வினா – விடை
- எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளே அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடியும்.
– அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி
அதோடு நிறுத்திடாதீங்க… எடப்பாடியை முதலமைச்சராக ஏற்கும் வாக்காளர்கள் மட்டுமே இனி தமிழ் நாட்டில் இடம் பெற முடியும்னு ஒரே போடா போட்டுடுங்க!
- மோடி தனது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாங்கியுள்ள புதிய விமானத்தின் விலை ரூ.8500 கோடி. – செய்தி
விமானத்துக்குள்ளேயே யோகா நடத்தலாம்; மயிலுக்குத் தீனி போடலாம்; தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தையே கூட்டி மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றும் வசதி எல்லாம் இருக்கும் போலிருக்கு!
- யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இரண்டே நாளில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்று குரலை மாற்றிக் கொண்டார். – செய்தி
எதுக்கு இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க; எங்க கூட்டணி எப்போதுமே அந்தந்த மாநில ஆளுநர்களுடன் தான் என்று ஒரே வரியில் முடிச்சுடுங்க.
- கொரானா பரவுவதால் மதப் பண்டிகைகளை பாதுகாப்புடன் மக்கள் கொண்டாட வேண்டும். – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
ஆமாம், பகவானுக்கு படையல் போடும்போது முகக்கவசம் போடுங்கள்; தீபார்த்தனை செய்யும்போது சானிட்டைசர் கொண்டு கை கழுவுங்கள்; ‘பகவான்’களிடமிருந்து இடைவெளிவிட்டு தூரத்தில் நின்று நமஸ்காரம் செய்யுங்கள்; ‘பகவான்’ தொற்றுக்கும் இன்னும் தடுப்பூசியை வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிக்கவில்லை சார்; ஜாக்கிரதைங்கோ…
- உச்சநீதி மன்ற நீதிபதி எம்.வி. ரமணா, ஆந்திர அரசுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்க ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் செல்வாக்கு செலுத்துகிறார்.
– ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகார்
நல்லது; நீதிபதி ரமணா பதவி ஓய்வு பெற்ற அடுத்த நாள் ‘எம்.பி.’ பதவி உறுதியாகி விட்டது!
- வயது அதிகரிக்க அதிகரிக்க சிந்தனையில் மாற்றம் வரத்தான் செய்யும்.
– பா.ஜ.க.வின் இணைந்த குஷ்பு
அப்ப அடுத்த இரண்டு வருஷத்துல வேறு சிந்தனைக்கு போயிடுவீங்களா?
- கிராமப்புற மக்களுக்கு கடன் வாங்க சொத்து அட்டை.
-மோடி அறிவிப்பு
ஆண்டுக்கு 15 இலட்சம் வங்கியில் போடுவேன்னு சொன்னீங்க; இப்ப கடன் வாங்குறதுக்கு அட்டை கொடுக்கிறீங்க!
பெரியார் முழக்கம் 15102020 இதழ்