துவமில்லாத பத்தோடு பதினொன்று ஆனார்’, ‘பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தின்போது தமிழகத்து அரசியலில் எந்த இடமும் இல்லை, தொண்டர் பின்புலம் இல்லை’, ’எந்த அழைப்பும் தொடர்புமில்லாமல் பெரியார் எப்படி தானாக அனாமத்தாக ரயில் ஏறி வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்’, ‘இன்றைக்கு இருக்கும் திகவைப் போலவே தமிழ்நாட்டு சிவசேனா கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு அல்லது ஜெயமோகன் வாசகர் எண்ணிக்கை அளவுக்கே அவருக்கு இயக்கபலம் இருந்தது’, ‘பெரியார் எங்கே, எப்போது தர்க்கத்தைக் கழற்றிவிட்டு உணர்ச்சியின் மிகைமொழியில் பேசினார்’ என்பதற்கெல்லாம் ஜெயமோகன் எங்கேயும் ஆதாரங்களை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான தலையீட்டைப் பெரியார் முன்வைத்ததை மறுப்பதற்குக் கூட ஜெயமோகன் எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் தமிழச்சி ’யங் இந்தியா’இதழில் காந்தி எழுதியதையும் ஜார்ஜ் ஜோசப் மறுத்து எழுதிய கடிதத்தையும் ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று தெரிய காந்தியின் தொகுப்பு நூல்களிலேயே வைக்கம் போராட்டம் குறித்து காந்தி விரிவாகத் தன் ந்லைப்பாட்டை எழுதியுள்ளார். தயவுசெய்து ஜெயமோகன் வாசகர்கள் அதைப் படித்தால்கூட ஜெமோ எவ்வளவு பெரிய பொய்யர் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
’பெரியார் வைக்கம் போராட்டத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்தவரில்லை’ என்கிற ஜெயமோகனின் பங்கு வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம். தனது வாசகர்கள் எதையும் பரிசோதித்து அறிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவரது ஆணவம், அவர்களது வாசகர்கள் முன் வைக்கப்படும் சவால். பெரியாருக்கு மட்டுமில்லை நாகம்மைக்கும் வைக்கம் போராட்டத்தில் பிரதானப் பங்கு உண்டு. பெரியாருக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கினர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று சத்தியாக்கிரகத்திற்கு பெண்களைத் திரட்டியதோடு மட்டுமில்லாது போராளிகளுக்கான உணவையும் சேகரித்தனர். 1924, மே 20 அன்று அவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தின் விளைவாக நாகம்மையாரும் திருமதி மாதவனும் கைது ஆனார்கள். தான் வாழும் புலம் தாண்டி வந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடிப் போராடிய நாகம்மை என்னும் பெண்ணையும் தான் நம்பிய அரசியலுக்காக குடும்பத்தோடு அர்ப்பணித்த பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையையும் வ்ன்மத்தோடு கொச்சைப்படுத்துவது ஜெயமோகனின் வக்கிரமில்லையா?
‘எந்த முக்கியத்துவமில்லாமல் பத்தோடு பதினொன்றாகப் போராடினா ஈவெரா என்றால் அவரை ஏன் ஆறுமாத காலம் தனிமைச் சிறையில் அதுவும் கால்களில் சங்கிலியோடும் கைதி உடையோடும் சிறைவைப்பார்கள்?’ என்கிற கேள்வி அடிப்படை அறிவுள்ள யாருக்குமே தோன்றுமே, தன் வாசகனுக்கு அது தோன்றாது என்று ஜெயமோகன் கருதியது ஏன்? மேலும் ஒரு ஆதாரம்…
வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம்
“எங்களுக்குச் செய்த உபச்சாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிடவில்லை”. தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விநோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரர் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.
மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும் ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும் அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாக்கிரத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை உடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமாயிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால் ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ளவேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருகின்றார்கள் அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.
மேற்கண்ட உரை, வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய பெரியார் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு. டிசம்பர் 6, 1925 குடியரசு இதழில் வெளியானது. ‘எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒருவரை’ போராட்ட வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் தலைமை உரை ஆற்ற அனுமதிப்பார்களா என்கிற கேள்வியை – பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதாயிருந்தால் – மானமும் அறிவும் அறிவுநாணயமும் உடையவர்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
இறுதியாக, இப்படியான கிடுக்கிப்பிடிக் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் ஜெயமோகனின் சமாளிப்பு இதுவாம், ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியதாக பாடப்புத்தகங்கள் சொல்கின்றன’ என்பது. வைக்கம் போராட்டத்தைத் தான் தொடங்கியதாக பெரியார் எங்கும் சொன்னதில்லை. தான் போலிக்கையெழுத்து போட்டதை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் அறத்துணிவும் பெரியாருக்கு உண்டு. ஜெயமோகன் தான் தனது நேர்மை குறித்த சுயவிசாரணையைத் தொடங்க வேண்டும்.
பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, ’1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குக் கிடைத்தது சுதந்திரம் அல்ல, டொமினியன் அந்தஸ்துதான்’ என்பது தொடங்கி முழு உண்மைகளைச் சொன்னதில்லை. பெரியார் குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’ ஆராய வேண்டும் என்றால் காந்தி குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’யும் ஜெயமோகன் ஆராய வேண்டும். இரண்டாவதாக பாடப்புத்தகங்கள் மூலம் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்கள் எதுவும் எழுப்பப்பட்டதாகச் சொல்லமுடியாது. இன்னும் சொல்லப்போனால் பெரியார் என்னும் கலக ஆளுமையின் பிம்பத்தைக் குறுக்கியமைத்தவையே தமிழ்ப்பாடப்புத்தகங்கள். மேலும் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததையே மறைக்கும் ஜெயமோகனுக்குப் பாடப்புத்தகங்கள் குறித்து விமர்சிக்க யோக்கியதை ஏதாவது இருக்கிறதா?
ஒரு உச்சகட்ட நகைச்சுவை கேளுங்கள், பெரியாரை ‘வைக்கம் வீரராக’ப் பிம்பம் கட்டியமைத்தவை திராவிட இயக்கங்கள், இன்னும் குறிப்பாக திமுக அரசும் அவற்றின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்களும்தான் என்பது அவரது கருத்து. பாவம் ஜெயமோகன், இதுவே அவரது ’வரலாற்று அறிவைக்’ காட்டுகிறது. உண்மையில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியதும் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ பட்டம் அளித்ததும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னைமாகாணக் காங்கிரஸ் மாநாடுதான்.