தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம்.

ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம்.

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது.

அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம்.

பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும் தெரிவித்ததோடு, தமிழ்நாடு விழா நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு, கல்வி நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இதனை கொண்டாடுவதற்கான ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோளையும் முன்வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பத்து நாட்களுக்கு முன்னதாக ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தோம்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பியக்கத் தலைவர்கள் அனைவரும் இந்த வேண்டுகோளை  முன்வைத்து தனித்தனியாகக் கடிதங்களை எழுதி இருந்தார்கள்.

தமிழ்நாடு அரசு நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாடலாம் என்று முடிவு எடுத்திருந்தாலும், தமிழ்நாடு காவல்துறை சில சட்டப்பிரிவின் கீழ் அதை குற்றம் என்று இப்போது சில இடங்களில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிலும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தமிழ்நாட்டில் எங்கும் கொண்டாடக்கூடாது என்று ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் சேர்த்து ஆணை பிறப்பித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு அல்லாமல் வேறு யாருடைய ஆணையின் கீழ் தமிழ்நாடு காவல்துறை இயங்குகிறது என்ற ஐயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதுவும் ஒரு காவல் ஆய்வாளர் தனது எல்லைக்குள் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் எங்கும் கொண்டாடக்கூடாது என்று சொல்லுமளவுக்கு அவருக்கு யாரோ ஒருவர் சிறப்பு அதிகாரம் கொடுத்து இருக்கிறார்கள்  போலிருக்கிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசின் உள்துறை, தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் ஆகியோர் இப்படிப்பட்ட தான்தோன்றித்தனமான போக்குகளை உரிய நடவடிக்கையின் வழியாக தடுக்க வேண்டும் என்று  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அல்லது தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல் வழியாகவே இது நடக்கிறது என்றால் தமிழ்நாடு அரசு அதை வெளிப்படையாய் அறிவித்திட வேண்டும்  என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

தோழமையுடன்,
*ஒருங்கிணைப்பாளர்கள்,*
*பெரியாரிய உணர்வாளரகள் கூட்டமைப்பு.*
29-10-2020

பின் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் அரசாணை,
திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளரின் குறிப்பானை ஆகியவற்றையும் கீழே இணைத்திருக்கிறோம்.

You may also like...