முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !
முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !
___________________________________
அன்பார்ந்த தோழர்களே!
வணக்கம்.
நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர்.
அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும், அன்னூர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே கடை வைத்துள்ள நந்தகுமார் என்பவர் மீது புகார் அளித்தும், வழக்கும் பதிவு செய்யவில்லை; கைதும் நடக்கவில்லை
அதன் காரணமாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் புலிகள் கட்சி, சமூக நீதிக்கட்சி, தலித் விடுதலைக் கட்சி போன்ற அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் 22.07.2020 அன்று மாலை அன்னூர் காவல் நிலையத்தின் முன் திரண்டு காவல்துறையினரின் பக்க சார்பான நடவடிக்கையைக் கண்டித்ததுடன், தோழர் சண்முகசுந்திரத்தின் மீது பதிந்ததைப் போல பாஜக நிர்வாகி நந்தகுமார் மீதும், வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் கோரிக்கைக்கு உரிய பலன் இல்லாத காரணத்தால், அனைவருமாக சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் வேறு வழியில்லாமல் தோழர் சண்முகநாதன் மீது போட்ட அதே பிரிவுகளின்கீழ் வழக்கினை, அவ்வழக்குக்கு அடுத்த குற்ற எண்ணாகப் பதிவு செய்ததோடு, அந்நபரை கைது செய்வதாக உறுதி அளித்ததால் சாலை மறியலை தோழர்கள் கைவிட்டுள்ளார்கள். இன்று ஒருநாள் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாஜக நந்தகுமாரை கைது செய்யாவிடில் நாளை மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகள், தமிழகத்தில் இயங்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும், முற்போக்கு செயல்பாட்டாளர்களுக்கும் புதிய இயங்குமுறை ஒன்றை முன்வைத்துள்ளதாகவே நாம் உணர்கிறோம்.
நம் அனைவருக்கும் இது ஒரு புதிய செய்தி இல்லைதான்; ஆனால் உரிய அளவில் எதிர்வினை ஆற்றப்படாத செய்தி என்பதை நாம் மறக்கலாகாது.
பெரியாரிய, அம்பேத்கரிய,மார்க்சிய அமைப்புகளின் முகநூல் பதிவுகளிலும் காணொளிகளிலும் உள்நுழைந்து, இந்துத்துவவாதிகளும்,தமிழ்த் தூய்மைவாதிகளும்,ஜாதி ஆணவவாத சங்கிகளும் பின்னூட்டம் என்ற பெயரில் மிகக் கேவலமான, தரம் தாழ்ந்த, ஆபாசப் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் நாமோ இதுவரை அவர்கள் தரம் இவ்வளவுதான்; அவர்கள் தலைமைகளின் பயிற்றுவிப்பு இவ்வளவுதான் என கடந்து சென்று கொண்டே இருந்துள்ளோம். இந்த போக்குகளால் ஏதோ நாமெல்லாம் அவர்கள் பதிவை ‘சரிதான்’ என்று ஏற்றுக் கொண்டதாகக் கருதி, ஊக்கம் பெற்ற அந்த நபர்கள் மேலும் மேலும் கீழ்த்தரமான பதிவுகளை, மிக உற்சாகத்தோடு தனி நபர் குறித்தும், அவர்கள் குடும்பத்து பெண்கள் குறித்தும் கீழ்த்தரமான பதிவுகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறார்கள்.
அதேவேளையில் நமது தரப்பிலிருந்து யாரொருவர் அவர்களைப்போலக் கூட இல்லாமல், விமர்சன பூர்வமாக பதிவிட்டாலும் இந்துத்துவ அமைப்பினர் தமிழ்நாடெங்கும் புகார் மனுக்களை அளிக்கிறார்கள். நமது தமிழ்நாடு அரசினரும் ” உத்தரவு மகாராஜா” எனும் பாணியில் மின்னல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். காவல் துறையினரோ தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி என்பது போல், சட்டம், விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு வரம்பு மீறி நடந்து கொள்ளுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களைக் காவல் நிலையத்துக்கு கொண்டு போய் அடைத்து வைப்பது, நண்பர்கள் குழாமை மிரட்டுவது, நள்ளிரவு வேளைகளில் அந்த பகுதியைச் சேர்ந்த எல்லா வீடுகளிலும் உள்நுழைந்து தேடுவது என்ற பெயரால் அச்சுறுத்துவது என நாலுகால் பாய்ச்சலில் செயல்படுகிறார்கள்.
அந்த வகையில்தான் கறுப்பர் கூட்டம் காணொளிகள் அனைத்தையும் அதிரடியாய் நீக்குவது போன்று வரம்பு மீறி காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர்.
நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில முன்வைப்புகளை அனைவரின் பரிசீலனைக்கும் கொண்டுவரவே இதனை எழுதுகிறேன்.
இனி முகநூல் பதிவுகளிலோ அல்லது வேறு வகையிலோ நமது செயல்பாட்டையும், நமது தலைவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் இழிவாகவும் பொய்யாகவும் ஆன செய்திகளை இந்துத்துவ, தமிழ் பாசிச, சாதிய சக்திகள் பதிவிட்டால் அவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, அவற்றை நகலெடுத்து இணைத்து குற்றம் இழைத்தவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை இயன்ற அளவு சேகரித்து, வன்முறையை தூண்டும் நோக்கத்தோடும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வன்மத்தோடும் வேண்டுமென்றே தீய உள்நோக்கத்தோடு செயல்படுபவர்கள் மீது முடிந்தவரை அமைப்புகளில் புகார் மனுக்களை கொடுத்தாக வேண்டும். ( முடிந்தவரை அமைப்பின் கடிதத் தாளில்)
பெரும்பாலான காவல் நிலையங்களில், உதவி ஆய்வாளர் இல்லை; ஆய்வாளர் இல்லை; வெளியே சென்று இருக்கிறார்; சாப்பிட சென்று இருக்கிறார்; ரவுண்ட்ஸ் போயிருக்கிறார்; நீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று புகாரை வாங்காமல் அலைக்கழிப்பார்கள். நீங்கள் விரும்பினால் ஓரிருமுறை காவல் நிலையம் செல்லலாம்; இல்லையெனில் அந்த புகார் மனுவை (இணைப்புகளையும்) இந்த நாளில், இந்திந்த நேரங்களில், புகார் அளிக்க வந்திருந்தோம்; இன்னார் இன்ன காரணத்தைக் கூறி வாங்க மறுத்துவிட்டார் என்ற ஒரு இணைப்பு கடிதத்துடன் உள்ளூர் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கும் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அஞ்சலில் அனுப்பி வையுங்கள். முடிந்தால் மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம்.
காவல்துறையிலும் ஆங்காங்கே சில நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். புகார் மனு ஒருவேளை பெற்றுக்கொள்ளப்பட்டால் மனுவைப் பெற்றுக்கொண்டதற்கான இரசீதை ( CSR) கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் பத்து, பதினைந்து நாட்கள் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைகள் ஆகியவை நடைபெறாவிட்டால் குற்றஞ்சாட்டப்பட்ட வரையும், காவல்நிலைய அதிகாரியையும் எதிர் மனுதாரராக குறிப்பிட்டு, குற்றவியல் நடுவர் மன்றத்தில் தனிவழக்கு ( Private Complaint) பதிவு செய்து சட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்பதே நமது உடனடி வேலைத் திட்டமாக எடுத்து செயலாற்ற வேண்டும் என கழகத் தோழர்களையும் ஜனநாயக சக்திகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகார் அளிப்பதையே சில மாதங்களுக்கு முழுநேர வேலைத் திட்டமாக வைத்துக் கொண்டால் மட்டும்தான் இந்து, தமிழ், ஜாதி சங்கிகளை நம்மால் நாகரீக மனிதர்களாகவோ, சிறைக் கைதிகளாகவோ ஆக்கமுடியும்; தமிழ்நாட்டு அரசியல் வெளியும் கொஞ்சம் தூய்மை பெறும்.
காவல் நிலையங்களில் புகார்கள் குவியட்டும்!
காவல்துறையும், அரசினரும் தங்கள் விருப்பம்போல் இனி நடக்கமுடியாது; சட்டங்கள் என்ற ஒன்று இருக்கின்றதாம்; ஏதோ விதிகள் என்று இருக்கின்றனவாம்; அனைவரும் உரிமை பெற்ற மானுடர்கள்தானாம்; மனித உரிமை, நீதிமன்றம் எல்லாம்கூட இருக்கின்றதாம், என்பனவற்றை அறிவதற்கான வாய்ப்பினை நம்மைப் போன்றவர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
உடனே செயல்படுங்கள்!
விரைந்து செயல் படுங்கள்!
ஒத்த கருத்துள்ளோரை இணைத்தும், இணைந்தும் செயல்படுங்கள்!
நன்றி.
கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
22.07.2020.