170 தொழிலாளர்கள் பலியானது ஏன்?
உத்தரகாண்ட்டில் சூழலைக் கெடுக்கும் மின் திட்டங்களை அனுமதித்ததாலேயே பேரழிவு.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வழக்கத் துக்கு மாறாக உடைந்து உருகியிருக் கிறது. இதன் காரணமாக இரண்டு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. ரேனி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த ரிஷிகங்கா நீர் மின் திட்ட, கட்டுமானங்கள் முழுமையாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். மற்றொரு நீரியல் மின் திட்டமான ‘தபோவன்’ திட்டம் பாதியளவு நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 31 பேர் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப் பட்டுள்ளன. தொழிலாளர்கள் 170 பேர் பலியாகிவிட்டனர். இவர்கள் உ.பி., பீகார் மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள்.
பனிப்பாறைகளைக் கொண்ட பகுதியில் ரிஷி கங்கா மின் திட்டத்தை அமைப்பது கடுமையான இயற்கை சீரழிவுகளை உருவாக்கிவிடும் என்று உள்ளூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். 2019இல் இந்த கிராமத்தைச் சார்ந்த குந்தன் கிங் – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் ஆபத்தான இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனம் திட்டத் துக்கு சுரங்கம் அமைக்க மலைகளை உடைக்க வெடி மருந்துகளைப் பயன்படுத்துவதால் நந்தாதேவி உயிர் வனவிலங்கு சரணாலயத்தையும் பனிப்பாறைகள் மிகுந்த சுற்றுச் சூழலையும் கடுமையாகப் பாதித்து ஆபத்துகளை உருவாக்கிவிடும் என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட் டிருந்தார். திட்டத்தின் கழிவுகள் ரிஷிகங்கா நதியில் கொட்டப்படு வதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனியார் நிறுவனம் பொருட்படுத்தவில்லை. பாறைகளை உடைப்பதற்கு அரசு விதித்துள்ள நெறிமுறைகளும் பின்பற்றப்பட வில்லை என்று மனுதாரர் சுட்டிக் காட்டியிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், பாறைகளை உடைப்பதற்கு வெடி மருந்துகளைப் பயன்படுத்த தடை விதித்ததோடு, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கொண்ட ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கி, திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டது. கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம், சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. மலைகளை உடைத்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்து விட்டது. வழக்கு விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்த கோர விபத்து நடந்து முடிந்துள்ளது.
கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் முழுதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டுள்ளது. 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இமயமலை சுற்றுச் சூழலியல் ஆய்வு மய்யத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், மின் திட்டங்கள் எதையும் இந்தப் பகுதியில் அமைக்க முயல்வது கடும் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரித்திருந்தனர். ஆனால் அரசு இந்த எச்சரிக்கையை மீறி திட்டங் களுக்கு அனுமதித் தந்தது என்று மூத்த விஞ்ஞானி பிரதீப் சிறீவத்சவா ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட் டுள்ளார்.
பெரியார் முழக்கம் 11022021 இதழ்