திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது.

தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர்

சிறுவர் சிறுமிகளுக்கு மட்டு மல்லாமல் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை  சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தமிழர் திருவிழாவை இணைந்து பங்கேற்று வெற்றிக் கொண்டாட் டங்களில் மகிழ்ந்தனர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு பின் 3 மணிக்கு துவங்கிய பெரியவர்களுக்கான போட்டி மாலை 6 மணி வரை நடந்தது.

மேடை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு மாஸ்கோ நகர் பகுதி குழந்தைகளின் நடனங்களுடன் தொடங்கியது. பகுத்தறிவு பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்வித்தனர். சோழன் பன்முக கலையகம் சார்பில் பள்ளி மாணவர்களின் சிலம்பம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளை நிகழ்த் தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அனைவருக்கும் புத்தகம் மற்றும் நினைவு பரிசை வழங்கினார்

தொடர்ச்சியாக புதுகை பூபாளம் கலைக் குழுவினர் நையாண்டி தர்பார் சமகால அரசியல் நிகழ்வுகளை பகுத்தறிவு பார்வையில் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வண்ணம் நடத்தினர். இடையிடையே பாடல்களோடு தமிழகம் மத்திய மாநில அரசுகளால் வஞ்சிக்கப்படுவதையும், திருவள்ளுவர் விழா அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும் முக்கியத்துவத்தைப் பாடல்களாக பாடினர். கடவுள் பேரால் அடிமைப்படுத்தி சிந்திக்க கூடாதென்று வைத்துள்ள வரலாற்றினை எடுத்துக்கூறி மக்களை பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை கேட்க வேண்டிய நோக்கத்தை நையாண்டியோடு எடுத்து சொன்னார்கள் குழுவினர். மாஸ்கோ நகர் பெரியார் திடலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து தொடங்கிய மேடை நிகழ்வை மாநகர் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். சரண்யா வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் சந்திரா, கோமதி, மகாலட்சுமி, முத்துலட்சுமி, தேன்மொழி, மாரியம்மாள் மற்றும் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாண்டியநாதன் தொடக்க உரையோடு, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் கழகப் பொருளாளர் துரைசாமி திருவள்ளுவர் விழாவின் நோக்கத்தினை எடுத்துரைத்தார்கள்.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில தவைமைக் குழு உறுப்பினர்கள்  காவை ஈஸ்வரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வம், பரிமளராசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். தைப் புத்தாண்டின் வரலாற்றையும், திருவள்ளுவரை தன்வயப்படுத்தி கவர நினைக்கும் மதவாத சக்திகளின் சதிகளையும் விளக்கினார். திருக்குறள் மாநாடு நடத்தி தந்தை பெரியார் எவ்வாறு திருவள்ளுவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார் என்பதை விளக்கியதோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடெங்கும் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற முழக்கத்தோடு நடத்திவரும் பொங்கல் விழாவினை திருப்பூரில் அனைத்து அரசியல்கட்சி தோழமைகளோடு மக்கள் விழாவாக நடத்தியதை மகிழ்வோடு பாராட்டினார்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியதோடு, புதுகை பூபாளம் குழுவினர்களுக்கும் நினைவு பரிசை கழகத் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கழக தோழர்களும் வழங்கினர்.

நிகழ்வின் இறுதியாக திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பில் கழகத் தலைவருக்கு நினைவுப் பரிசினை தோழர்கள் வழங்கினர். தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு, சேலம், கோவை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருந்து தோழர்கள் வந்து நிகழ்வை சிறப்பித்தனர்.                  செய்தி : விஜயகுமார்

கொளத்தூரில் : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்   23.1.2020 அன்று கொளத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் விழா பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத் தில் கு. சூரியகுமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர்  வரவேற்புரையாற்றினார். கொளத்தூர் நகர செயலாளர் சி. ராமமூர்த்தி  தலைமையில் கூட்டம் துவங்கியது. முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் மற்றும் கழகத் தோழர் சரவண பரத் ஆகியோர் உரைக்குப் பின்,  நாஞ்சில் சம்பத், கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக  காவை இளவரசன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் காவலாண் டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், லக்கம்பட்டி, உக்கம் பருத்திக்காடு, குருவரெட்டியூர், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து கழகத் தோழர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

மேட்டூரில் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. படிப்பகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. படிப்பக நுழைவாயில் முன்பு அலங்கார வளைவுகளும் பதாகைகளும் வைக்கப்பட்டது. படிப்பகத்தின் அருகில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியினை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். பின்பு படிப்பகத்தில் பொங்கல் கரும்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் பறை முழக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது மக்களும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்பாக ஏற்பாடு செய்தது.

பெரியார் முழக்கம் 30012020 இதழ்

You may also like...