அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்துகிறது: கணிப்பொறியில் மோசடி செய்து பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு
பீமா கோரேகானில் நடைபெற்ற போரில், மராத்திய பேஷ்வா படைகளை வெற்றி கொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித்துக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
அன்றைய ஆளும் பாஜக அரசோ, சாதி வெறியர்களை கைது செய்யாமல், விழாவில் கலந்து கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட தலித் தலைவர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது.இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த ரோனா வில்சனும் ஒருவராவார். தில்லியில் வசித்து வந்த இவர், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.பில் முடித்து, சர்ரே பல்கலைக்கழகம் அல்லது இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சிக்கான உதவித் தொகை எதிர்பார்த்து காத்திருந்தவர் ஆவார். இவரையும் பீமா கோரேகான் வழக்கில், ‘நகர்ப்புற நக்சலைட்டுக்கள்’ என்று குற்றச்சாட்டி மகாராஷ்டிர பாஜக அரசு கைது செய்தது.
அதாவது, வில்சன் ஒரு மாவோயிச போராளிக்கு கடிதம் எழுதியதாகவும், ஒரு சிக்கலான மாவோயிச சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் தேவை பற்றி விவாதித்ததாகவும், தடைசெய்யப்பட்ட குழுவிடம் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்யும்படி வலியுறுத்தியதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு ஆதாரமாக வில்சனின் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட இ-மெயில் கடிதங்களைத் தாக்கல் செய்தது.தேசிய புலனாய்வு முகமை இவ்வழக்கை தற்போது விசாரித்து வருகிறது.இந்நிலையில்தான், ரோனா வில்சனை கைது செய்வதற்காக புனே போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்பது ‘ஆர்சினல் கன்சல்டிங்’ (ஹசளநயேட ஊடிளேரடவiபே) என்ற அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் மூலம் தெரியவந்துள்ளது.ரோனா வில்சனின் லேப்டாப்பில் இருந்த இ-மெயில் கடிதங்களை வைத்தே போலீசார் அவரைக் கைது செய்திருந்த நிலையில், அந்த கடிதங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியாமலேயே அவரது கணிப்பொறியில் தீய மென்பொருட்களைக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை ‘ஆர்சனல் கன்சல்டிங்’ தனது சைபர்-தடயவியல் பரிசோதனையில் அம்பலப்படுத்தியுள்ளது.
கடிதங்களை பதிவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட மைக்ரோசாப்ட் வேர்டின் புதிய பதிப்புக்கும் வில்சனின் கணினி மைக்ரோசாப்ட் மென்பொருளுக்கும் வேறுபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணினி-யில் வில்சனின் விசை அழுத்தங்கள், கடவுச்சொற்கள் மற்றும் உலாவல் செயல்பாடு பற்றிய பதிவுகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த 10 கடிதங்களும் ரோனா வில்சனால் ஒருமுறை கூட திறந்து பார்க்கப்படவில்லை என்றும், முதன்முறையாக அந்தக் கடிதங்களைத் திறந்து பார்த்ததே போலீசார்தான் என்றும் கண்டறிந்து கூறியுள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சைபர்-தாக்குதலை நடத்தியவர், வில்சனுக்கு மட்டும் குறிவைக்கவில்லை.
நான்கு வருட காலப்பகுதியில் பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களையும் குறிவைத்துள்ளார் என்பதற்கான சேவையகங்கள், ஐபி முகவரிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்புடைய பீமா கோரேகான் வழக்கின் பின்னால் அரங்கேற்றப்பட்டுள்ள சதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த வழக்குமே ஜோடிக்கப்பட்டதுதான் என்று இடதுசாரிகள் – சமூக செயற்பாட்டாளர்கள் இதுநாள் வரை முன்வைத்துவரும் விமர்சனத்தை உண்மையாக்கியுள்ளது.இதனிடையே, ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களைக் காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
பெரியார் முழக்கம் 18022021 இதழ்