விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (5) பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து:
இந்திரா காந்தி பிரதமராகிறார். பிரதமர் ஆனவுடன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை என்ன எழுதுகிறதென்றால், ‘பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததே தேவையில்லாத ஏமாற்றுத்தனமான முயற்சி. ஓட்டுரிமை அளிக்கக் கூடாது. It is becoming clear that the Female franchise is unnecessary duplicate of effort. பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது போலித்தனமான முயற்சி’ என்று எழுதினார்கள். ஏனென்றால் அப்போது இந்திரா காந்தி பிரதமரானார். கணவர் இறந்த பின்பு கணவர் இல்லாத பெண்மணியாக அவர் இருக்கிறார். 1966 ஜனவரி 30 அன்று ஆர்கனைசர் ஒரு தலையங்கத்தைத் தீட்டியது. அதில் ஆர்.எஸ்.எஸ். தனது கருத்தைப் பதிவு செய்தது. ‘நான் ஒரு இந்து. எனவே அமங்கலமான தீய சகுனத்தை ஏற்றுக்கொண்டு அழிவை தேடிக் கொள்ள முடியாது. நான் ஏராளமான சரித்திரத்தைப் படித்திருக்கிறேன், எங்கெல்லாம் பெண்கள் ஆட்சி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அறிவு மலிவும், ஒழுக்கக் கேடுகளும், சீரழிவுகளுமே அரங்கேறியிருக் கின்றன’ இப்படித்தான் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை எழுதியது. இன்றைக்கு இஸ்லாமிய பெண்களுக்கு வேண்டுமானால் முத்தலாக்கிற்கு குரல் கொடுப்பார்களே தவிர, இந்து பெண்கள் சபரி மலை கோவிலுக்குள் நுழைவதற்கு உரிமை அளிக்க மாட்டார்கள். பெண்கள் என்றாலே ‘சம உரிமைக்கு தகுதியற்றவர்கள்’ என்பது தான் அவர்களுடைய கோட்பாடு.
இரண்டாவது வர்ணாஸ்ரம தர்மம் அதை ஆதரிப்பதாக கோல்வாக்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல வர்ணாஸ்ரம தர்மம் ஏற்படுத்தியிருக்கிற ஜாதியமைப்பு நமக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் அவருடைய கருத்தாக உள்ளது. Bunch of thoughts நூலில் அவருடைய மொழியிலேயே நான் படித்துக் காட்டுகிறேன், ‘History proves that Mohammedans could win over the northeast easily. வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் எளிமையாக வெற்றி பெற்று விட்டார்கள். ஏன் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொன்னால்? Buddhism has shatterd the pattern of the caste system. அந்த பகுதிகளில் புத்தமதம் தோன்றி ஜாதியமைப்பை நிலைகுலைய செய்துவிட்டது. ஜாதியமைப்பு நிலைகுலைந்து போனதனால் இஸ்லாமியர்கள் அந்த தேசத்தை எளிமையாக பிடித்து விட்டார்கள். But contrary to this அதற்கு மாறாக The Hindu religion was strong in Delhi and Uttarpradesh. உத்திரபிரதேசம், டெல்லியில் இந்து மதம் வலிமையாக இருந்தது. Despite the Muslim rule. முஸ்லிம் ஆட்சி நடந்த பின்பும் கூட இந்து மதம் வலிமையாக இருந்தது. Because the caste system strictly followed there. ஜாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்ற முடிந்ததன் காரணமாகத்தான் நாம் இந்துமதத்தைப் காப்பாற்ற முடிந்தது என்று கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்.
இவர்கள் மாநில உரிமைகளுக்கும் எதிரான வர்கள். இந்தியா எனும் கோட்பாட்டை எதிர்க் கிறவர்கள். வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கிறவர்கள். சமஸ்கிருதம்தான் இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள். இவ்வளவும் இந்திய மக்களுக்கு எதிரான கொள்கைகளை வைத்துக் கொண்டு இந்த நாட்டை காப்பாற்ற வந்த புனிதர்களைப் போல பேசிக் கொண்டுள்ளனர்.
வரலாற்றைப் பார்த்தோமானால், 1829 சதி உடன்கட்டை ஏறுதல். கனவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு சாகடிப்பது. வில்லியம் பெண்டிங் காலத்தில் தடை செய்யப் பட்டது. வைதீக மதமும், வேத மதமும் இந்தத் தடையைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது அவர்கள் என்ன விளக்கம் கொடுத்தார்களென்றால் கணவன் இறந்து மனைவி தானாக முன்வந்து கணவனுடன் உடன்கட்டை ஏறி மோட்சத்திற்கு போவதை நாம் எப்படித் தடுப்பது? இப்படித்தான் கூறினார்கள். அதாவது பெண்ணாக இருக்கிறவர்கள் படிப்பதற்கு உரிமையில்லை, சுதந்திரமாய் வாழ உரிமையில்லை, விரும்புகிற ஆணைத் திருமணம் செய்து கொள்ள உரிமையில்லை, ஆனால் கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏற மட்டும் தாராள உரிமை உள்ளது என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
அடுத்து விதவை மறுமணம். திருமணமாகி கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்து கொள்ளலாம் என்று 1856இல் இந்து திருமண சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்த பார்ப்பனர்கள் என்ன கூறினார்களென்றால், ‘கிருத்தவர்கள் இதில் தலையிட்டு இந்து தர்மத்தை குலைக்கிறார்கள்’ என்று அன்று பார்ப்பன சமூகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த சமூகத்தில் இருந்த ஜி.சுப்பிரமணி அய்யர் தனது மகளுக்கு விதவைத் திருமணம் செய்து வைத்தார் என்ற காரணத்திற்காக அவரை ‘பிராமண’ சமூகத்தி லிருந்தே விலக்கி வைத்தார்கள். சட்டம் இயற்றப் பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்பு தான் 1881இல் முதல் விதவைத் திருமணம் நடந்தது.
அடுத்து பால்ய விவாகம். குழந்தைத் திருமணம் செய்து வைப்பது சாஸ்திரத்திற்கு எதிரானது. ஏன் மனைவியர்களை நெருப்பில் தள்ளி சாகடித்தார்கள்? ஏன் குழந்தைத் திருமணம்? இதற்கு பின்னும் ஒரு கருத்து இருக்கிறது. குழந்தைக்கே திருமணம் செய்தால் வர்ணக் கலப்பு இருக்காது. வேறொரு வர்ணத்தில் கலப்பு ஏற்படாது. ஒரு வேளை கணவன் இறந்த பின்பு அவர்களை நெருப்பில் தள்ளி (உடன்கட்டை) கொன்றுவிட்டால் வர்ணக் கலப்பு ஏற்படாது. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து விட்டால் ஒரே வர்ணத்துக்குள் பெற்றோர்களே துணையைத் தேடி வைத்து விடலாம். இதற்காகத்தான் இவை இரண்டையும் பார்ப்பனர்கள் கொண்டு வந்தார்கள். அப்போது அதை ஒழிக்கவும் எதிர்த்தார்கள். ‘தேவதாசி’ முறை இருந்தது. 1920களில் காங்கிரசில் இருந்த சத்தியமூர்த்தி அய்யர் கூட, ‘நாங்கள் சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போனாலும் போவோமே தவிர சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்திற்குப் போக மாட்டோம்’ என்று அவர் சொன்ன காலமும் இருந்தது.
இந்து இந்து என்று சொல்கிறார்களே அந்த இந்து என்ற சொல்லுக்கு இவர்கள் எத்தகைய வரையறையை வைத்திருக்கிறார்கள்? அவர்களிடம் அதற்கான வரையறை என்ன இருந்தது என்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. முதன் முதலில் ‘இந்து’ என்று வரையறுத்தது யார் என்பதில் குழப்பம். எது கடவுள் என்பதிலும் அவர்களுக்கு குழப்பம். திட்ட வட்டமான வரையறை எதுவும் அவர்களுக்கு கிடையாது. இந்து என்றால் யார்? என்பதை நிரூபிப்பதற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது? யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிருத்துவர்கள் இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்கள் தான் இந்துக்கள் என்று எழுதியிருக்கிறது.
முதன் முதலில் பார்ப்பனர்களெல்லாம் சேர்ந்து 1828இல் உருவாக்கியது பிரம்ம சமாஜம் என்ற ராஜா ராம் மோகன்ராய் ஏற்படுத்திய அமைப்பு. அவர், சிலை வணக்கம் கூடாது. பல கடவுள் பழக்கம் கூடாது போன்ற கருத்தைத் தான் முன் வைக்கிறார். அடுத்து 1875இல் ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதியால் தோற்றுவிக்கப்படுகிறது. அவர் என்ன சொல்கிறார், சிலை வணக்கம் வேண்டாம், ஆனால் அனைவரும் ஒரே ஜாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டு வருகிறார்.
அதன் பிறகு பஞ்சாப் இந்து சபை வருகிறது. இது இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்கிறது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பஞ்சாப் இந்து சபை ஆகிய அமைப்புகளில் இஸ்லாமிய வெறுப்புகளே இல்லை. சிலை வழிபாடுகளும் இல்லை. அதன் பிறகு 1915 இல் இந்து மகா சபை தோற்றுவிக்கப்படுகிறது. இது இந்து ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது. இந்து ஒற்றுமையைப் பற்றி பேசுகிறபோதுகூட அதில் அவர்கள் இஸ்லாமிய வெறுப்பை சேர்த்துக் கொள்ளவில்லை. பிறகு எப்போது இஸ்லாமியம் எதிர்ப்பு வருகிறது என்று சொன்னால், 1921ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் ஒரு சென்செஸ் கணக்கெடுக்கிறார்கள். அப்போது அவர்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று தனித் தனியாக கணக்கெடுக்கிறார்கள். கணக்கெடுப்பின் போது பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை இந்தியாவோடு இருக்கிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24 விழுக்காடு ஆகிவிடுகிறது. அப்போது, பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிக் காரர்களுடைய மக்கள் தொகையை விட இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, எனவே தீண்டப்படாத மக்களை இந்து மதத்திற்குள் சேர்த்துக் கொள்ள லாமா? என்ற விவாதம் அப்போது நடக்கிறது. இந்து மகாசபையின் ஒரு பிரிவு தீண்டத்தகாதவர்களை சேர்க்கக் கூடாது என்கிறார்கள். மற்றொரு பிரிவோ நமது மக்கள் தொகை எண்ணிக்கையில் அதிகமாக இருக்க வேண்டும் அதனால் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அதன்பிறகு 1924ஆம் ஆண்டு அலகாபாத்தில் இந்து மகா சபை ஒரு மாநாட்டை கூட்டுகிறது. அந்த மாநாட்டில், ‘தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளி, கோவில், பொது நீர் குழாய்களை பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் ஆனாலும் அவர்களுக்கு பூணூல் அணிவிப்பதும், வேதம் கற்றுக் கொடுப்பதும் இந்து மதத்திற்கு எதிரானது’ என்ற நிபந்தனையுடன் தான் பார்ப்பனர்கள் தீண்டத்தகாத மக்களை எண்ணிக்கைக்காக இந்து மதத்தில் பட்டியலில் சேர்க்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், ‘நான்கு வர்ணத்தை வைத்து விட்டீர்கள் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்னு பிரித்து பஞ்சமர்களை அவர்ணஸ்தர்கள் அதாவது வர்ணமற்றவர்கள் என்று நீயே பிரித்து வைத்திவிட்டு ஏன் எங்களை இந்து மதத்தில் சேர்க்கிறாய்?’ என்று கேட்டார். எனவே இப்படியொரு நிபந்தனையுடன் தான் பஞ்சமர்களை இந்து மதத்தில் பட்டியலில் சேர்த்தார்கள்.
1924ஆம் ஆண்டு மாநாட்டில். முதலில் பாய் பிரம்மனந்தார் பிறகு சாவர்க்கர் ஆகியோர் தான் பாகிஸ்தான் என்பது இஸ்லாமியர்களுக்கான நாடு இந்தியா இந்துக்களுக்கான நாடு இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கே சென்றுவிட வேண்டும் இங்கே அங்கே இருக்கும் இந்துக்கள் இங்கே வந்து விட வேண்டும் என்று முதலில் கூறியதே இந்த இருவரும்தான். அதன் பிறகு தான் ஜின்னா தனிநாடு கோரிக்கையே கேட்டார். இதே கண்ணோட்டத் தோடு தான் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான் நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை உண்டு என்கிறார்கள். முடிந்த வரை இங்குள்ள இஸ்லாமியர்களை ஏதேனும் காரணம் காட்டி ஆவணங்கள் இல்லை என்று கூறி நாடற்றவர்களாக்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மதம் ஆட்சி செய்யும் நாடுகளில் நாத்திகர்கள் பாதிக்கப்படு கிறார்கள். அவர்களுக்கும் இங்கே வந்தால் குடி யுரிமை இல்லை என்று கூறுகிறது, இந்தச் சட்டம். எனவே அப்பட்டமான பொய்களையும், உளறல் களையும் அவர்கள் CAA வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது. ஒன்று, பார்ப்பனர்கள் இந்தியா, இரண்டு பார்ப்பனரல்லாத மக்களுடைய இந்தியா என்று இரண்டாக இன்றைக்கு பிரிந்து கொண்டு நிற்கிறது.
இந்தியாவைப் பார்ப்பன இந்தியாவாக மாற்ற இந்து இராஷ்டிரத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள். அதற்காக இஸ்லாமியர்களை தனிமைப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வலைக்குள் சிக்காத பார்ப்பனரல்லாத இளைஞர்கள், மதசார்பற்ற கட்சிகள், எதிர்த்து போராடுகிறார்கள். பார்ப்பனர்கள் இந்து இராஷ்டிரத்தை அமைக்க அவர்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். வர்ணாஸ்ரமப் படி நீ சூத்திரன், பஞ்சமன் என்று ஒதுக்கினார்கள். அதேபோல் தற்போது பார்ப்பன இந்தியாவாக மாற்ற இந்து இராஷ்டிரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் பார்ப்பன இந்தியாவா? பார்ப்பன ரல்லாதோர் இந்தியாவா? என்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையான வரலாற்றை பார்ப்போமானால் இந்த நாட்டில் யார் அந்நியர்கள்? கைபர் போலன் கணவாய் வழியே இந்த நாட்டில் குடியேறி இந்த நாட்டின் சிந்து சமவெளி மக்களின் திராவிட கலாச்சாரத்தை அழித்து ஆரிய கலாச்சாரத்தின் கீழ் வர்ணாஸ்ரம தர்மத்தை கொண்டு வந்து அவர்களை ஜாதிகளாக பிரித்து இந்துக்கள் என்று அறிவித்து நான் தான் உனக்கு தலைமை தாங்குவேன் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் நீ அடிமையாக வாழ வேண்டும் என று அதிகாரத்தை தன் கையில். எடுத்து சிறுபான்மை கூட்டமாக இருக்கிற பார்ப்பனர்கள் தான் வரலாற்று ரீதியாக வெளியேற்றப்பட வேண்டிய அந்நியர்கள்!
அதைத் தான் பெரியார் இயக்கம் ஒரு காலத்தில் பேசியது பாப்பானே வெளியேறு என்ற முழக்கத்தை ஒரு காலத்தில் முன்வைத்தது. ஆனால் இப்போது ஒரு நாடு உருவாகி விட்டது எல்லைகள் உருவாகிவிட்டன. கோல்வாக்கர் போன்று எல்லைகளைப் பற்றிக் கவலைப்படாதே என்று முட்டாள்தனமாகப் பேச நாம் தயாராக இல்லை. எல்லைகள் உருவாகிவிட்டது. நீ பார்ப்பானாக இந்த நாட்டிற்குள் வந்தாய், எங்களை அடிமையாக்கினாய், இதற்கு பிறகும் கூட இந்து என்று கூறுகிறாய். இந்துக்களுக்குள் ஜாதிகளை ஏன் வேண்டாம் என்று கூறுவதில்லை? இந்து என்று கூறுகிறாய், இந்து பெண்களுக்கு ஏன் சம உரிமை அளிக்க மறுக்கிறாய்? இந்து என்று கூறுகிறாய் ஏன் ஒரு மாநிலத்தினுடைய மொழி, இன அடையாளங்களை ஏற்க மறுக்கிறாய்? இப்படி கேள்விகளை கேட்டாலும் இந்து இந்து என்று தான் சொல்கிறார்களே தவிர எந்த பதிலும் இல்லை. இந்து என்று கூறி பார்ப்பனர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் இந்து இராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பார்ப்பனரல்லாத இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பெரியார் காட்டிய பாதையில் பார்ப்பானே நீ தான் அந்நியன், நீ தான் இந்த நாட்டில் சமூகத்தை கூறு போட்டவன், நீ தான் இன்றுவரை எங்களது கலாச்சாரத்துடன் ஒட்டி வாழாமல் இருப்பவன் என்று நாங்கள் பேச வேண்டிய நிலையை நீயே உருவாக்குகிறாய்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் எங்களது நண்பர்கள் தலித் மக்களை இந்துக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட நீ எதிர்ப்பு தெரிவித்தவன், இன்றைக்கும் ஊர் வேறு சேரி வேறென்று பிரித்து வைத்திருக் கிறவன், உணவு முறையில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடிய மக்களை அடித்தே சாகடிக்கிறாய். நான் சொன்னால்தான் கடவுள் கேட்கும் என்று மந்திரத்தை உருவாக்கி அதை மற்றவன் ஏற்றுக் கொண்டு கைகட்டி நிற்க வேண்டும் என்று சொல்கிறாய், கோவிலுக்குள் வந்தால் சூத்திரன், தீண்டத்தகாதவன் வந்துவிட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். இதுவரை இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேனென்று எந்த இந்துவாவது, பா.ஜ.க.காரனாவது, சங்பரிவாரங்களை சேர்ந்தவர்களாவது எந்த பார்ப்பனராவது கூறியிருக்கிறார்களா?
‘இந்து ராஜ்யம்’ உருவாக்க, இஸ்லாமியர்களை அன்னியர்களாக்கிக் காட்ட வேண்டும் என்ற உள் நோக்கத்துடனேயே இப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடுகள் வேகம் வேகமாக அமுல்படுத்தப்படுகின்றன என்றார் விடுதலை இராசேந்திரன். (நிறைவு)
பெரியார் முழக்கம் 13022020 இதழ்