தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?
‘சுதந்திரம் பெற்ற நாளை மட்டுமல்ல, குடியரசு நாளையும் தமிழருக்கு துக்க நாள் தான் என்று பெரியார் அறிவித்தார். இந்திய அரசியலமைப்பு மாநிலங்களின் கூட்டமைப்பே ‘இந்தியா’ என்று கூறினாலும் நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை.
குடியரசு நாள் அணி வகுப்பில் நாட்டின் ஆயுத பலத்தை பிற நாடுகளுக்கு உணர்த்தும் நவீன ஆயுதங்களின் அணி வகுப்பு நடக்கிறது. ஆனால், ‘குடியரசு’ சட்டம் அங்கீகரித்துள்ள இறையாண்மை கொண்ட மாநிலங்கள் அவமதிக்கப் படுகின்றன.
‘இந்தியா’வின் சுதந்திரப் போராட்டம் – 75’ என்ற தலைப்பில் சுதந்திர இந்தியாவின் ‘சாதனைகளை’ முன் வைத்து பேரணி நடத்த முடிவு செய்தது ஒன்றிய ஆட்சி. தமிழ்நாடு அரசு குடியரசு நாள் பேரணிக்காக தமிழ்நாட்டில் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடியவர்களை அடையாளப் படுத்தும் ஊர்தியை வடிவமைத்தது. ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சார்ந்த வரலாறு தெரியாத நிபுணர்கள் குழு இதை பரிசீலித்தது. அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது.
கடந்த செப்டம்பரில் இருந்து நான்கு முறை நிபுணர் குழு கூடியது. மூன்று கூட்டங்களில் பங்கேற்ற தமிழக அரசு அதிகாரிகள் ‘நிபுணர் குழு’ வற்புறுத்திய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, ஊர்திகளை வடிவமைத்தனர். நான்காவது கூட்டத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் அழைக்கப்படாமலேயே தமிழ்நாடு அரசு ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு வெளி வந்து விட்டது.
தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களாக வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் தேர்வு செய்யப் பட்டனர். பாரதி சுதந்திரப் போராட்ட வீரரா என்ற கேள்வி இருந்தாலும் இப்போது அதை முன் வைத்து இப் பிரச்சினையைப் பார்ப்பது சரியான அணுகுமுறையாகாது. இதிலே முதன்மையானக் கண்ணோட்டம் தமிழ்நாட்டின் இறையாண்மையை தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை ஒன்றிய பார்ப்பன ஆட்சி அவமதித்திருக்கிறது என்பதுதான். இந்த நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்துகிறது. ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநில ஊர்திகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கருநாடக அரசு ஊர்தி மட்டும் தென்னகத்திலிருந்து தேர்வு செய்யப்பட் டுள்ளது. நேதாஜி, இரவீந்திரநாத் தாகூர் இடம் பெற்ற மேற்கு வங்க ஊர்திகளுக்கும், கேரள சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு இடம் பெற்றுள்ள ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அம்மாநில முதல்வர்கள் பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். நாராயண குரு அவமதிக்கப்பட்டு விட்டார் என்று கருநாடக மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர்கள் சீத்தாராமய்யா, குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தமிழ்நாடு உள்பட பல மாநில ஊர்திகள் இடம் பெறாமலே குடியரசு தின அணி வகுப்புகள் நடந்திருக்கின்றன என்றும் இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்குமிடையே பாகுபாடு காட்டி வருகிறது என்ற பின்னணியில் தான் இப்பிரச்சினையை அணுக முடியும். பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிடம் ஒன்றிய ஆட்சியின் அணுகுமுறை நேர்மையோ அறம் சார்ந்தோ இருந்தது இல்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு, தடுப்பு ஊசி ஒதுக்கீடு பேரிடர் நிவாரண ஒதுக்கீடுகளில் வெளிப்படையான ‘பாகுபாடு’களை கூச்சநாச்சமின்றி காட்டி வருகிற ஒன்றிய ஆட்சி இப்பிரச்சினையில் ‘நடைமுறை’ காரணங்களைக் காட்டி தன்னை நியாயப்படுத்துவதை எவருமே ஏற்க மாட்டார்கள்.
குடியரசு தின அணி வகுப்பு என்றால் அனைத்து மாநிலங் களுக்கான பங்களிப்பும் அதில் இடம் பெறுவதே கூட்டாட்சிக்கான அடிப்படை. ஒன்றிய ஆட்சியின் ‘சாதனை’களாக வெளிச்சம் போடும் ஊர்திகளையும் ‘இராணுவ வலிமையை’ உணர்த்தும் ஊர்திகளையும் இதற்காகக் குறைத்துக் கொள்ளக் கூடாதா? மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு என்று ஒன்று இருக்கவே முடியாது. மாநிலங்களுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள். ஒன்றிய ஆட்சிக்கு மக்கள் இல்லை. அதுவும் பாதுகாப்புத் துறையில் அதிகாரிகளாக இருக்கும் வரலாறு தெரியாத ‘நிபுணர்கள்’ இந்த முடிவுகளை எடுப்பது தான் அவலம். “வ.உ.சி. கப்பல் வணிகம் செய்தவர்; வேலு நாச்சியார் யார் என்று வெளிநாட்டுக்காரர் களுக்கே தெரியாது” என்றெல்லாம் வாய்க் கொழுப்புடன் குழுவில் கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள்.
வெளிநாட்டுக்காரர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றால், இந்தியாவில் மோடி ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்களை குத்தகைக்கு எடுத்த தொழிலதிபர்களின் உருவங்களைத்தான் அலங்கரித்து எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். 40 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று விடுதலையாகி வறுமையில் வாடி உயிரிழந்த வ.உ.சியை, அதுவும் ‘சுதேசி’ கொள்கையை முழங்கிய வ.உ.சி.யை இவர்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்?
‘குடியரசு நாள் தமிழருக்கு துக்க நாள்’ என்று குடியரசு நாள் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே பெரியார் கூறிய கருத்தின் ஆழம், தொலைநோக்குப் பார்வையை இப்போதாவது தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் முழக்கம் 20012022 இதழ்