தலையங்கம் ஆளுநரின் “சண்டித்தனம்”
பாஜக ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அனைவருமே பாஜக அல்லாத ஆட்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடும் சட்ட விரோத செயல்பாடுகளில், கூச்ச நாச்சமின்றி செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ள இந்தியா சர்வதேச பார்வையில் அவமானப்பட்டுக் கிடக்கிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இப்போது பாஜக கூட்டணி கட்சியினராலேயே கடும் கன்டனத்திற்கு உள்ளாகி வருகிறார். நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 7.5 விழுக்காடு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அதற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஆளுநர். சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பதாகக் கூறுகிறார். நீட் தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநர் தரப்பு விளக்கத்தைக் கேட்டு அவரது செயலாளருக்கு ‘தாக்கீது’ அனுப்பியுள்ளது. வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி கிருபாகரன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையே என்று நீதிமன்றத்திற்குள்ளேயே கண்கலங்கி இருக்கிறார். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கும் ஒப்புதல் தரவில்லை. தாங்கள் ஒன்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் இல்லை என்று பேசும் பாஜகவினர் ஆளுநரின் இந்த அடாவடியை சுட்டிக்காட்டக் கூட தயாராக இல்லை.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்கே உண்டு. இந்த உரிமையைப் பறித்து ஆளுநரே துணை வேந்தர்களை ஆர்.எஸ்.எஸ். காரர்களாக தேடிப்பிடித்து நியமித்து வருகிறார். தமிழக கல்விச் சூழலுக்கு எதிரான “மனுவாதி”களாகவே இந்த ஆளுநர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா. அண்ணா பல்கலைக் கழகத்தை ‘உயர் புகழ்’ நிலைக்கு உயர்த்தப் போவதாக அவர் கூறிக்கொண்டு தன்னிச்சையாக அவர் செயல்பட்டு வருகிறார். தமிழக அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் நேரடியாக மத்திய மனிதவள அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார். இந்த பிரச்சனை குறித்து ஆராய தமிழக அமைச்சரவையும் குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை தமிழக அரசுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதைப் பற்றியெல்லாம் துணைவேந்தர் சூரப்பா கவலைப்படவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு நிலை பெறுவதற்காக ஆகும் செலவிற்கான நிதியை தானே திரட்டிக் கொள்வதாகவும் தன்னிச்சையாக அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார். சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக போன்ற பாஜக கூட்டணிக் கட்சிகளே வலியுறுத்துகின்றன. இராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளான ஏழு தமிழர்களின் தண்டனையைக் குறைத்து, தமிழக அமைச்சரவை அதற்குரிய அதிகாரமான 161 ஆம் பிரிவின்படி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கோப்பு அப்படியே ஆளுநர் மாளிகை அலமாரியில் தூசி படிந்து கிடக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் கதையோ இன்னும் மோசம். மாநிலத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோயில்களின் திறப்பை தள்ளிப்போட்டு வருகிறார். இது அரசு நிர்வாக ரீதியாக எடுத்த ஒரு முடிவு. ஆனால் இம்முடிவு, அம்மாநில ஆளுநராக இருக்கும் ‘பகத்சிங் கோஷ்யாரி’ க்கு உறுத்துகிறது. கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று மாநில முதல்வரை மிரட்டி கடிதமே எழுதுகிறார். காரணம் சிவசேனா இப்போது பாஜக கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறது. அரசியல் சட்டப்படி செயல்பட வேண்டிய ஆளுநர் பாஜக மாநிலத் தலைவராகவே மாறி நிற்கிறார். சொல்லப்போனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சகிக்க முடியாமல் மகாராஷ்டிரா ஆளுநரின் இந்த முடிவை குறை கூறியதோடு இப்படி ஒரு கடிதம் எழுதியதை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ‘மகாராஷ்டிரா மாநில முதல்வர் இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டு மதச்சார்பின்மை கொள்கைக்கு மாறிவிட்டாரா ?’ என்று கடிதம் மூலம் ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளர் போல் கேட்கிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று உறுதியேற்று பதவிக்கு வந்த ஒரு ஆளுநர் மதச்சார்பற்ற கொள்கையே சட்ட விரோத கொள்கை என்பது போல் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்கிறார் என்றால் இந்த நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? இதே ஆளுநர் கோஷ்யாரி கோவா மாநிலத்துக்கும் ஆளுநர்; அங்கே கூட இன்னும் கோயில்கள் மூடப் பட்டுத் தான் இருக்கின்றன. கோவாவில் நடப்பது பாஜக ஆட்சி. ஆனால் அம்மாநில முதல்வருக்கு கோயிலை ஏன் திறக்கவில்லை என்று கேட்டு கடிதம் எழுதுவதற்கு கோஷ்யாரி தயாராக இல்லை. இது அவரது இரட்டை வேடத்தையே காட்டுகிறது. கோஷ்யாரியின் இந்த கடிதத்திற்கு பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கத்தை ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில் (அக்டோபர் 18, 2020) பத்திரிக்கையாளர் ‘அனிதா கட்யால்’ வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தியிருக்கிறார். “மகாராஷ்டிரா ஆளுநர் அந்த பதவியிலிருந்து உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவிக்கு மாறுவதற்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் இதுவே இந்த கடிதத்தின் அரசியல் பின்னணி, அதற்கான திரை மறைவு வேலைகளில் கோஷ்யாரி ஈடுபட்டு வருகிறார் என்கிறது அக்கட்டுரை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக முதல்வராக இருக்கும் ‘திரிவேந்திரா சிங் ராவத்’ மீது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. அவரை விரைவில் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. காரணம் அம்மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான இந்து கோவில்களான, பத்ரிநாத் கமலேஸ்வரர் போன்ற 15 கோயில்களை பார்ப்பன தனியார் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டின் கீழ் ராவத் கொண்டு வந்து விட்டார். அதற்கான சட்டத்தையும் அவர் இயற்றிவிட்டார். இது அம்மாநிலத்தில் உள்ள பாஜகவினருக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர் மீது கடுமையான கோபத்தை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணி சாமி உள்ளிட்ட சில பாஜகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு பார்ப்பன கொள்ளைக் கூடாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கை. இதற்கு நேர்மாறாக பாஜக கட்சியைச் சார்ந்த முதல்வரே செயல்பட்டார் என்ற நிலையில் தான் அவருடைய பதவி பறிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ‘கோயில்களை காப்பாற்றுவதற்காக நான் ஒருவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறேன்’ என்பதாக கட்சி மேலிடத்துக்கு காட்டுவதற்காக முதல்வர் பதவியை குறிவைத்து இந்த கடிதத்தை கோஷ்வாரி எழுதி இருக்கிறார்.
மோடியின் ஆட்சியில் ஆளுநர்கள் நேரடியாக முதலமைச்சராகிறார்கள், கட்சித் தலைவர்கள் ஆளுநர் களாக மாறுகிறார்கள், ஓய்வு பெற்ற ஆர்.எஸ்எஸ் காரர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள், இந்த நிலையில் ஆளுநர் பதவியே வேண்டாம் என்று ஒரு காலத்தில் திராவிடர் இயக்கம் வலியுறுத்திய முழக்கத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. “ஆட்டுக்குத் தாடி தேவையில்லை, அதேபோல் மாநிலத்திற்கும் ஆளுநர் தேவையில்லை” என்பதே திராவிட கட்சிகளின் முழக்கமாக இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆளுநர்களாக இருந்தவர்கள் மாகாணங்களை கண்காணிக்கும் கங்காணிகளாகவே செயல்பட்டார்கள். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில ஆளுநர்கள் கங்காணிகளாக செயல்படக்கூடாது என்ற கருத்து எழுந்தது. அதன் காரணமாக மாநில ஆளுநர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அந்த கருத்து பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு சொந்த மாநிலத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆளுநராக வருவார் என்று சொன்னால் அம்மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய ஆபத்து உருவாகிவிடும் என்று அஞ்சி அன்று அரசியல் சபையில் செல்வாக்குடன் இருந்த நேரு போன்ற வடநாட்டுத் தலைவர்கள் இந்த முடிவை கைவிட செய்தார்கள். மத்திய அரசின் கங்காணிகள் என்று இருந்த ஆளுநர் பதவி பாஜக ஆட்சியில் மேலும் தரம் தாழ்ந்து, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் தொண்டர் படையாகவே மாறிப் போய் நிற்கிறது. எதிர்க்கட்சிகளை முடக்குவது; மோதலை உருவாக்குவது என்று சண்டித்தனம் செய்வதே ஆளுநர்களின் அன்றாட சட்டக் கடமையாகி விட்டது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டிய நிலையை இந்த ஆளுநர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
பெரியார் முழக்கம் 22102020 இதழ்