‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’
வீரம் பேசி விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பதற்குக்கூட ஒரு ‘வீரம்’ வேண்டும்; “அடிச்சிட்டல்ல; இப்ப… நான் எப்படி வேகமாக ஓடுறேன்னு மட்டும் பாரு…” என்று வடிவேலு ஒரு படத்தில் வீரத்துடன் கூறுவார். அப்போது வடிவேலு எடுத்த ஓட்டம் கூட – “சும்மா… சாதா ரகம் தான் இப்போது நம்ம பா.ஜ.க. ‘ஜீ’க்கள் எடுக்கும் ஓட்டம் இருக்கே… அப்பப்பா… ‘இதை தலைதெறிக்க’ ஓடும் ஓட்டம் என்றும் கூறலாம்.
கடந்த வாரம் தான் பொன். ராதா கிருஷ்ணன், ‘நானும் அரசியலில்தான் இருக்கேன்’ என்று அடையாளப்படுத்த, ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். “நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது; அது தி.மு.க.வாகக்கூட இருக்கலாம்” என்றார். அவ்வளவுதான்; “பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணியா” என்று தொலைக்காட்சிகள் ‘அரட்டை கச்சேரி’களை (அதற்கு விவாதம் என்றும் பொருள் கூறலாம்) நடத்தி முடித்து விட்டன. கூட்டணியில் பா.ஜ.க.வுக்காக 60 இடங்களைப் பெறுவோம் என்றார், ஒரு ‘ஜி’; யார் முதல்வர் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றார் மற்றொரு ‘ஜி’. ஒவ்வொரு ‘ஜி’யின் உளறல்களுக்கும் உடனுக்குடன் ஊடகங்களில் விவாதம்; காதில் புகையே வந்து விட்டது!
இப்போது எதற்கு இந்தக் கதையெல்லாம் என்று கேட்கிறீர்களா? ‘வீரம்’ பேசிய ஒவ்வொரு ‘ஜி’யும் இப்போது காவித் துண்டை முகக் கவசமாக்கி வாயை மூடிக் கொண்டுள்ளார்கள். சன்னமாக முகக் கவசத்தை விலக்கிக் கொண்டு மெல்லிய குரலில் ஒரே ‘சுருதி’யில் பேசுகிறார்கள். அது என்ன தெரியுமா?
கூட்டணி அ.இ.அ.தி.மு.க.வுடன்தான் என்கிறார்கள் – அத்தனை ‘ஜி’க்களும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான்” என்கிறார்கள்.
‘கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்’ என்று மூச்சுமுட்ட முழங்கினீர்களே அது என்ன ஆச்சு? காற்றோடு கலந்து விட்டதா ஜி? என்று கேட்டுப் பாருங்கள். பதில் சொல்ல மாட்டார்கள். ரஜினி, பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று காவிக் கம்பளம் விரித்து அதில் தாமரைப்படம் போட்டு மஞ்சள் குங்குமத்துடன் ஆரத்தியுடன் காத்திருத்தீர்களே, அது என்னவாச்சு? என்று கேட்டுப் பாருங்கள்; பதில் கூற மாட்டார்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் ‘திரும்பத் திரும்ப’ பேசுகிறார்கள்; “நாங்கள் தமிழ்நாட்டில் பலமாக வளர்ந்து விட்டோம். எங்களை அசைக்க முடியாது; காவல்துறை தேடும் குற்றப் பட்டியலில் இருப்பவர்கள்; ஏற்கனவே கொலை, கொள்ளை மோசடிகளில் ஈடுபட்ட நேர்மையான இந்து ஆன்மிகவாதிகளை தேடிப் பிடித்து கட்சியில் சேர்த்து வருகிறோம்; அது மட்டுமா? சினிமாவில் ஓய்வு பெற்ற முன்னாள் நடிகை நடிகர்கள் எல்லாம் எங்கள் கட்சிக்கு வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை ஒரு ‘ரவுண்டு’ அடித்தாலே போதும் ஓட்டுகளை அள்ளி விடுவார்கள் என்று ‘திரும்பத் திரும்ப’ பேசுகிறார்கள். இவையெல்லாம் சும்மா ‘வெத்து வேட்டு’ என்பது தமிழக அரசியலைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே புரியும்.
ஆனால், ‘ஜி’க்கள் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் ஒரு ‘பலம்’ அவர்கள் கூட்டணியில் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நீதிமன்றங்கள், சி.பி.அய்., அமுலாக்கத் துறை, வருமான வரித் துறை, எல்லாவற்றையும் விட தேர்தல் ஆணையம் என்ற அமைப்புகளை தங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறார்கள் இது ‘இராமன் சத்தியமான’ உண்மை. அதுமட்டுமா? சீனா ஒழிக; பாகிஸ்தான் ஒழிக; டிரம்ப் வாழ்க’ என்ற ‘தேசபக்த’ முழக்கங்களும் மாபெரும் சக்தியாக அவர்களிடம் கூடுதலாகவே இருக்கிறது.
அதெல்லாம் சரிதான்; இவ்வளவு வலிமையான பலம் ஏன் தமிழகக் கட்சிகளுக்குத் தெரியவில்லை? நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காத்திருக்கிறோம் என்று தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள சுமார் 500 அரசியல் கட்சிகளில் ஒரு ‘லெட்டர்பேட்’ கட்சி கூட இதுவரை அறிவிக்கவில்லையே? பா.ஜ.க.வின் கதவைத் தட்டவில்லையே? ஏதோ, கூட்டணியில் இடம் பிடிக்க போட்டிப் போட்டுக் கொண்டு கியுவில் நிற்பதுபோல பாசாங்கு செய்கிறீர்களே?” என்று கேட்டுப் பாருங்கள் பதிலே வராது.
‘பாரத் மாதாக் கிஜே’ – ‘ஸ்ரீராம பகவானுக்கு ஜே’ என்று கூவிக் கொண்டே ஓடுவார்கள். எப்படி ஓடுறேன்னு மட்டும் பாரு… என்று வடிவேலு ‘ஸ்டைலில்’ இருக்கும் அந்த ஓட்டம்.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 15102020 இதழ்